பாரதியாரின் ஆத்திசூடி - 7
தேசத்தைக் காத்தல் செய்இன்று சுதந்திர தினம். பாரதியார் புதிய ஆத்திசூடியில் 'தேசத்தைக் காத்தல் செய்' என்கிறார். தேசம் அவருக்கு மனதிலே கண்ணாக இருக்கிறது. பாஞ்சாலி சபதம் உருவானது இந்த பாரத தேசத்தை நினைத்துத் தான். அதே போல அவ்வையார் தேசத்தோடு ஒட்டி வாழ் என பாடியதை, பாரதியார் தேசத்தைக் காத்தல் செய் என்கிறார். 'எல்லோரும் அமைதியாக வாழும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்' என பாரத சமுதாயம் பற்றிய கவிதையில் முழங்குகிறார். உலகில் அமைதி தவழ வேண்டுமானால் பாரதம் உலகத் தலைமை கொள்ள வேண்டும் என்பது பாரதியாரின் எண்ணம். பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்பாரத நாடுஞானத்திலே பர மோனத்திலே - உயர்மானத்திலே அன்ன தானத்திலேகானத்திலே அமுதாக நிறைந்தகவிதையிலே உயர் நாடுஎன்றெல்லாம் பெருமை கொண்டார். இந்த சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்தவர்கள் உடமையைப் பறி கொடுத்தவர்கள் குடும்பத்தை இழந்தவர்கள், குழந்தைகளைக் கவனிக்காமல் போனவர்கள், தாய் தந்தையை விட்டுச் சென்றவர்கள், நன்றாக படித்திருந்தும் நல்ல பணியில் இருந்தும் எல்லாவற்றையும் இழந்தவர்கள் என்றெல்லாம் நாம் பார்த்தால் எண்ணற்ற தலைவர்கள், போராளிகள் இருந்திருக்கிறார்கள். தேசியக்கொடி ஏற்றப்படும் கயிறு சாதாரண கயிறல்ல... அது தேசப் போராளிகளின் மனைவிமார்களின் மாங்கல்யம். வியாபாரம் என்ற நோக்கிலே பின்வாசல் வழியாக வந்த ஆங்கிலேயர் சூழ்ச்சி, வஞ்சகம் மூலம் இந்த தேசத்தைச் சீரழித்தனர்.இன்றைய நாளில் வரலாற்றை புரட்டி பார்த்தால்தான், நாம் எப்படி தேசத்தைக் காக்க வேண்டும் என்பது புரியும். கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் என எத்தனை பேர் அவனை எதிர்த்தவர்கள்? 1799ல் மனித வெடிகுண்டாக பலர் வெள்ளைக்காரனின் ராணுவ கிடங்கில் பாய்ந்து அதை அழித்திருக்கிறார்கள். காளையார்கோவிலில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் 1801ல் நடத்திய புரட்சி முதல் சுதந்திரப் போர் எனலாம்.தியாகி செண்பகராமன் பிள்ளை அந்த காலத்திலேயே ஜெர்மனி சென்றவர். 'எம்டன்' கப்பலில் இந்தியாவிற்கு வந்து சென்னை கடற்கரையில் இருந்து குண்டு வீசியவர். ஆங்கில அரசுக்கு எதிராக இந்தியாவுக்கு வெளியிலே இருந்து அரசு அமைத்தவர். 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை தேசத்திற்குத் தந்தவர். ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர். சுப்ரமணிய சிவா - இவரின் பேச்சு, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம். வடக்கே திலகர், தெற்கே சிவா, பசும்பொன் தேவர் இவர்களுக்கெல்லாம் வெள்ளையன் வாய்ப்பூட்டு போட்டான். சிறையில் சுப்ரமணிய சிவாவுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றிப் படித்தால் கண்களில் நீர் தளும்பும். வ.உ.சி.,யுடன் இருந்த இவருக்கும் கொடுமையான சிறைவாசம் பரிசானது.பாடல்கள் எழுதியதற்காகவும் நாடகம் நடித்ததற்காகவும் 29 முறை சிறை சென்றவர் தியாகி விஸ்வநாத தாஸ். மகாத்மா காந்தி அவரை பாராட்டி இருக்கிறார். 'கொக்கு பறக்குதடி பாப்பா; வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா; வர்த்தகம் செய்ய வந்த கொக்கு; வாழ்வை கெடுத்த கொக்கு!' என பாடினார். அரசு, இவரது நாடகங்களை தடை செய்து சிறையில் அடைத்தது. மகன் பாடினான். அவனையும் சிறையில் அடைத்தது. 52 வயதிலேயே நாட்டுக்காக உயிர் துறந்தார். இன்னொரு போராளி 44 வயதே வாழ்ந்தவர்; அதுவும் பெல்லாரி சிறையிலே அடைக்கப்பட்டிருக்கும் போது. ஸ்காட்லாந்து போலீஸ் கண்களை மறைத்து மாறுவேடத்தில் பல நாடுகளுக்கு தப்பிச் சென்றவர். ஆங்கில உளவு போலீசார், இவர் ஒரு வீட்டில் இருக்கிறார் என சுற்றிவளைத்த போது அது இறந்தவர் வீடு என்று சொல்ல ஆங்கிலேயர்கள் நம்பவில்லை. இவர் இங்கு தான் இருக்கிறார்; அவரை நாங்கள் கைது செய்ய வேண்டும் என வீட்டு வாசலில் காவல் காத்தார்கள். ஆங்கிலேயர் வீடு முழுவதும் தேடி பார்த்து ஏமாற்றம் அடைந்து போய்விட்டார்கள். சுடுகாட்டில் அந்த சடலம் எழுந்து நின்றது. ஆம்... அவர் தான் வ.வே.