தெய்வீக கதைகள் - 24
எல்லாம் விதிப்பயன்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் செய்தாலும், ஆதிபராசக்தியே எல்லாவற்றிற்கும் மூல காரணம். அந்த சக்தியை விட உயர்ந்த ஆற்றல் வேறு இல்லாததால், அந்த சக்தியை ' பராசக்தி' என அழைக்கிறோம். பரா என்றால் மேலான, சக்தி என்றால் ஆற்றல்.பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான எல்லா தேவர்களுக்கும் சக்தியைக் கொடுத்து அவர்களின் பணிகளை சரியாகச் செய்ய உதவுபவள் பராசக்தியே. சக்தி இல்லையேல் உலகில் எந்த செயலும் நடக்காது. சக்தி இல்லையேல் எல்லாம் உயிரற்ற சவம் தான்.உலகத்தை உண்டாக்க எண்ணிய அவள், முதலில் இச்சா சக்தியையும், அதில் இருந்து ஞான சக்தியையும், அதற்குப் பின் கிரியா சக்தியையும் உண்டாக்கினாள். முறையே இச்சா சக்தியில் இருந்து சிவனும், ஞான சக்தியில் இருந்து விஷ்ணுவும், கிரியா சக்தியில் இருந்து பிரம்மாவும் உண்டாயினர். அப்போது சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், பஞ்ச பூதம் ஆகிய எதுவும் இல்லாமல் எங்கும் வெட்ட வெளியாக இருந்தது. மும்மூர்த்திகளும் அங்கிருந்து கொண்டு பராசக்தியை நோக்கி தவம் செய்தனர். அதைக் கண்டு மகிழ்ந்த பராசக்தி அசரீரியாக, “குழந்தாய் எழுந்திரு! சிருஷ்டியைத் தொடங்கு'' என பிரம்மனுக்கு ஆணையிட்டாள். தவத்தில் இருந்த அவரும் விழித்தெழுந்து உடலை அசைத்தார். உடல் அசைவால் அதிர்வு ஏற்பட்டு ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் என்ற வரிசையில் பஞ்ச பூதங்கள் உண்டாயின.காசிபர், தட்சன், மரீசி முதலிய பிரஜாதிபதிகளைப் படைத்து அவர்களின் மூலம் உயிர்கள் படைக்கப்பட்டன. விஷ்ணு காத்தல் தொழிலைச் செய்தார். உயிர்களை அழிக்கும்படி சிவனிடம் சொன்ன போது மிருத்யு என்னும் மரண தேவதையை அவர் படைத்தார். ஆனால் அது, 'உயிர்களைக் கொன்றால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேருமே' என அழுதது. இரக்கப்பட்ட பிரம்மா, '' கவலை வேண்டாம்! சாபம் உன்னை நெருங்காதபடி செய்கிறேன்'' என உறுதி அளித்தார். அந்த தேவதை விட்ட கண்ணீரைக் கையில் ஏந்திக் கொண்டார். அதில் இருந்து உயிர்களைத் தாக்கும் நோய்கள் பரவத் தொடங்கின. நோய்களின் மூலம் உயிர்கள் இறந்தால் மரண தேவதையை யாரும் குறை சொல்ல வாய்ப்பில்லை அல்லவா... அதனால் மரண தேவதையும் பாவம் தன்னை சேராது என துணிவுடன் பணியில் ஈடுபட்டது. மும்மூர்த்தியான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் பராசக்தி அருளால் தங்களின் தொழில்களை சரிவரச் செய்கின்றனர். மிருத்யு தேவதையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்ன தான் மிருத்யு தேவதை மரணத்திற்குக் காரணம் என்றாலும், விதியின் பயனால் தான் மரணம் வருகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஒரு காட்டில் சுபத்ரை என்ற வேடுவப் பெண் கணவருடன் வாழ்ந்தாள். நீண்ட நாளாக குழந்தை இல்லாத அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை அன்புடன் வளர்த்தாள். அவனும் ஐந்து வயது சிறுவனாக வளர்ந்தான். ஒருநாள் சோறுாட்டி உறங்க வைத்தாள். தண்ணீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள். சற்று நேரத்தில் குடிலுக்குத் திரும்பியவள் கண்ட காட்சி அவளை மயக்கம் வரச் செய்தது. பாம்பு