கோயிலும் பிரசாதமும் - 11
ஆவுடையார்கோவில் - புழுங்கலரிசி சாதம்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில் அதிசயம் நிறைந்த அற்புதமான தலம். அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் அமைச்சராகப் பணிபுரிந்த வாதவூராரை ஆட்கொண்டு மாணிக்கவாசகராக சிவபெருமான் மாற்றிய தலம். இங்கு சிவன் உருவமின்றி அருவ நிலையில் அருள்புரிகிறார். அன்றாட பூஜையின் போது புழுங்கல் அரிசியை வடித்து சன்னதி முன்புள்ள அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி அதில் இருந்து வரும் ஆவியை நைவேத்யம் செய்கின்றனர். அரிமர்த்தன பாண்டிய மன்னரின் அவையில் அமைச்சராக பணியாற்றியவர் வாதவூரார். ஒருசமயம் மன்னரின் உத்தரவால் குதிரைகளை வாங்க அரசாங்கப் பணத்துடன் திருப்பெருந்துறைக்கு சென்றார். வாதவூரார். அங்கு வேத மந்திரங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூராரின் மனதில் பக்தி பெருகியது. குருநாதர் ஒருவரிடம் தன்னை சீடராக ஏற்று உபதேசிக்கும்படி வேண்டினார். அவரும் உபதேசம் செய்ய தியானத்தில் ஆழ்ந்தார். கண் விழித்த போது குருநாதரை அங்கு காணவில்லை. உபதேசம் செய்த குருநாதர் சிவபெருமானே என உணர்ந்தார். குதிரை வாங்க இருந்த பணத்தை எல்லாம் சிவத் தொண்டிற்காக செலவு செய்தார். வாதவூரார் உரிய சமயத்தில் குதிரைகளுடன் வராததால் மன்னர் கோபம் கொண்டார். படை வீரர்களை அனுப்பி வைத்தார். அவர் சிவனடியாராக மாறி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தன் உத்தரவை மீறிய வாதவூராரை சிறையில் அடைத்தார் மன்னர். “ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும்” என மன்னரிடம் தெரிவிக்கச் சொன்னார் சிவன். வாதவூராரும் அப்படியே செய்ய, ஆவணி மூலத்தன்று நரிகளைப் பரிகளாக்கி சிவனும் அனுப்ப, அவற்றை மன்னரிடம் ஒப்படைத்தார் வாதவூரார். அந்த இடமே தற்போதும் 'நரிக்குடி' எனப்படுகிறது. அன்றிரவு குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரியாக மாறின. இதனால் கோபமடைந்த மன்னர் வாதவூராரை வைகை ஆற்றில் சுடுமணலில் நிற்க வைத்து தண்டனை அளித்தார். சிவனின் திருவிளையாடலால் வைகை நதியில் வெள்ளம் ஏற்பட்டு கரை எங்கும் உடைப்பு ஏற்பட்டது. கூலியாள் வடிவில் தோன்றிய சிவன் கரையை அடைக்கும் பணியில் ஈடுபடாமல் பிட்டு வாங்கித் தின்றார். வேலை செய்யாமல் நின்ற கூலியாள் வடிவில் நின்ற சிவனைக் கண்ட மன்னர் பிரம்பால் அடிக்க, அங்கிருந்த அனைவரின் முதுகிலும் அந்த அடி விழுந்தது. வந்திருப்பவர் சிவனே என உணர்ந்த மன்னர் வாதவூராரிடம் மன்னிப்பு கேட்டார். இதன் பின் வாதவூரார் 'மாணிக்கவாசகர்' என அழைக்கப்பட்டார். இந்த திருவிளையாடல்களின் பின்னணியில் உருவான சிவத்தலமே திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவில். பல அதிசயங்கள் கொண்ட இக்கோயிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி கிடையாது. சுவாமிக்கு உருவம் இல்லை. ஆத்மநாத சுவாமிக்கு பரம சுவாமி, திருமூர்த்தி தேசிகர், சதுர்வேத புரீசர், சிவயோக வனத்தீசர், குந்தக வனேசர், சிவக்ஷேத்ர நாதர், சன்னவனேசர், சன்னவநாதர், மாயபுர நாயகர், விப்பிர