சொல்லச் சொல்ல இனிக்குதடா - 25
பூம்பாறைதிருக்கடையூருக்கும் திருவிடைக்கழிக்கும் சென்று வந்த உற்சாகம் தேவந்தியின் முகத்தில் கரைபுரண்டு ஓடியது. உறவினர் பற்றியும், கோயில்கள் பற்றியும் பாட்டியிடம் பகிர்ந்து கொண்டாள். 'சொந்த பந்தங்களோட சேர்ந்து கோயிலுக்கு போய் வருவதெல்லாம் பெரிய வரம். வாழ்க்கையில எப்போதெல்லாம் இது போல சந்தர்ப்பம் கிடைக்குதோ அப்போதெல்லாம் போயிட்டு வரனும் யுகா?”“சரி பாட்டி. என்கூட வேலை செய்யற பார்த்திபன் இருக்கானே அவன் என்ன சொல்றான் தெரியுமா... என்னடா எப்பவும் கோயிலுக்கே போயிட்டு இருக்கே... இந்த கலியுகத்துல கடவுள் இருக்காரா? அவர் எங்க நமக்கு அருள்புரியுறார்?. சில நேரங்களில் மனசே விட்டு போயிடுது என புலம்பினான் பாட்டி” என்றான் யுகன்.“அவனுக்கு கடவுள் சக்தியைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதான். கஷ்டம் வரும் போது நாமெல்லாம் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிற கடவுளேன்னு புலம்புறோம். ஆனா நமக்கே தெரியாம கடவுள் நம்மை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றி இருப்பார். பல நேரங்களில் இதை நாம் உணர்வதே இல்ல. ஒரு சமயம் நம்ம ஊர் திருவிழாவில தேர் இழுக்கப் போனேன். சுவாமியை பார்த்துக் கொண்டிருந்த ஜோரில் தேர்ச் சக்கரம் வருவதை கவனிக்க தவறிட்டேன். திடீர்னு என்னை யாரோ பிடிச்சு தள்ளினாங்க. யாரதுன்னு சுதாரிச்சு திரும்பிப் பார்த்த போது தான் அந்த பயங்கரம் தெரிஞ்சது. நான் நின்னுட்டு இருந்த இடத்துல தேர்ச்சக்கரம் கடந்து போகுது. பகிர்னு ஆயிடுச்சு. அந்த நபர் என்னை தள்ளி விடலைன்னா என் நிலைமை என்னாகும். பல நேரங்களில் கடவுள் நம்மை காப்பாத்திட்டு தான் இருக்கார், மனித உருவுல. நல்லது நடக்கும் போது நாம் அதை உணர்வதில்லை ஆனால் துன்பம் வரும் போது கடவுள் உதவிக்கு வரலைன்னு நினைப்பது மனித இயல்பு தான். இந்த கலியுகத்தில் மனித வடிவில் வந்து தான் கடவுள் உதவி செய்றாரு.எது, எப்போ யாரால எப்படி நமக்கு கிடைக்கும் என்பதெல்லாம் ஒரு கணக்கு இருக்கு. அதன்படி தான் இந்த உலகம் இயங்குது. அதைத் தான் கர்மானு முன்னோர்கள் சொன்னாங்க. அதனால நாம எப்போதும் நல்லதை நினைக்கனும். நல்லதை பேசணும், செய்யணும். உன் நண்பன் பார்த்திபன் பேச்சை துாக்கி ஒடப்புல போடு” என்றாள் பாட்டி தீர்மானமாக.“ஆஹா! பாட்டி தத்துவப் பாடம் கூட நல்லா சொல்றியே... இதெல்லாம் யாரு உனக்கு சொன்னது?”“எனக்கும் வயசாகுதுல்ல. இத்தனை வருஷ அனுபவத்தில தெரிஞ்சுக் கிட்டது தான். நான் ஒரு காலத்தில் எவ்வளவோ எதிர்மறை சிந்தனையில் மூழ்கி இருந்தேன். எப்போது நான் ஆன்மிக வழியில் சேர்ந்தேனோ அன்று முதல் கொஞ்சம் கொஞ்சமா எதிர்மறை சிந்தனைகளில் இருந்து மனம் விலகத் தொடங்குச்சு. நேர்மறை எண்ணம் அதிகமாச்சு. இன்னும் உனக்கு காலம் இருக்கு. போகப் போகப் புரியும். ஆனா கடவுள் சிந்தனையை மட்டும் விடக் கூடாது யுகா. அது தான் நம் தலைமுறையை காப்பாற்றும்”“நிச்சயமா பாட்டி, ஆமா... மலை, சமதளம் தாண்டி இன்னைக்கு பாறைக்கு தாவிட்டியோ?” என்றான் யுகன். “ஆமா... இன்னிக்கு பூம்பாறை தான்டா. ஆனா இந்த தலம் மனசுக்கு பூப்போல இதமா இருக்கும். ஆமா யுகா நீயும் தேவந்தியும் கல்யாணம் ஆனதும் தேனிலவுக்கு கொடைக்கானல் தானே போனீங்க? உங்க அப்பா சொன்னது ஞாபகம் இருக்கு.”“ஆமாம், தேன்நிலவுக்கும் பூம்பாறைக்கும் என்ன சம்பந்தம்?”“ம்... தேன் நிலவுக்கும் பூம்பாறைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் பூம்பாறைக்கும் கொடைக்கானலுக்கும் சம்பந்தம் இருக்கு. ஏன்னா பூம்பாறை கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ., துாரம் தான். அழகான மலை கிராமம். அங்க போனா நம்ம மனசை பறிகொடுத்துடுவோம்”“அட ஆமா, நீ சொன்னதுக்கு அப்புறம் தான் பாட்டி நினைவுக்கு வருது. அங்க மூணு நாள் இருந்தோம். இரண்டாம் நாள் கோயிலுக்கு போனோம். ஆனால் அது குழந்தை வேலப்பர் கோயிலுன்னு ஞாபகம். நீ சொன்ன பிறகு தான் பூம்பாறைங்குற ஊர் கொஞ்சம் ஞாபகத்துக்கு வருது.”