சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 17
மதன்லால் திங்கராஅமிர்தசரஸில் மிக வசதியான பஞ்சாபி குடும்பத்தில் 1883, பிப்.18ல் பிறந்தவர் மதன்லால் திங்கரா. பள்ளிப் படிப்பை முடித்த இவர் லாகூர் அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றார். அங்கே பரவியிருந்த தேசியவாத இயக்கம் இவரை ஈர்த்தது. அதைவிட இந்தியர்கள் பஞ்சங்களை சந்திப்பதும், வறுமையில் வாடுவதும் இவரது உள்ளத்தை வேதனைப்படுத்தியது. இதில் இருந்து மீள இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதுதான் ஒரே வழி என புரிந்து கொண்டார். அந்நிய நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து இந்திய தயாரிப்புகளில் ஈடுபட்டால் நாடு தன்னிறைவு அடைய முடியும் என்ற சுதேசி இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலுமாக உடன்பட்டார். இந்த எதிர்ப்பைக் காட்ட அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் படித்த போது மாணவர்கள் அணியும் ப்ளேஸர் என்ற கோட்டு, பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துணியால்தான் தயாரிக்கப்பட வேண்டும் என கல்லுாரி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்த திங்கரா, இந்தியத் துணிகளில்தான் ஆடை தைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அதன் விளைவாக கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார்.இதில் வேதனை என்னவென்றால், அவருடைய தந்தையார் டாக்டர் டிட்டாமால் திங்கரா, தேசிய உணர்வு இல்லாமல், நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரவும், இனி இது போன்ற 'ஒழுங்கீனமான' செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கவும், மகன் மதன்லாலை நிர்ப்பந்தப் படுத்தினார். அவர் கோரிக்கையை மறுத்த மதன்லால், நாட்டுப் பற்று இல்லாத தந்தையுடன் வாழ விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறினார். சிம்லா மலையடிவாரத்தில் ஒரு நிறுவனத்தில் எழுத்தராகப் பணி ஏற்றார். குறிப்பாக கோடை காலங்களில் உல்லாசம் அனுபவிக்க வரும் ஆங்கிலேயர்களை, குதிரை பூட்டிய டோங்கா வாகனத்தில், அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், பிறகு அவரவர் வசிக்கும் விடுதிகளுக்குக் கொண்டு சேர்க்கவும் அந்த நிறுவனம் உதவி புரிந்தது. ஏற்கனவே ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்கும் நெருப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருந்ததால், இந்த வகையிலும் அவர்களுக்குத் தான் அடிமை செய்ய விரும்பாமல் அந்த வேலையை விட்டு விலகினார் மதன்லால். இதையடுத்து ஒரு தொழிற்சாலையில் கீழ்மட்ட தொழிலாளியாகப் பணி ஏற்றார். இங்கும் எல்லா துறைகளிலும் இருப்பது போல பிரிட்டிஷ் அரசின் சர்வாதிகாரம் தலை விரித்து ஆடியது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், குறைந்த பட்ச சலுகைகளையும் நிறைவேற்றாமல், பரஸ்பரம் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அவ்வப்போது ஊதியம் நிர்ணயிக்கப்படும் கொடுமையையும் கண்ட அவர், இவை குறித்து சட்ட பூர்வமாக முறையிட தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்தார். இதற்காகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு பம்பாய் சென்று அங்கே அற்பமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதற்கிடையில் இவர் மீது கவலை கொண்ட இவரது தாயார், சகோதரரான மருத்துவர் பிஹரிலால் இருவரும் வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தனர். சகோதரரின் கண்டிப்பால் லண்டனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொண்டார் மதன்லால். படிக்கும் போதே 1905ல், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற இந்தியர், லண்டனில் நிறுவிய இந்தியா ஹவுஸ் பற்றி கேள்விப்பட்டார். அது இந்தியப் புரட்சியாளர்களின் சந்திப்பு தலமாக இருந்ததை அறிந்து மகிழ்ச்சி கொண்டார். இங்கே அவருக்கு விநாயக் தாமோதர் சாவர்க்கர், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் தொடர்பு