தேசிகர், சப்த நாதர், பிரகத்தீசர், திருதச தேசிகர், அசுவ நாதர், சிவபுர நாயகர், மகா தேவர், திரிலோக குரு என பதினெட்டு பெயர்கள் வழங்கப்படுகின்றன. முற்காலத்தில் இக்கோயில் திருப்பெருந்துறை, சிவபுரம் என அழைக்கப்பட்டது. சிவலிங்கத் திருமேனியில் பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகள் இருக்கும். ஆனால் இங்குள்ள மூலவர் சக்தி பீடத்துடன் காட்சி அளிக்கிறார். அதன் மீது குவளை ஒன்றை சாத்தியிருப்பர். உருவம் இல்லாமல் அருவ நிலையில் சிவன் இங்கு இருக்கிறார். கருவறையின் பின்புறச் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும் அதற்கு மேல் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தீபங்களும் இருக்கும். சுவாமிக்கு காட்டும் தீபாராதனை தட்டை இங்கு பக்தர்கள் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள அனுமதி கிடையாது. கருவறையின் வடக்கில் யோகாம்பிகை சன்னதி உள்ளது. அம்மனுக்கும் உருவம் கிடையாது. யோக பீடமும், அதில் இரண்டு பாதங்கள் மட்டுமே இருக்கும். சன்னதியின் முன்புறம் உள்ள கல் ஜன்னல் வழியாக அம்மனின் பாதங்களை தரிசிக்கலாம்.ஒரு சமயம் திருப்பெருந்துறையைச் சேர்ந்த அந்தணச் சிறுவர்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்க முதிய அந்தணர் வடிவில் தோன்றிய சிவன் முன்வந்தார். இதற்காக விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வேத பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தணர்கள் தங்களின் வீடுகளில் இருந்து தினமும் புழுங்கலரிசி சாதம், பாகற்காய், முளைக்கீரையை சமைத்து குருநாதருக்கு உணவாக கொடுத்தனர். விருப்பமுடன் அதை ஏற்றுக் கொண்டு அவரும் வேதங்களை கற்றுக் கொடுத்தார். அத்துடன் சிறுவர்களோடு தானும் சிறுவனாக விளையாடி மகிழ்ந்தார். அப்படி விளையாடிய குருநாதர் ஒருமுறை திடீரென மறைந்தார். எங்கு தேடியும் அவரைக் காண முடியவில்லை. அன்றிரவு ஒரு அதிசயம் நடந்தது. சிறுவர்களின் கனவில் ஒரே நேரத்தில் சிவன் தோன்றி, ''முதிய அந்தணராக வந்து வேதங்களை கற்பித்தேன். இதுவரை நீங்கள் அளித்த புழுங்கல் அரிசி சாதம், முளைக்கீரை, பாகற்காயை சமைத்து திருப்பெருந்துறை கோயிலில் எனக்கு சூடாக நைவேத்யம் செய்யுங்கள்'' எனத் தெரிவித்தார். கனவில் சிவன் வந்த விஷயத்தை சிறுவர்கள் தெரிவிக்க, குருநாதராக வந்தவர் சிவபெருமானே என்பதை உணர்ந்து அனைவரும் நெகிழ்ந்தனர். அன்று முதல் இக்கோயிலில் புழுங்கலரிசி சாதம், பாகற்காய், முளைகீரை நைவேத்யம் நடக்கிறது. மூலவரான ஆத்மநாதருக்கு ஆறு காலத்திலும் புழுங்கலரிசியை வடித்து சன்னதிக்கு எதிரில் உள்ள கருங்கல் மேடையில் ஆவி பறக்க கொட்டி நைவேத்யம் செய்கின்றனர். அர்த்தஜாம பூஜையின் போது புளியோதரை, எள்ளு சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நைவேத்யம் செய்யப்படுகிறது. திருவிழாவின் போது தேன்குழல், வடை, புட்டு, சீயம், அதிரசம், தோசை நைவேத்யம் செய்யப்படுகிறது. காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 15 கி.மீ., துாரத்தில் ஆவுடையார் கோவில் ஆத்மநாதர் கோயில் உள்ளது.-பிரசாதம் தொடரும்ஆர்.வி.பதி