உள்ளூர் செய்திகள்

தெய்வத் திருமணம் - 8

ஐயப்பன் - புஷ்கலா திருமணம்மதுரை சவுராஷ்டிரா சமூகத்தினர் நெய்த துணிகளுக்கு திருவாங்கூர் சமஸ்தானத்தில் வரவேற்பு இருந்தது. திருவாங்கூர் மன்னர், உள்ளிட்ட அனைவரும் அந்த துணிகளை விரும்பி அணிந்தனர். சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நெசவு செய்த துணிகளுடன் மதுரையில் இருந்து நடந்தே திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் செல்லத் தயாரானார். அப்போது, அவரது இளம் வயது மகள் புஷ்கலாவும் உடன் வருவதாகச் சொல்லிக் கிளம்பினாள். மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பாத அவர், “மதுரையில் இருந்து திருவாங்கூர் நெடுந்தொலைவில் உள்ளது. காடு, மலைப்பகுதியைக் கடந்து செல்வது கடினம், விலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். பெண் பிள்ளையை நெடுந்துாரம் அழைத்துச் செல்ல முடியாது” என மறுத்தார். புஷ்கலாவோ தானும் வருவதாகச் சொல்லி அடம் பிடித்தாள். வேறு வழியின்றி மகளுடன் திருவாங்கூருக்குப் புறப்பட்டார். சில நாள் பயணத்திற்கு பின்பு, சமவெளியைக் கடந்து மலைப்பகுதியில் இருவரும் நடந்து சென்றனர். மலைப்பகுதியில் நடந்த போது, புஷ்கலா களைத்துப்போனாள். இருவரும் ஆரியங்காவு என்னும் இடத்திற்குச் சென்ற போது, இருட்டத் தொடங்கியது. இரவு நேரத்தில் பயணிக்க முடியாது என்பதால் அங்கிருந்த ஐயப்பன் கோயிலில் இருந்த அர்ச்சகரிடம் அங்கு தங்க அனுமதி தருமாறு வேண்டினார். அர்ச்சகரும் சம்மதிக்க இருவரும் கோயிலில் தங்கினர். கோயிலில் இருந்த ஐயப்பனின் திருமேனியைக் கண்ட புஷ்கலாவிற்கு பக்தி ஏற்பட்டது. ஐயப்பனைப் பார்த்துக் கொண்டே இருந்த புஷ்கலாவின் மனதில் காதல் உண்டானது. ஐயப்பனின் அழகில் மயங்கிய அவள், அங்கேயே தங்க முடிவு செய்தாள்.மறுநாள் காலையில் திருவாங்கூர் செல்ல அவளுடைய தந்தை புறப்பட்ட போது, அவள் வரவில்லை எனச் சொன்னாள். மலைப்பகுதியில் பயணம் செய்வது கடினம் என்பதால் இங்கேயே தங்கிக் கொள்வதாகவும், திரும்பி வரும் வழியில் தன்னை அழைத்துச் செல்லும்படியும் கூறினாள். மகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, இளம்வயது மகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாமல் கவலையடைந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சகர், திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்றுத் திரும்பி வரும் வரை அவள் இங்கு என் வீட்டுக் குழந்தைகளோடு இருக்கட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். அர்ச்சகர் மீது ஏற்பட்ட நம்பிக்கையில் அவர், மகளிடம் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டுத் திருவாங்கூருக்கு புறப்பட்டார். ஐயப்பன் கோயிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலா, சாஸ்தா கோயிலுக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தார். அவள் அங்கு தங்கிய போது, அந்தக் கோயிலில் இருக்கும் சாஸ்தாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது. இதற்கிடையே, புஷ்கலாவின் தந்தை மலைப் பகுதியில் இருந்த காடுகள் வழியாக செல்லும் போது மதயானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர், தான் வைத்திருந்த துணி மூட்டையுடன் வேகமாக ஓடினார். ஆனாலும் யானை பின்தொடர்ந்தது. “என்னை யாராவது காப்பாற்றுங்கள்” எனக் கதறினார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன், அந்த மத யானையை அடக்கினான். மதயானையிடம் இருந்து காப்பாற்றிய அந்த இளைஞனுக்குப் பரிசாக பட்டாடை கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட வேடன், உடனே அதை அணிந்து கொண்டு, 'நான் பட்டாடையில் எப்படி இருக்கிறேன்' எனக் கேட்டான். அவனது அழகைக் கண்டு