சு.அய்யர். மதுரை வைத்தியநாத ஐயர் சீர்திருத்தங்களுக்கு பெயர் பெற்றவர். வழக்கறிஞர் தொழில் செய்திருந்தால் வளமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும், கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்றெல்லாம் சொல்லி அதை நிறைவேற்றினார். அன்றைய கல்வி அமைச்சராக, போலீஸ் அமைச்சராக இருந்த கக்கன் இவரால் வளர்க்கப்பட்டவர். வைத்தியநாத ஐயர் இறந்தவுடன் மகன் என்று சொல்லி மொட்டையடித்துக் கொண்டார் கக்கன். உப்பு சத்தியாகிரகத்திற்காக வேதாரண்யம் சென்ற போது 400 மீட்டர் தரையில் தரதரவென்று இழுக்கப்பட்டார். மனைவி, மகன் என குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மகள் திருமணத்திற்கு பரோலில் வந்தார். மகன் இறந்த போது சிறையில் இருந்தார்.சீர்காழிக்கு அருகே பிறந்தவர். ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தவர். அரசு வேலையை உதறி விட்டு, வ.உ.சி., சிவா உடன் சேர்ந்து கொண்டார். வாஞ்சிநாதனுடன் இருந்தார் என குற்றம் சாட்டப்பட்டு, ஆஷ் துரை கொல்லப்பட்ட பின் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். வெளியில் வந்த பின்னும், துண்டு பிரசுரம் விநியோகித்தார் என மீண்டும் 10 வருடம் தண்டனை.23 வயதில் சிறையில் பட்ட துயரங்கள் ஏராளம். அவர் தான் நீலகண்ட பிரம்மச்சாரி. பாஷ்யம் அய்யங்கார் என்ற ஆர்யா. இவர் 1932 ஜனவரி 26ல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றினார். அமாவாசை இரவில் ஆங்கில அதிகாரி போல காக்கி சீருடை அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து அதிகாலை 12:00 மணிக்கு கம்பத்தின் மீதேறி ஆங்கில கொடியை இறக்கி நம் தேசக் கொடியை பறக்க விட்டார். அந்தக் கொடியை அரசு கீழே இறக்க ஒரு நாள் ஆனது. இரண்டு நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார் சத்தியமூர்த்தி இன்னொரு விடுதலை போராளி. காமராஜரின் குருநாதர். பாரதியாரின் பாடல்களை அரசு தடை செய்த போது இவர் தான் வாதாடி அப்பாடல்களை யாரும் பாடலாம் என்ற நிலையை உருவாக்கினார். சென்னையின் பஞ்சத்தைப் போக்க ஆங்கில அரசே வியக்கும்படி பூண்டி நீர் தேக்கத்தை உருவாக்கினார். ஆங்கில அரசு தந்த சிறை வாசம், தடியடி இவற்றால் உடல் நலிந்து இளம் வயதில் மறைந்தார். இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றி என்ன? அவர்களை நினைவில் கொள்வது,அவர்களைப் பற்றிய புத்தகங்களை படிப்பது. இந்த தேசத்தைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பது. தேசத்திற்கு எதிரான செயல்கள் செய்யாதது. எல்லையில் ராணுவத்தில் நம் சகோதர சகோதரிகள் தங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் தேசத்தை காத்து வருகிறார்கள். இளைஞர்கள் தங்களின் வலிமையை, அறிவை, சமூக உணர்வை, எண்ணத்தை எப்படி எல்லாம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறுகிறார் பாரதியார். தேச முன்னேற்றம் என்பது இளைஞர்கள் கையில் இருக்கின்றது. சோம்பல் இன்றி தனி மனித வளர்ச்சி இருந்தால் தான் ஒருவன் பிறந்த குடும்பத்திற்கும், அவன் பிறந்த நாட்டிற்கும், இந்த உலகத்திற்கும் அது நன்மை பயக்கும் எத்தகைய துயரம் வந்தாலும் தர்மனை போல அரிச்சந்திரனை போல தன் செயல் தர்மத்தை கைவிடாமலும், கடமை தவறாமலும் இளைஞர்கள் கெட்டதை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிறார் பாரதியார். நாம் இருக்கும் நாட்டையோ நமக்கு உரிமையான பூமியையோ இழக்க சம்மதிக்க கூடாது என்கிறார். இந்த தேசம் உன்னுடையது; எப்பாடுபட்டாவது இந்த தேசத்தை காக்க வேண்டும் என்கிறார். ஒற்றுமையே நாட்டுக்கும், தனிமனிதருக்கும் நன்மை விளைவிக்கும். எனவே அனைத்து செயல்களுக்கும் தனி ஒருவன் பொறுப்பாக முடியாது. அனைவரையும் அரவணைக்க வேண்டும். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்... பலரின் தியாகத்தில் உருவானது என்பதை நெஞ்சில் நிறுத்தி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம். தேசத்தைக் காப்போம். இதுவே மகாகவிக்கு செலுத்தும் நன்றிக்கடன். ஜெய்ஹிந்த் - வந்தே மாதரம்.-ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010