உள்ளூர் செய்திகள்

குரங்கு மனசு

தன்னை நாடி வந்த இளைஞனிடம், ''என்ன வேண்டும்?'' என கேட்டார் துறவி. 'எனக்கு வாழ்வில் பிரச்னை வந்து கொண்டே இருக்கு. என்ன செய்வது என தெரியவில்லை' என அழுதான். ''சரி. நான் சொல்வதை செய்'' என ஒரு பெட்டி, சாவி, முகவரியைக் கொடுத்து, ''இதை பக்கத்து ஊரிலுள்ள ஒரு நபரிடம் சேர்த்துவிடு. ஆனால் அதுவரை திறந்து பார்க்காதே'' என சொல்லி அனுப்பினார்.'பிரச்னைக்கு தீர்வு கேட்டால் வேலை வாங்குகிறாரே' என யோசித்தபடி நடந்தான் அவன். சிறிது துாரம் சென்றதும் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்தான். அப்போது 'பெட்டியில் என்ன இருக்கும்' என அதை குலுக்கிப் பார்த்தான். அதற்குள் ஏதோ நகர்வது போலிருந்தது. ஆர்வத்தில் அதை திறந்ததும் எலி ஒன்று வெளியே தாவி ஓடியது. அதில் பழைய துணி, வடை துண்டு இருந்தன. 'ம். இவ்வளவுதானா' என நொந்தபடி பெட்டியை குறிப்பிட்ட நபரிடம் சேர்த்தபின் துறவியிடம் வந்தான். ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்த துறவி, ''ஏன் பெட்டியை திறந்தாய்'' எனக் கேட்டார். ''இல்ல. சுவாமி... தெரியாத்தனமா இப்படி செஞ்சுட்டேன்'' என தலைகுனிந்தான். ''பார்த்தாயா.. பிரச்னை வெளியே இல்லை. உன் மனதில்தான் இருக்கு. மனம்போன போக்கில் செல்வதால்தான் நீ பிரச்னைக்கு ஆளாகிறாய். முதலில் மனதை கட்டுப்படுத்து'' என்றார். ''ஆம். சுவாமி. தாங்கள் கூறுவது உண்மையே. இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்'' எனக் கேட்டான்.அவர் சிரித்துக் கொண்டே, ''மனம் ஒரு குரங்கு. எதைச் சொன்னாலும் அதற்கு நேர்மாறாகவே யோசிக்கும். விடாமுயற்சியால் மனதை கட்டுப்படுத்து. பிரச்னை எல்லாம் ஓடி விடும்'' என்றார் துறவி.