வாலை சித்தர்
காளி பக்தரான வாலை சித்தர் பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார். இவரது இயற்பெயர் வேலாயுதசுவாமி. இவரது பெற்றோர் வேலையன், அடக்கியம்மாள். 'தினமும் என் காளிக்கு உணவு கொடு' என அம்மாவிடம் கேட்பார் வேலாயுதசுவாமி. சாப்பிட்டதும் காளியே சாப்பிட்டதாக தெரிவிப்பார். பசித்தால் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என நினைக்க மாட்டார். ஒருமுறை பசித்த போது சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயிலில் இருந்தார். வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், கைகளில் கேடயம், வில், அம்பு ஏந்தியபடி கருவறையில் காளி காட்சியளித்தாள். நைவேத்யம் செய்ய உணவு தயாராகி கொண்டிருந்தது. ''சாப்பாடு எனக்கு கொடுங்களேன்'' என பூஜாரியிடம் கேட்டார். ''அம்மனுக்கு நைவேத்யம் செய்த பிறகு தருகிறோம்'' என்றார். “நான் காளியின் மகன்” என கையை நீட்டினார். பூஜாரி உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். ''பிரசாதத்தை முடிந்தால் நீயே எடுத்துக் கொள்” என்றார் பூஜாரி. “நான் எடுப்பது கூடாது. நீங்களே கொஞ்சம் கொடுங்கள்” என்றார். அதை பொருட்படுத்தாமல் காளிக்கு பிரசாதம் வைத்தார் பூஜாரி. அதில் சிறிது எடுத்துக் கொண்டு வேலாயுத சுவாமி கோயிலில் இருந்து வெளியேறினார். அப்போது அசரீரி ஒலித்தது. 'என் மகனுக்கா இந்த கதி? அவனை மதிக்காத இடத்தில் நானும் இருக்க மாட்டேன்' என குரல் கேட்டது. ''சுவாமி...சுவாமி...'' என சப்தமிட்டபடி பக்தர்கள் பின்தொடர்ந்தனர். அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். ''சரி... காளி இங்கேயே இருக்கட்டும்'' என்றார் வேலாயுதசுவாமி. அவரின் தெய்வத் தன்மையை உணர்ந்து அன்று முதல் 'சித்தர்' என அழைத்தனர். சித்தரின் பக்தர் ஒருவர் சிவகங்கை பகுதியை ஆண்ட மருது சகோதரர்களிடம் பணிபுரிந்தார். அவர் மூலமாக சித்தரைப் பற்றி அறிந்த மன்னர்கள் சந்திக்க வந்த போது அவர்களிடம், '' நிலத்தை தானம் அளித்தால் ஆசிரமம் அமைப்பேன்'' என்றார் சித்தர்.''சுவாமி! தங்களின் மகிமையை காண விரும்புகிறோம்'' என்றனர் மருது சகோதரர்கள். சிறிது நேரம் கண் மூடி தியானத்தில் ஈடுபட்டார். அவர்களுக்கு காளி காட்சியளித்தாள். மருதுசகோதரர்கள் வழிபட்டனர். ஆனால் அவர்களின் குதிரைகள் காளியைப் பார்த்து மிரண்டு ஓடின. இதுவும் நன்மைக்கே எனக் கருதிய அவர்கள், '' எவ்வளவு துாரம் குதிரைகள் ஓடுகிறதோ அப்பகுதியை தானம் தருகிறோம்'' என்றனர். குறிப்பிட்ட துாரத்தில் குதிரைகள் நின்று கனைத்தன. வாக்களித்தபடி நிலம் சித்தருக்கு தரப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த பொங்கி சுவாமிகளின் வழிகாட்டுதலால் ஆன்மிக பயிற்சிகளில் ஈடுபட்டார். இதன்பின் வராகியம்மனின் அருளைப் பெற யாகம் ஒன்றை நடத்தினார். அதில் இளம்பெண்ணாக(வாலை) காட்சியளித்து வரம் கொடுத்தாள். இதனால் 'வாலை சித்தர்' எனப் பெயர் பெற்றார். திருப்புத்துார் - சிவகங்கை சாலையிலுள்ள சாமியார் மடத்தின் கட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தலில் இவரது சமாதி உள்ளது.