தேசிய தெய்வீகம்
ஆன்மிக உணர்வு கொண்ட யாரும் தேசிய உணர்வில் இருந்து பிறழ முடியாது என்பதை இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள் நமக்கு உணர்த்தியுள்ளனர். ஆவணப் பதிவாக உள்ள போராளிகளைத் தவிர, வெளி உலகிற்கு தெரியாமல் எத்தனையோ லட்சம் பேர் தியாகிகளாக இருந்திருக்கிறார்கள். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிர் நீத்த ஒவ்வொருவரும் இந்த வகையில் தியாகி தானே!உயிரிழந்தோர் தவிர, உடல் உறுப்புகளை இழந்தவர்களும் நம்முடைய போற்றுதலுக்கும், அஞ்சலிக்கும் உரிய தியாகிகள் தான். இந்த தேசிய உணர்வு 400 ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக நம்முள் ஊறிவந்திருக்கிறது; அதனால்தான் நம்மில் மிக அதிக சதவீதத்தினர், இப்போதும் ஒட்டு மொத்த தேசிய நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறோம். இத்தனை போராளிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக நாம் இப்போது அனுபவிக்கிறோம். இதன் அடிநாதம் ஆன்மிகம்தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இன்றைக்கும், தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் சுதந்திர தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது சிதம்பரம் நடராஜர் கோயில். அது என்ன விவரம்?சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்கிறார்கள். அனைவரும் கைகளைக் கூப்பி கண்ணீர் பனிக்க அந்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருக்கிறார்கள். திசைக்கு ஒன்றாக நான்கு நெடிதுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது இக்கோயில். இவற்றில் குறிப்பாக கிழக்கு கோபுரத்தில் பரத நாட்டிய பாவங்களைக் காட்டும் 108 சிற்பங்கள் அழகுற நிர்மாணிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இந்த சிற்பங்களையா கை கூப்பி பார்த்து நெகிழ்கிறார்கள்?இல்லை, வேறொரு காரணம் இருக்கிறது. கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயில்தான். அந்தத் தில்லைக் கூத்தனின் களிநடனமே இந்த பிரபஞ்சத்தின் இயக்கமாகிறது. துாக்கி ஆடும் இடது பாதத்தின் கட்டை விரலுக்குக் கீழே நேர்க்கோடு போட்டால், அது பூமியின் மையப் புள்ளியைச் சென்றடையும் என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பெருமானின் திருநடனத்தை, 'காஸ்மிக் டான்ஸ்' என அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள். அதோடு, ஆன்மிகத்திலும் சரி, அறிவியலிலும் சரி, நம் பாரதமே உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி என பறைசாற்றக் கூடிய பல ஆதாரங்கள் இக்கோயிலில் இருப்பதாக ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டைப் பெருமைப்படுத்தும் அற்புத வழிபாடு ஒன்று மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகத்தான் கோயிலுக்கு வெளியே, அந்த கோபுர வாசலில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் நாள் அதிகாலையில் கோயிலினுள் தீட்சிதர்கள் கூடுகிறார்கள். வழக்கமான வழிபாட்டு சம்பிரதாயத்துடன் அன்றைய தினம் மட்டும் விசேஷமாக சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆமாம், தேச நலனுக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் நடராஜரை வேண்டி, மந்திரங்கள் ஓதப்படுகின்றன. கூடவே தவில் பக்க வாத்தியத்துடன் மங்கலமாக நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது. ஒரு அகன்ற வெள்ளித் தட்டைக் கொண்டு வருகிறார்கள். அதில் மூவர்ண தேசியக் கொடியை மடித்து வைக்கிறார்கள். இந்தத் தட்டு மூலவர் நடராஜர் சன்னதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கே அந்தத் தில்லைக் கூத்தனின் பாதத்தில் அதை சமர்ப்பிக்கிறார்கள். மீண்டும் தேவார, திருவாசக தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. பிறகு நடராஜர் அனுமதியளித்ததை மானசீகமாக உணர்ந்து அந்த தட்டைக் கருவறையிலிருந்து எடுத்து வருகிறார்கள். இந்தியக் கொடியைப் பிரித்து நீண்ட கழியில் கட்டுகிறார்கள். அதன் உச்சி முனையில் நடராஜருக்கு சாத்தப்பட்ட மலர் மாலை சூட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கொடிக் கம்பத்தை ஒருவர் பிடித்துக் கொண்டு வருகிறார். கொடியை அர்ச்சித்த மலர்களும், அட்சதைகளும், வெள்ளித் தட்டில் நிரவியிருக்கின்றன. இந்தத் தட்டை ஒரு அர்ச்சகர் இரு கரங்களாலும் தாங்கி, எடுத்து வருகிறார். தீட்சிதர்கள் மந்திரம் முழங்க, நாதஸ்வர இசை முன்னே செல்ல அந்தக் கொடிக் கம்பத்தையும், கொடித் தட்டையும் கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து எடுத்து வருகிறார்கள். பின்னர் கிழக்கு கோபுர அடிவாரத்தை அடைகின்றனர். கோயிலுக்கு உள்ளிருந்தபடியே கோபுரத்தினுள் செல்லும் படிகள் வழியாக மேலே ஏறுகிறார்கள். ஏழு நிலை கொண்ட அந்த கோபுரத்தின் உச்சி நிலைக்கு வந்ததும், அந்த நிலையின் வாசல் வழியாக வெளியே வந்து, அதற்கு மேலே உள்ள சிகரத்தில் தேசியக் கொடிக் கம்பத்தைப் பொருத்துகிறார்கள். இப்படியாக ஆகஸ்ட் 15 அன்று கோயில் கோபுரத்தில் பளிச்சென மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அதே சமயம் வெள்ளித் தட்டில் இருந்த மலர்கள், அட்சதையை துாவுகிறார்கள். கீழே கூடியிருக்கும் பக்தர்களின் தலைமீது அவை சுவாமியின் ஆசியாக விழுகின்றன. அவர்கள் தம் கன்னங்களில் உள்ளங்கைகளால் தட்டிக் கொண்டு தேச பக்தியைத் தெரிவிக்கிறார்கள். சிலர் இரண்டு கைகளையும் தலை மீது மீது உயர்த்தி 'நமசிவாய... பாரத மாதா கீ ஜெய்... நமசிவாய' என மனமுருகி பிரார்த்திக்கிறார்கள். கீழே கோயில் சுவரில் 'ஜெய்ஹிந்த் - சர்வசித்து வருஷம் ஆடி மாதம் 30ம் தேதி (15.8.1947) - இந்தியா சுதந்திரம் பெற்ற நன்னாள்' என எழுதப்பட்டிருக்கும் கற்பலகை பதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் மலர்கள் துாவப்படுகின்றனஇந்தியக் கொடிக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. இப்படி இந்த கொடி உற்ஸவத்தைக் காண வரும் பக்தர்களுக்கு இனிப்புகள் தவிர, பயன் தரும் செடிகள், மரக்கன்றுகள் பிரசாதமாக தரப்படுகின்றன. இந்த வைபவம் இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டில் இருந்தே 78 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அனுசரிக்கப்படுகிறது. இதே வைபவம் இந்தியக் குடியரசு நாளிலும் (ஜனவரி 26) இக்கோயிலில் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசியமும், தெய்வீகமும் நம் கோயில்களில் பூரணமாக நிலவி வருவது மெய் சிலிர்க்க வைக்கிறது.