சொல்லச் சொல்ல இனிக்குதடா - 30
கொடுமுடி“பாட்டி, ஞானமலைக்கு போயிட்டு வந்ததும் முகத்துல தேஜஸ் வந்துடுச்சே” என்றான் பேரன் யுகன். “இந்த வயசான காலத்துல முருகன், வள்ளி, மயிலோட பாத சுவடுகளை சேர்ந்தாப்பல ஞானமலையில் தரிசனம் பண்ணியது ரொம்ப சந்தோஷமா இருந்தது” ''எங்கள விட நீ தான் ரொம்ப சந்தோஷப்பட்ட பாட்டி. அங்க நிலவிய அமைதி ரொம்ப பிடிச்சிருந்தது. பிரகாரத்துக்கு வெளியே இருந்த வேலை பார்த்தியா.... பிரம்மாண்டமா இருந்துச்சு. பெரிய வேலைப் பார்த்ததும் உடம்பெல்லாம் சிலிர்ப்பாயிடுச்சு” ''கடவுளைப் போல கடவுளின் ஆயுதம் வாகனங்களும் பெருமை கொண்டது யுகா. சிவனின் நந்திக்கு, விஷ்ணுவின் சக்கரம் சுதர்சனத்திற்கு துதிகள் இருக்கு. அப்படி முருகனின் வேலுக்கும் துதிகள் இருக்கு. அதில் ஒன்று வேல் வகுப்பு. உடல், மன நோய்களை தீர்க்கும் சக்தி 'வேல் வகுப்புக்கு' உண்டுன்னு வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியிருக்கார். அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பின் 16 அடிகளையும் மேல்கீழாக, முன்பின்னாக ஏறி இறங்கி வரும் வகையில் மாறி மாறி வரவழைக்கும் தொகுப்பிற்கு 'வேல்மாறல்' என பெயரிட்டார் சுவாமிகள். 'வேல்' என்பது ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் வேறு வேறு நிலைகளில் புகுந்து வருதலையே வேல்மாறல் என்றார் சுவாமிகள். வேல் வகுப்பை 'வேல் மாறலாக' வடிவமைத்துத் தந்து பாராயணப் பயனைப் பன்மடங்காக்கி நம் துன்பம், நோய், சிக்கல்களை போக்கலாம் என்பது அவர் வாக்கு.” '' கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் மாதிரி தான் வேல் மாறலுமா பாட்டி?” ''ஆமா யுகா! இந்த 'வேல்மாறல் மகா மந்திரம்' மனதை கட்டுக்குள் கொண்டு வரும். எடுத்த முயற்சியில் உறுதியாக நிற்கச் செய்யும். திருமணம், புத்திரப்பேறு, வியாபாரத்தில் வெற்றி, நோய் நீக்கம், மன நிம்மதி என பல நலன்கள் 'வேல்மாறல்' படித்தால் கிடைக்கும். சமீப காலமாக லட்சக்கணக்கில் பக்தர்கள் பாராயணம் செய்றாங்க. 'விழிக்கு துணைதிரு...' எனத் தொடங்கும். 'திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து)உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே' என்னும் வரிகள் திரும்ப திரும்ப வரும்.”“வேல்மாறல் இவ்வளவு சிறப்பானதா?” ”ஆமாம்! ஈரோடு மாவட்டம் கொடுமுடி போல இதுவும் சிறப்பு வாய்ந்தது.” “ஆமா, கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன்னு மூவரும் ஒன்னா இருந்து அருள்பாலிக்கும் இடம்னு கேள்விப் பட்டிருக்கேன். அங்க முருகருக்கும் இடம் உண்டா?” “உண்டு. இது பரிகாரத்தலமும் கூட. ஈரோடு மாவட்டம் கரூர் - ஈரோடு சாலையில் 27 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொடுமுடி. மூவரால் பாடப் பெற்றது. கருவறையில் மகுடேஸ்வரர் இருக்கிறார். இங்கு சிவன், மகாவிஷ்ணு, பிரம்மாவுக்கு தனித்தனி கோபுரம் இருக்கு. நடு கோபுர வாசல் வழியா போனால் மகாவிஷ்ணு, பிரம்மாவை தரிசிக்கலாம். வடக்கு பக்க கோபுர வாசல் வழியாக சென்றால் மகுடேஸ்வரரை தரிசிக்கலாம். அகத்தியர் பூஜை செய்ததன் அடையாளமாக லிங்கத்தின் மீது அவரது விரல் தடம் உள்ளது” “சரி இங்கே முருகனுக்கு என்ன சிறப்பு” ''முருகனுக்கு 'நமசிவாய' மந்திரத்தை சிவன் இங்கு உபதேசித்தார். ஆறுமுகம், பன்னிரு கைககளுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீதுள்ளார் முருகன். தல விருட்சம் வன்னி. இந்த மரம் 2000 ஆண்டுக்கு முந்தியது. இதனடியில இருந்து தான் பிரம்மா அருள்புரிகிறார். இந்த அதிசய மரம் பூக்கும். காய் காய்க்காது. மரத்தின் ஒரு கிளையிலுள்ள இலைகளில் பார்த்தால் முள் இருக்கும். மறு கிளையிலுள்ள