தீண்டியதால் விஷம் குழந்தையின் உடலெங்கும் பரவி விட்டது. உயிருக்கு மன்றாடிய சிறுவனைக் கண்டு அழுதாள் தாய். மனைவியின் அழுகுரல் கேட்டு கணவனும் ஓடி வந்தான். நடந்தை அறிந்த அவன் கோபத்துடன் பாம்பின் இருப்பிடமான புற்றுக்கு போய் ஒரே நிமிடத்தில் பாம்பைக் கையில் பிடித்து வந்தான். “சுபத்ரை... நம் குழந்தையை தீண்டிய இந்த பாம்பை கொல்லப் போகிறேன்” என்றான். “இந்தப் பாம்பைக் கொன்று விட்டால், உலகில் பாம்பு இனமே இல்லாமல் போகுமா?” என விரக்தியுடன் கேட்டாள் அவள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசத் தொடங்கியது. “அட மூடனே! இங்கு நீ, உன் மனைவி, குழந்தை மூவரும் இருக்கிறீர்கள். நான் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ எப்போதோ கொன்றிருக்கலாம் அல்லவா? குழந்தையை மட்டும் தானே தீண்டினேன்? அதுவும் மிருத்யு தேவதை என்னை ஏவியதால் தான் தீண்டினேன். இதில் என் தவறு எதுமில்லை. காரணம் இல்லாமல் எந்தச் செயலும் நடக்காது'' என்றது. “யார் அந்த மிருத்யு தேவதை'' எனக் கேட்டான் வேடன். மிருத்யு தேவதை அவன் முன் தோன்றி, “குழந்தை இறப்புக்கு காரணம் நான் இல்லை. என்னைக் காலன் ஏவினான். அவனுக்கு நான் கட்டுப்பட்டவள். அதனால் தான் பாம்பை ஏவி விட்டு குழந்தையை கொல்லச் சொன்னேன் அவ்வளவுதான் என் வேலை'' என்றது மிருத்யு தேவதை. “காலதேவன் யார்? ” என வேடுவன் கேட்க உடனே காலதேவனான எமன் தோன்றினான். “குழந்தை இறப்பதற்கு நீயே காரணம் என மிருத்யு தேவதை சொல்கிறதே...'' என்றான் வேடுவன். “நான் காரணமில்லை, பகவானே என்னை ஏவி விட்டார். அதனால் மிருத்யு தேவதையை நான் ஏவினேன்” என்றான் எமன். “உன்னை ஏவிய அந்த பகவான் யார்?” என கேட்க வேடுவனுக்கு மகாவிஷ்ணு காட்சியளித்தார். ''எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணமா'' எனக் கேட்டான் வேடுவன். “மண்ணில் பிறந்த அனைவரும் சாக வேண்டும் என்பது விதி. பாம்பு கடித்து இந்தக் குழந்தை சாக வேண்டும் என்பது நியதி. அது நிர்ணயிக்கப்பட்டதால் நானே நடத்தினேன்'' என்றார் விஷ்ணு. ''அனைவரும் தப்புவதற்காக ஒரு காரணம் சொல்கிறீர்கள். நான் நம்ப மாட்டேன்'' என ஆவேசத்துடன் கத்தியை எடுக்க பைக்குள் கையை விட்டான் வேடுவன். வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் இருந்த பைக்குள் இன்னொரு பாம்பு புகுந்திருந்தது. அது அவனைத் தீண்ட கீழே மயங்கி விழுந்தான். அவனுடைய மனைவி காட்டுக்குள் ஒடிச் சென்று மூலிகை கொண்டு வந்தான். சாறு பிழிந்து கணவருக்கு மருந்தாக புகட்டி விட்டாள். சற்று நேரத்தில் பாம்பின் விஷம் முறிந்து அவன் உயிர் பிழைத்தான். அதைக் கண்டதும், “மூலிகை கொடுத்தால் பாம்பின் விஷம் முறியும் என அறிந்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் உயிருக்கு போராடும் குழந்தையை அவளால் ஏன் காப்பாற்ற முடியவில்லை... ஆனால் உன்னை மட்டும் காப்பாற்றினாளே... ஏன் தெரியுமா? பாம்பு கடித்தாலும் பிழைக்க வேண்டும் என்பது உன் விதி. பாம்பு கடித்ததும் இறக்க வேண்டும் என்பது குழந்தையின் விதி. இது தான் அவரவர் வினைப்பயன்” என்றார். விதி என்பது பிரம்மா இட்ட ஆணை. அதன் படியே மண்ணில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் நிகழ்கின்றன. -பக்தி தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com