வியந்த அவர், 'இந்தப் பட்டாடையில் மாப்பிள்ளை போல் இருக்கிறாய்' என்றார். உடனே அவன், 'மாப்பிள்ளை போல இருக்கிறேன் என்கிறீர்களே, எனக்கு உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பீர்களா?' என்றான். அதனைக் கேட்டதும், “தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எப்படி தெரிந்தது?” என நினைத்த போதே, அவன் அங்கிருந்து சென்று விட்டான். வேடன் எப்படிக் காணாமல் போனான் என சிந்தித்தபடியே, மீண்டும் திருவாங்கூர் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். திருவாங்கூர் சென்று துணிகளை விற்றுத் திரும்பிய அவர், மகளை அழைத்துச் செல்வதற்காக ஆரியங்காவுக்கு வந்தார். ஆரியங்காவு சாஸ்தா கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த ஐயப்பனை வணங்கிய அவர், மதம் பிடித்த யானையிடம் இருந்து வேடர் குலத்து இளைஞனை அனுப்பி காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், மதயானையிடம் இருந்து காப்பாற்றிய இளைஞனின் உருவமாக மாறியது. தன் மகளைத் திருமணம் செய்ய விரும்பியே இளைஞர் வடிவில் சாஸ்தா வந்ததை உணர்ந்தார். அதன் பிறகு அவர், கோயில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொன்னார். சாஸ்தாவையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக புஷ்கலா சொல்லிக் கொண்டிருந்ததாக அர்ச்சகரும் தெரிவித்தார். தந்தையும் தன் மகள் புஷ்கலாவைச் சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். புஷ்கலாவின் தந்தை தெரிவித்த தகவலை, கோயில் அதிகாரிகளுக்குச் சொல்லி அனுப்பினார் அர்ச்சகர். கோயில் அதிகாரிகள் இந்த தகவலை மன்னருக்குத் தெரிவித்தனர். மன்னரும் தன் குடும்பத்தினருடன் ஆரியங்காவுக்கு வந்தார். புஷ்கலாவின் தந்தையும், தன் உறவினர்களை மதுரையில் இருந்து ஆரியங்காவுக்கு வரும்படிச் சொல்லி அனுப்ப, அவர்களும் வந்தனர். இதை தொடந்து, சாஸ்தா, புஷ்கலாவின் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணச் சடங்குகள் ஆரம்பித்தன. சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலாவை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார். இத்திருமணம் பற்றி இன்னொரு கதையும் இருக்கிறது.மகரிஷி சத்யபூர்ணர் மகள்களாகப் பிறந்த பூரணை, புஷ்கலை இருவரும் ஐயப்பனைத் திருமணம் செய்ய விரும்பி விரதமிருந்தனர். அவர்களுக்குக் காட்சியளித்த ஐயப்பன், அடுத்தப் பிறவியில் விருப்பம் நிறைவேறும் என வரம் அளித்தார். அடுத்தப் பிறவியில் புஷ்கலை நேபாளத்தை ஆட்சி செய்த பளிஞன் என்ற அரசனின் மகளாகப் பிறந்தாள். பளிஞன் மந்திர சாஸ்திரத்தில் புலமை பெற்ற பண்டிதனாகவும், காளியின் வரம் பெற்றவனாகவும் இருந்தான். பளிஞன் சிரஞ்சீவி எனும் சாகா வரத்தைப் பெறுவதற்காக இளம் பெண்களைக் காளிக்குப் பலியிட்டு பூஜை செய்து வந்தான். சிவனிடம் பக்தி கொண்ட 'கன்னிகா' என்ற இளம் பெண்ணைக் காளிக்குப் பலியிட அந்தப் பளிஞன் நாள் குறித்து, அதற்கான பணிகளை தொடங்கினான். தன் பக்தையான கன்னிகாவைக் காக்க நினைத்த சிவன், தன் மகனான சாஸ்தாவையும், அவரது பூத கணங்களில் ஒன்றான கருப்பசுவாமியையும் பளிஞனிடம் இருந்து கன்னிகாவை காப்பாற்ற அனுப்பினார். பளிஞன் செய்த சூழ்ச்சிகளை சாஸ்தா முறியடித்து, கன்னிகாவைக் காப்பாற்றினார். அதன் பின் தான் யார் என்பதையும் உணர்த்தினார். சாஸ்தாவை வணங்கிய பளிஞன் தன் மகள் புஷ்கலையைத் திருமணம் செய்யுமாறு வேண்டினான். சாஸ்தாவும் அதற்கு சம்மதித்து புஷ்கலையைத் திருமணம் செய்து 'புஷ்கலா காந்தன்' எனப் பெயர் பெற்றார். புஷ்கலையின் சகோதரியான பூரணை அடுத்த பிறவியில் எங்கு பிறந்தாள்? அவள் ஐயப்பனை எப்படி மணந்தாள் என்பதை அடுத்த திருமணத்தில் பார்க்கலாம். -திருமணம் தொடரும் தேனி மு.சுப்பிரமணி99407 85925