உள்ளூர் செய்திகள்

உழைக்கும் கரங்களே...

பாண்டவரில் மூத்தவரான தர்மர் நீதியின் பாதையில் வாழ்ந்தவர். தர்மம் செய்தவர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நல்ல செயலே அவருக்கு அகம்பாவத்தை தந்தது. எப்படி? நான்தான் உலகிலேயே அதிக தர்மம் செய்துள்ளேன் என்பது தர்மரின் எண்ணம். பிறரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது கண்ணனுக்கு தெரியாதா... என்ன? தனது திருவிளையாடலை ஆரம்பித்தார். அதன்படி அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்தாள். தர்மர் அவளிடம், ''தங்கச் செம்பை பத்திரமாக வைக்காமல், ஏன் இப்படி செய்தீர்கள்'' என ஆச்சரியமாகக் கேட்டார்.அதற்கு அவள், ''எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை'' என அலட்சியமாக சொல்லிவிட்டு போனாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மர். பின் அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். அங்கு கண்ணபிரான், ''இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர். இவரின் பெயர் தர்மர்'' என மகாபலியிடம் அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான். மகாபலி, ''தாங்கள் சொல்வதெல்லாம் சரி. என் நாட்டு மக்கள் நன்றாக உழைப்பார்கள். எல்லோரிடமும் பணம் குவிந்துள்ளது. இதனால் தர்மம் என்ற சொல்லுக்கே இங்கு இடமுமில்லை, அவசியமுமில்லை. ஆனால் தர்மரது நாட்டிலோ ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் இவர் கொடை வள்ளலாக திகழ்கிறார். ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் தர்மரின் முகத்தைப்பார்க்க நான் வெட்கப்படுகிறேன்'' என சொன்னார். அப்போதுதான் தர்மருக்கு ஒரு உண்மை புரிந்தது. தர்மம் என்ற பெயரில் மக்களை உழைக்க விடாமல் செய்கிறோமே. அவர்கள் சோம்பேறியாவதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்துவிட்டோமே என வருந்தினார். இனி உழைக்கும் கரங்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டும் என சபதமெடுத்தார்.