உள்ளூர் செய்திகள்

மனசுக்கேத்த மாப்பிள்ளை

ஜன.20 - கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்காஞ்சிக்கு அருகே கூரம் என்னும் ஊரை ஆட்சி செய்த நந்தா, பெருந்தேவி நாயகிக்கு மகனாக பிறந்தவர் கூரத்தாழ்வார். பெற்றோர் இவருக்குத் திருமறுமார்பன் (ஸ்ரீவத்ஸாங்கர்) என பெயர் சூட்டினர். கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் சமஸ்கிருதம், தமிழ் மொழியில் புலமை பெற்றார். திருப்பதி உள்ளிட்ட பெருமாளின் திவ்ய தேசங்களுக்கு தந்தையார் சென்ற பிறகு ஆட்சி பீடத்தில் அமர்ந்தார் கூரத்தாழ்வார். ஒருநாள் இரவில் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் சென்றார். அப்போது இருளில் அந்தணர் ஒருவர், ''என் மகளின் பிறந்த நேரம் சரியில்லை எனக் காரணம் காட்டி அவளை யாரும் திருமணம் செய்ய முன் வரவில்லை. அவள் உயிர் வாழ்ந்து என்ன பயன்? அவளைக் கொல்ல நினைக்கிறேன்'' என அழுதபடி நின்றிருந்தார். இதைக் கேட்ட கூரத்தாழ்வாருக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மறுநாள் காலையில் அந்தணரை அழைத்து, ''நேற்றிரவு தாங்கள் கூறியதைக் கேட்டேன். தாங்கள் விரும்பினால் தங்களின் மகளை திருமணம் செய்து மனசுக்கேற்ற மாப்பிள்ளையாக நடப்பேன். பிறந்த நேரத்தைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் வாழ்வை கெடுப்பது கூடாது'' என்றார் கூரத்தாழ்வார். இதைக் கேட்டதும் அந்தணரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். தன் மகள் ஆண்டாளை திருமணம் செய்து கொடுத்தார். அவளும் பெயருக்கு ஏற்ப பக்தியுடன் இல்லறவாழ்வில் ஈடுபட்டதோடு பெருமாளுக்கு திருப்பணி செய்தாள். மக்களின் குறை தீர்க்கும் வள்ளலான கூரத்தாழ்வாரின் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவத்தை காண்போம். வேதவியாசர் எழுதியது பிரம்ம சூத்திரம். இதற்கு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். இதில் வியாசரின் சீடரான போதாயனர் எழுதிய விளக்கவுரை கிடைத்தால் நன்றாக இருக்குமே எனக் கருதினார் ராமானுஜர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அதன் ஒரே ஒரு பிரதி மட்டும் காஷ்மீரில் இருப்பதாக தகவல் வந்தது. தன் சீடர் கூரத்தாழ்வாருடன் காஷ்மீருக்கு சென்றார் ராமானுஜர். அறிவார்ந்த பேச்சால் மன்னரைக் கவர்ந்த ராமானுஜர் அந்த நுாலை மன்னரின் அன்பளிப்பாக பெற்றார். ஆனால் அவைப் புலவர்களோ எதிர்ப்பு தெரிவித்தனர். போதாயன விளக்கவுரை கிடைத்த மகிழ்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டார் ராமானுஜர். ஆனால் ஓரிரு வாரம் கழித்து காஷ்மீர் புலவர்கள் அனுப்பிய கூலியாட்கள் சிலர் அந்நுாலை திருடிச் சென்றனர். ராமானுஜரால் இதை தாங்க முடியவில்லை. அப்போது கூரத்தாழ்வார் மிக பவ்வியமாக, ''சுவாமி கவலை வேண்டாம். பயணத்தின் போது ஒவ்வொரு நாள் இரவும், தாங்கள் துாங்கிய பிறகு போதாயன விருத்தி உரை நான் படித்தேன். அது அப்படியே என் மனதில் தங்கி விட்டது. தற்போது கேட்டாலும் அதை அட்சரம் பிசகாமல் சொல்ல முடியும்'' என்றார். ராமானுஜருக்கு போன உயிர் திரும்பி வந்தது. சீடர் கூரத்தாழ்வானை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.