“ஓ! அந்த பூம்பாறையா!” என தேவந்தியும் தலையாட்டினாள். “நல்ல வேலை மூணு நாளும் ஓட்டல் ரூமிலேயே காலத்தை கழிக்காம குழந்தை வேலப்பரைப் போய் பாத்துட்டு வந்தீங்களே... அதுவரைக்கும் நமக்கு அமுதன் கிடைச்சான்” என சொல்லிவிட்டு சிரித்தார் பாட்டி.யுகனும் தேவந்தியும் நாணத்துடன் பாட்டியுடன் சிரித்து மகிழ்ந்தனர். “இந்த பூம்பாறை கோயிலுக்கு முருகன் நினைத்தால் தான் நம்மால் போக முடியும் எனச் சொல்லுவாங்க. முருகனுக்கு பக்கத்தில் அருணகிரிநாதரின் சிலையும் இங்கிருக்கு. இந்தியாவில் உள்ள எல்லா கோயில்களிலும் ஐம்பொன், வெண்கலம், பஞ்சலோகம், கற்களால் ஆன சிலைகள் தான் இருக்கும். ஆனால் இரண்டு கோயிலில் மட்டும் தான் பாஷாண சிலைகள் இருக்கு. ஒன்னு பழநி தண்டாயுதபாணி முருகன் சிலை. இது ஒன்பது மூலிகைகளால் ஆனது. இரண்டாவது பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் சிலை. இது பத்து மூலிகைகளால் ஆன தச பாஷாணம். பழநி நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர். அதே போகர் தான் இங்கு தசபாஷாண சிலையை உருவாக்கினார். பழநி, பூம்பாறைக்கு நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, மூலிகைகளை சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலை உருவாக்கினார் போகர். அது தான் பழநி மலையில இருக்குது. பின்னர் மறுபடியும் சீனாவுக்குச் சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானைமுட்டி குகைக்கு வந்து மீண்டும் ஒரு சிலையை செய்து பூம்பாறையில் போகர் பிரதிஷ்டை செய்தார்”“சரி, இங்கு அருணகிரிநாதருக்கு எப்படி முருகனுக்கு பக்கத்திலேயே சிலை வந்தது?””ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போ இரவு நேரமானதால் கோயில் மண்டபத்திலேயே படுத்து துாங்கிட்டார். அப்போது அரக்கி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்த போது முருகன் குழந்தை வடிவில் வந்து காப்பாற்றினார். ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்த அருணகிரிநாதர் இத்தல முருகனை குழந்தை வேலர் என அழைத்தார். அப்பெயரே நிலைத்து விட்டது. சுவாமி மீது ஒரு திருப்புகழ் பாடல் பாடியிருக்கார். இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவம் தீரும். குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. கருவறையில் குழந்தை வேலப்பர் நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நாள் முழுதும் சந்தன காப்பு அலங்காரத்துடன் காட்சி தருகிறார்”“கொடைக்கானலுக்கு பக்கத்துல இருக்கறதால, பூம்பாறை குழந்தை வேலப்பர் குளுகுளுனு இருப்பார்னு சொல்லு””ஆமா, பூம்பாறை முருகன் கோயிலுக்கு வெளியிலேயே புகழ்பெற்ற மலைப்பூண்டு சந்தை இருக்கு. பூம்பாறை மலை பூண்டு வாசனை, சுவை, மருத்துவ குணம் மிக்கது. பக்கத்துலயே மன்னவனுார் ஏரி, கூக்கல் ஏரினு அருமையான இடங்கள் இருக்கு”“அப்ப சரி, கொடைக்கானலுக்கு போக பிளான் பண்ணிட வேண்டியது தான்”“பூம்பாறை குழந்தை வேலப்பர் மட்டுமில்லாம திருவாவின்குடி குழந்தை வேலப்பரையும் தரிசிச்சிட்டு வரலாம்”“பாட்டி, திருவாவின்குடி எங்கே இருக்கு?”“மலை அடிவாரத்தில் இருக்கும் அந்தக் கோயிலைப் பற்றி அடுத்த வாரம் சொல்றேன் யுகா. ஆனா ரொம்ப சிறப்பு வாய்ந்த தலம்.” என்றார் பாட்டி. எந்த கோயில் என யோசித்தபடியே யுகன் சாப்பிட உட்கார்ந்தான்.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882