கிடைத்தது. அதன் பின் சாவர்க்கர், அவரது சகோதரர் கணேஷ் இருவராலும் நிறுவப்பட்ட 'அபினவ் பாரத் மண்டல்' என்ற ரகசிய அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷார் வங்கப் பிரிவினையை உருவாக்கினர். இதற்குத் தங்கள் எதிர்ப்பை இந்த விடுதலை இயக்கம் பகிரங்கமாகத் தெரிவித்தது. இதில் இன்னொரு வேதனை, அமிர்தசரஸில் தலைமை மருத்துவராகவும், ஆங்கிலேயருக்கு விசுவாசமாகப் பணியாற்றிய தகப்பனார் டிட்டா மால் திங்கரா, மகனின் செயல்களால் பாதிக்கப்பட்டதுதான். அவருடைய கோபம், 'இனி மதன்லால் என் மகனே அல்ல, எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை' என பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடும் அளவுக்குப் போய்விட்டது. மதன்லால் மனம் வருந்தவில்லை. 'பாரதமே என் தாய். அதற்கே பரிபூரண விசுவாசம் கொண்டவனாக விளங்குவேன், அதன் விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணிப்பேன்' என உற்சாகத்துடன் கூறினார். அதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தியாவில் வைஸ்ராயாகப் பதவியேற்று பல இந்தியர்களின் உணர்வுகளையும், வாழ்வையும், வெவ்வேறு சட்டங்களால் நசுக்கி மகிழ்ந்த கர்சன் வில்லி என்பவன், அப்போது பதவி ஓய்வு பெற்று இங்கிலாந்துக்குத் திரும்பியிருந்தான். ஆனாலும், அங்கு வசிக்கும் பிரிட்டிஷ் விசுவாசிகளான இந்தியர்களைச் சந்தித்து இந்திய விடுதலைக்கு எதிரான அவர்களுடைய அடிமை உணர்வை அவன் வளர்த்துக் கொண்டிருந்தான். இதில் கொடுமை என்னவென்றால், மதன்லாலின் தந்தை, இவனுக்கு நெருக்கமானவர் என்றும், அவன் தயவால்தான் பதவி உயர்வு கிடைக்கப் பெற்றவர் என்றும் சொல்லப்பட்டதுதான். அந்த வில்லியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என முடிவெடுத்தார் மதன்லால். அதை அப்போது அவன் பங்கேற்கவிருந்த, வருடாந்திர கூட்டமான 'அட் ஹோம்' நிகழ்ச்சி நடைபெறும்போதே நிறைவேற்ற திட்டமிட்டார். நீலநிற பஞ்சாபி தலைப்பாகையுடன் கம்பீர நடை போட்டு அரங்கிற்குள் சென்றார். ஏற்கனவே அங்கே பல இந்தியர்கள் இருந்ததால் இவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. கூட்டம் முடிந்து வில்லி மனைவியுடன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். அப்போது அவனுக்கு நேர் எதிரே வந்து நின்ற மதன்லால், தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த துப்பாக்கியால் அவன் முகத்தில் ஐந்து முறை சுட்டார். அங்கேயே இறந்தான் வில்லி. இவனைக் காப்பாற்றுவதற்காக கவாஸ் லால்காக்கா என்ற பிரிட்டிஷ் அடிவருடியான இந்தியர், மதன்லால் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட மேலும் இரு தோட்டாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். தன் நோக்கம் நிறைவேறிய நிறைவில் தப்பித்து ஓட முயற்சிக்கவில்லை மதன்லால். அங்கேயே நின்றிருந்தார். அவர் நினைத்திருந்தால் மேலும் தோட்டாக்களை வீசி கூடுதல் குழப்பத்தை உண்டு பண்ணித் தப்பிக்க முயற்சித்திருக்கலாம்; அவரைக் காப்பாற்றி ரகசியமாகப் பாதுகாத்துப் பராமரிக்க, ஆங்கிலேயர்களுக்கு எதிரான அப்போதைய ஐரிஷ் புரட்சியாளர்கள் உதவியிருப்பார்கள். அவர்கள் ஒத்துழைப்பால் அவர் பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்று அரசியல் அகதியாகவும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அமைதியாக நின்றிருந்தார். 'இத்தகைய மனோதிடம் கொண்ட நபரை நாம் இதுவரை சந்தித்ததேயில்லை. சாதாரணமாகக் கொலை செய்துவிட்டு, அதைவிட வெகு அமைதியாக, முகத்தில் புன்னகை தவழ, கம்பீரமாக நின்றிருந்தார் மதன்லால்' என மறுநாள் பிரிட்டிஷ் பத்திரிகைகள் பாராட்டி எழுதின. கைது செய்யப்பட்ட மதன்லாலை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பிரதாயமான ஆரம்ப கேள்விகளுக்கு பதில் அளித்த மதன்லால், நீதிபதியைப் பார்த்து ஆணித்தரமாகத் தன்னிலை விளக்கம் அளித்தார். அது உலகோர் கவனத்தை ஈர்த்தது. என்ன விளக்கம் அது?-தொடரும்பிரபு சங்கர்72999 68695