இலைகளில் முள் இருக்காது. வன்னி இலைகளை தண்ணீரில் இட்டால் எத்தனை நாளானாலும் தண்ணீர் கெடாமல் இருக்கும். பழநியில் நடக்கும் பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் இங்கிருந்து தான் தீர்த்தக்காவடி எடுப்பாங்க. இங்கு கொடுமுடியில ஓடிட்டு இருக்கும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துட்டு போகும் தீர்த்தத்தில் வன்னி மர இலைகளைச் சேர்த்துக் கொள்வார்கள். சிறப்பு மிக்க இந்த மரம் சில வருஷங்களுக்கு முன்னாடி பட்டுப்போக தொடங்குச்சு. வேளாண்துறையை சேர்ந்தவர்கள் இரண்டு குழுவா பிரிஞ்சு இந்த மரத்துக்கு உயிர் கொடுக்க முயற்சியில் இறங்கினாங்க”“அந்த ரெண்டு குழுவும் என்ன பண்ணாங்க? மரத்துக்கு உயிர் வந்ததா இல்லையா?” ''முழுசா கேளு யுகா. ஒரு குழு மரத்தினுடைய திசுக்கள் மூலமா அதை இன்னொரு மரமா உருவாக்கும் முயற்சியில ஈடுபட்டாங்க. இன்னொரு குழு அந்த மரம் முறிஞ்சு விழாம இருக்க ஒரு இரும்புத் துாண் அமைச்சு முட்டுக் கொடுத்தாங்க. முதல் குழுவோட கடின உழைப்பால அதே மரத்தோட இன்னொரு கன்று உருவாகிடுச்சு. அதே மாதிரி ரெண்டாவது குழுவினுடைய சாமர்த்திய அணுகுமுறையால பட்டுப்போக இருந்த மரம் துளிர்க்க தொடங்கிடுச்சு. வேளாண், வனத்துறை விஞ்ஞானிகளின் முயற்சியால் திசு வளர்ப்பு முறையில் விதையே இல்லாமல் மரத்தின் கன்றை உருவாக்கியும், பட்டுப் போன மரத்தை துளிர்க்கச் செய்த அற்புதங்களும் சில வருடங்களுக்கு முன்பு தான் நடந்துச்சு” என புன்னகைத்தார் பாட்டி.“சபாஷ். ஆன்மிகமும் அறிவியலும் ஒரு புள்ளியில் இணைஞ்சு போச்சே” என உற்சாகமானான் யுகன்.'' இக்கோயிலின் தலபுராணம் சுவாரஸ்யமானது. ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. அதில் மேரு மலையை ஒரு கயிறால் கட்டி ஒரு பக்கம் ஆதிசேஷனும் மறுபக்கம் வாயுதேவனும் இழுக்க ஆரம்பிச்சாங்க. ஆதிசேஷன் மேருமலையை தன் கைகளால் கட்டி அணைத்துக் கொண்டார். வாயு சும்மா இருப்பாரா? அவர் ஆதிசேஷனை மலையை விட்டு கீழே தள்ள புயலாக மாறினார். இதனால் மேருமலை அழுத்தம் தாங்க முடியாம ஏழு துண்டுகளாக சிதறி போச்சு. அந்த துண்டுகள் எல்லாம் சிவலிங்கமாக உருமாறியது. அதில் ஒன்றுதான் கொடுமுடி. இந்த கோயிலில் வைர கல் சிவலிங்கம் இருக்கு, அந்த லிங்கமே மகுடேஸ்வரர் என அழைக்கப்படுது. அதுமட்டுமில்ல கொடுமுடி ஒரு பரிகார தலம்னு சொன்னேன் இல்லையா? நாகதோஷம் இருக்கிறவங்க அது நீங்குவதற்கு, ஒருத்தருக்கு எத்தனை வயசு ஆகுதோ அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்யணும். அடுத்ததா வன்னி மரத்தடியில் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தால் நாக தோஷம் நீங்கும் என்கிறது தலவரலாறு” என்றார் பாட்டி மேலே கைகாட்டியபடி. “அப்படின்னா கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதும் போலிருக்கே?”“ஆமா யுகா. கொடுமுடியில என்னைக்கும் விசேஷம்தான். காலை 6:30 -12:00 மணி வரைக்கும், மாலை 4:30 - 9:00 மணி வரைக்கும் திறந்திருக்கும். இங்கிருந்து தான் காவிரி கிழக்கு மேற்காக பாய்ந்து சோழ நாட்டை வளம் மிக்கதாக மாற்றியது. ஒரு சமயம் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கி வைக்க பஞ்சம் ஏற்பட்டது. அதைப் போக்க விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட அது இப்படி திசை மாறி ஓடியது'' ''சரி, அடுத்த வாரம் எனக்கு நீ எதை தட்டி விடப்போற பாட்டி?”“இந்தா... இந்த தேனை சுவைத்தபடியே கொஞ்சம் யோசி பார்ப்போம்” என தேன் குப்பியை எடுத்து யுகன் கையில் திணித்து விட்டுச் சென்றார் பாட்டி. அதை திறந்தபடியே யோசிக்கத் தொடங்கினான் யுகன்.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882