பகவத்கீதையும் திருக்குறளும் - 34
காலம் மாறிடுச்சுவிடுமுறை என்பதால் தாத்தாவின் வீட்டுக்கு வந்தான் கந்தன். வழக்கம் போல தன் சந்தேகத்தை கேட்டான். ''ஏன் தாத்தா முன்பு நிறைய முனிவர்கள், சித்தர்கள் இருந்தாங்க? இப்ப ஏன் அந்த மாதிரி யாரையும் பார்க்க முடியல? இதற்கு விடை பகவத் கீதை, திருக்குறளில் இருக்கா?'' எனக் கேட்டான். 'காலம் மாறிப் போச்சே' என சிரித்த தாத்தா தொடர்ந்தார். ''நேற்று போல இன்று இல்லை. நாளை எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. இது காலத்தால் வந்த மாற்றமே தவிர வேறொன்றும் இல்லை. தவம் செய்வோருக்கு தேவையான தகுதிகளைப் பற்றி கீதையும், திருக்குறளும் சொல்கின்றன. அதற்கு முன் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன். துறவி ஒருவருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தார் ஒரு பணக்காரர். அங்கு எலித்தொல்லை தாங்க முடியவில்லை. அதற்காகப் பூனை ஒன்றை வளர்த்தார் துறவி. அதன் உணவு (பால்) தேவைக்காக மாடு ஒன்றை தானமாக பெற்றார். மாட்டை பராமரிக்க பணியாளர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது மனைவி, குழந்தைகளும் துறவியின் குடிலுக்கு வந்து சேர்ந்தனர். இப்படி தனியாக இருந்த துறவிக்கு, ஒன்றன் பின் ஒன்றாக தேவையும், உறவுகளும் நாளடைவில் முளைத்தன. இது துறவு ஆகுமா... என கதையை முடித்த தாத்தா கீதையின் 18ம் அத்தியாயம் 49 வது வரியைச் சொன்னார். அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்பரிஹ: |நைஷ்கர்ம்யசித்திம் பரமாம் சன்னியாசேனாதிகச்ச்தி || 18.49||பற்றற்ற நிலையில் உள்ளவர்கள், மன பக்குவம் கொண்டவர்கள், துறவால் ஆசையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டவர்கள் எல்லாச் செயல்களில் இருந்து விடுபட்டு விடுதலை என்னும் பூரணநிலையை அடைவார்கள். இதை 344 வது திருக்குறள், இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. என்கிறது. தவம் செய்தவற்கு பற்று இல்லாமல் இருக்க வேண்டும். பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயக்கம் ஏற்படுவதற்கான வழி. ஆசையை துாக்கி எறிந்து விட்டால் எதுவும் நமக்கு தேவைப்படாது. அந்த நபர் அல்லது பொருள் இல்லாமல் நாம் வாழ முடியும்.இப்பயிற்சி முதலில் கடினமாக தான் இருக்கும். ஆனால் ஒன்றை உதறி பழகிய பிறகு இன்னொன்றை எளிதாக விட்டு விட முடியும். முதல் தடவை வேண்டாம் என மறுப்பது தான் கஷ்டம். இப்படி பத்து, பதினைந்து நாளைக்கு வேண்டுமானால் சிரமமாக இருக்கும். அதன் பின் வேண்டாம் என எளிதாக சொல்ல முடியும். ஆனால் ஒன்றின் மீது ஆசை வைத்தால் அது மயக்கத்தை உண்டாக்கும். அதுவே மறுபடியும் அந்த ஆசையை வளரச் செய்யும். அதனால் வேண்டாம் என ஒரு பொருளை, செயலை, பழக்கத்தை முற்றிலும் கை விட்டால் அது மறைந்து விடும். அதற்குரிய பொறுமை, விடாமுயற்சி இல்லாதவன் அயோக்கியனாக, பேராசை பிடித்தவனாக மாறி விடுவான். அதனால் தான் இந்த கலிகாலத்தில் முனிவர்கள், யோகிகளை பார்க்க முடியவில்லை'' என பெருமூச்சு விட்டார் தாத்தா. -தொடரும்எல்.ராதிகா97894 50554