உள்ளூர் செய்திகள்

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 15

வ.உ.சிதம்பரனார்ஆங்கிலேயர் நமக்குப் பூட்டியிருந்த அடிமைத் தளையைத் தகர்த்தெறிவது எப்படி?ஒத்துழையாமை, வரிகொடாமை, சத்யாகிரகம், பேரணி, பத்திரிகைக் கட்டுரைகள் மூலமாக எதிர்ப்பு என்பதையெல்லாம் விட இன்னொரு முயற்சியிலும் இறங்கினால் என்ன என வித்தியாசமாக சிந்தித்தவர் வ.உ.சிதம்பரனார்.அது என்ன முயற்சி?வணிக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயர்கள், நாளடைவில் நம் பலவீனங்களை சாதகமாக்கிக் கொண்டு நம்மை ஆளத் தொடங்கினர். அதே வணிகரீதியில் இவர்களை வீழ்த்த முடியுமா? கடல் போக்குவரத்தில் அவர்களுக்குப் போட்டியாக இறங்கினால் என்ன?இந்த எண்ணத்தில் வாடகைக்காவது பயணிகள் கப்பல் ஒன்றை வாங்கி மக்களுக்கு சேவை புரியலாமே என யோசித்தார் அவர். இதன் மூலம் பொருளாதார பலத்துடன் ஆங்கிலேயரை எதிர்க்க உறுதி கொண்டார். நெற்றியில் திருநீறு, குங்குமம், கோட்டு, அங்கவஸ்திரம், தலைப்பாகை என கம்பீரத் தோற்றம் கொண்டவர் சிதம்பரனார். தம் கருணை மிக்க விழிகளால் அனைவரையும் வசீகரித்தவர். அதனாலேயே அவரது பேச்சுக்கு மரியாதை செலுத்தினர் மக்கள். உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதிக்கு செப்.5, 1872ல் மூத்த மகனாகப் பிறந்தவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. வளம் மிக்க குடும்பம் இவருடையது. சிதம்பரனார் பிறந்த ஊரான ஒட்டப்பிடாரம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட தலம். தன்னுடைய ஆறு வயதில் வீரப்பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றார் சிதம்பரனார். வீட்டில் பாட்டி சொன்ன சிவபெருமான் கதைகளையும், தாத்தா சொன்ன ராமாயணக் கதைகளையும் கேட்டு தன் தமிழறிவையும், இறை பக்தியையும் வளர்த்துக் கொண்டார். அல்லிக்குளம் சுப்ரமணிய பிள்ளை உணர்வு பூர்வமாகச் சொன்ன மகாபாரதக் கதைகள், இவர் இதயத்தில் ஆழமாக பதிந்தன. அந்த பால பருவத்திலேயே குதிரையேற்றம், சிலம்பாட்டம், வில்வித்தை, வாள் சண்டை, நீச்சல், மல்யுத்தம், சதுரங்கம் என பல துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொண்டார். ஆரம்பக் கல்வியை முடிக்கும் தருணத்தில் கிருஷ்ணன் ஐயங்கார் என்ற தாலுகா அலுவலக அதிகாரியிடம் ஆங்கிலம் கற்றார். ஆனால் ஐயங்கார் இடமாற்றம் செய்யப்பட்டபோது இவருடைய ஆங்கிலக் கல்வி தடைபடக் கூடாதே என்பதற்காக தந்தையார் உலகநாதன் பிள்ளை, மகனை முன்னிட்டே நடுநிலைப் பள்ளி ஒன்றை உருவாக்கி அதில் எட்டயபுரத்தைச் சேர்ந்த அறம் வளர்த்த பிள்ளை என்பவரை ஆங்கில ஆசிரியராக நியமித்தார். ஒரு பள்ளிக்கூடம் நிறுவும் அளவுக்கு சிதம்பரனாரின் குடும்பம் வளமாக இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சியில் வழக்கறிஞர் பட்டம் பெற்று ஒட்டப்பிடாரம் திரும்பினார். இடையே சென்னைக்குப் போயிருந்த அவர் சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தாவை சந்தித்து ஆசி பெற்றார். தேசிய சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அதே காலகட்டத்தில் மகாகவி பாரதியாரையும், சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பராயினர். ஏற்கனவே ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என நீறு பூத்த நெருப்பாக சிதம்பரனார் மனதில் ஒளிர்ந்த நெருப்பு இப்போது பல நிறுவனங்களாக வடிவங்கள் கொண்டது. ஆமாம், யுவனேஷ் பிரசார சபை, தர்மசங்க நெசவு ஆலை, தேசிய கிடங்கு, மெட்ராஸ் அக்ரோ இண்டஸ்ட்ரியல் சொசைட்டி லிமிடெட், தேசாபிமான சங்கம் என பல ஜூவாலைகளைப் பரப்பியது அந்த மனத்தீ. எல்லாவற்றிற்கும் உச்சமாக ஆங்கிலேயர்கள் நடத்திய இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துக்கு சவால் விடும் வகையில், 1906 அக்டோபர் மாதம் 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தை நடத்த பத்து லட்ச ரூபாய் மூலதனம் தேவைப்பட்டது. ஆகவே முகமதிப்பு ரூ.25 என்ற விலையில் 40,000 பங்குகளை அவர் விற்பனை செய்தார். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த யாரும் பங்குதாரராகச் சேரலாம் என்றும் அழைத்தார். பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர், ஹாஜி பக்கீர் முகமது, சேலம் விஜயராகவாச்சாரியார் போன்றோர் பெருமளவு பங்குகளை வாங்கி நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். ஆரம்ப கட்டத்தில் இந்தக் கப்பல் நிறுவனம் தனக்குச் சொந்தமாக கப்பல் எதுவும் வாங்கவில்லைதான்; அதற்கு மாற்றாக குத்தகைக்கு கப்பல்களை எடுத்து வாணிபத்தைத் தொடங்கலாம் என திட்டமிட்டனர். அதன்படி ஷாலைன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கப்பலைப் பெற்றனர். சிதம்பரனாரின் வியாபார சாதுர்யம் ஆங்கிலேயரை மலைக்க வைத்தது. அவருடைய செயல்பாடுகள் எல்லாமே தாங்கள் அமல் செய்திருந்த சட்டத் திட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதால் சட்ட ரீதியாக அவருடன் மோத முடியவில்லை. அதோடு தேச விடுதலையில் ஆர்வம் கொண்டிருந்த மக்கள் ஆங்கிலேயரின் கப்பலைப் புறக்கணித்துவிட்டு சுதேசி கப்பலைத் தேர்ந்தெடுத்தனர். குறுக்குவழியில் சென்றால்தான் மடக்க முடியும் என தீர்மானித்த ஆங்கிலேயர், ஷாலைன் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். குத்தகைப் பணத்தை உடனே செலுத்த வேண்டும் எனக் கேட்டு சிதம்பரனாரை நிர்ப்பந்திக்குமாறு மிரட்டினர். அரசுக்கு பயந்த ஷாலைன் நிறுவனம், சிதம்பரனாருடனான குத்தகை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதனால் சுதேசி கப்பல் நிறுவன பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கெல்லாம் அசராத சிதம்பரனார், இலங்கை நிறுவனத்திடமிருந்து ஒரு சரக்குக் கப்பலைக் குத்தகைக்கு எடுத்தார். அதே சமயம், தம் நிறுவனத்திற்கென சொந்தமாக கப்பல் வைத்துக் கொண்டால் இதுபோன்ற சங்கடத்தை தவிர்க்கலாம் என தீவிரமாக யோசித்தார். ஆகவே தன் நிறுவனத்தின் பங்குகளை விற்றும், இந்தியா முழுவதும் பயணம் செய்தும் நிதி திரட்டினார். இந்தப் பயணத்தின் போது பாலகங்காதர திலகர், அரவிந்த கோஷ் போன்ற சுதந்திரப் போராளிகள் அவருக்கு ஆதரவளித்தனர். தான் சொந்தமாக கப்பல் வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ச்சி ததும்ப அவர் விவரித்தபோது, சுதந்திர வேட்கை மிக்க பல வணிகர்கள் தாராள நிதி உதவி அளித்தனர். அதனால் அவரால் பிரான்ஸ் நாட்டில் இருந்து எஸ்.எஸ்.காலியா என்ற கப்பலை வாங்க முடிந்தது. அது 1500 பேர் பயணிக்கவும், 4000 சரக்கு மூடைகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் பிரமாண்டமானதாக இருந்தது.இந்த சாதனையை பாரதியார் தன்னுடைய 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டு சிதம்பரனாரை பாராட்டினார். இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பரவ சுதந்திர தாகம் கொண்ட தேசிய விசுவாசிகள் ஆயிரக்கணக்கில் சுதேசி கப்பலில் பயணம் செய்தனர். அதோடு பெருமளவு வணிக சரக்குகளும் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களாகி நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்தன. இந்தக் கப்பல் மூலம் கிடைத்த வருவாய் சிதம்பரனாருக்கு உற்சாகத்தையும், ஆங்கிலேயருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியாக ஒரு தனி மனிதன், ஒரு அரசாங்கத்துக்கே சவால் விடுவதா! தென்னிந்திய கடல் பரப்பில், 'வந்தே மாதரம்' என்ற வாசகத்துடன் ஒரு 'அடிமை' யின் சொந்தக் கப்பல் கொடி கட்டிப் பறந்ததோடு, அதில் பயணம் செய்த அனைவருக்கும், பயணத்தின்போது தேசிய விடுதலையின் முக்கியத்துவம் போதிக்கப்பட்டதும், கும்பினியாருக்குக் குடலைப் பிசைந்தது. குத்தகை கப்பல் என்றால் குத்தகைதாரரை மிரட்டி சிதம்பரனாரை ஒருவழி பண்ணலாம். ஆனால் இது அவருடைய நிறுவனத்தின் சொந்தக் கப்பல். ஒன்றும் செய்ய முடியாது. குதர்க்கமாக ஏதாவது செய்து சிதம்பரனாரை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டினர்.-தொடரும்பிரபு சங்கர்72999 68695