உள்ளூர் செய்திகள்

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 29

மதன் மோகன் மாளவியாமதுரையில் வைத்தியநாத ஐயர் என்றால், உத்தர பிரதேசம் அலகாபாத்தில், மதன் மோகன் மாளவியா! ஆமாம்... அந்தணர் குடும்பத்தில் பிரிஜ்நாத், முன்னாதேவி தம்பதியருக்கு டிசம்பர் 25, 1861ல் பிறந்த இவரும் கோயில் வழிபாடு என்பது அனைத்து ஜாதியினருக்கும் அடிப்படை உரிமை என்பதை நிலைநாட்டினார். அவ்வாறு அங்குள்ள காலாராம் கோயிலின் ரத யாத்திரையில் 200 தலித் மக்களை ஈடுபடுத்தியதால் ஜாதியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.ஆனால் மனம் தளராமல், ''ஜாதி, மத பேதமற்ற அனைத்து மக்களின் ஒன்றுபட்ட உணர்வாலும், போராட்டத்தாலும்தான் இந்திய விடுதலை சாத்தியம்'' என முழங்கினார் மாளவியா. சமூக நலனில் அக்கறை கொண்ட இவர், கங்கை நதியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை முறியடித்தார். அதே போல ஆன்மிக ரீதியாக கங்கைக் கரையில் 'ஹர் கி பவுரி' (மஹாவிஷ்ணுவின் பாதம் பதிந்த படிகள்) என்ற பகுதியில் தினசரி ஆரத்தி வழிபாட்டை ஆரம்பித்தார். அன்று முதல் நுாறாண்டுக்கும் மேலாக அந்த வழிபாடு இன்றும் நடக்கிறது. இந்த மனப்பாங்கு கொண்டதாலேயே 1916ல் லக்னோ உடன்படிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்குத் தனி தொகுதி ஒதுக்கீடு செய்வதை மாளவியா எதிர்த்தார். ''யாரோ சிலரை திருப்திபடுத்தவே இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது; ஆனால் சிறுபான்மையின மக்களில் பெரும்பாலோர் இந்த ஏற்பாட்டை வரவேற்கவில்லை எனத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் இந்தியர்களாக, அனைவருடனும் இணைந்து வாழவே விரும்புகிறார்கள்'' என எதிர்ப்புக்கான காரணத்தை விளக்கினார். இதனால் நாடு பிளவுபடும் அவலமும் அதைத் தொடர்ந்து இந்தியரிடையே சகோதரத்துவம் பாதிக்கப்படும் சோகமும் நிகழும் என வலியுறுத்தினார். அதே ஆண்டு இந்தியர்கள் மீதும், இந்திய விடுதலை மீதும் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து 'பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை' உருவாக்கினார். தன் சொந்தப் பொறுப்பில் நடத்திய மத்திய ஹிந்து கல்லுாரியை இந்தப் பல்கலைக் கழகத்துடன் இணைத்து, மாணவர்களுக்கான கல்விப் பயிற்சியை மேலும் விரிவாக்கினார். அதோடு 1919 முதல் 1938 வரை இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்று ஒட்டு மொத்த பல்கலைக் கழகத்தையும் திறம்பட நிர்வகித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை மாளவியா முக்கியத் தலைவர்களில் ஒருவர். 1886ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தன் எழுச்சிமிக்க உரை மூலம் அனைத்து இந்தியர்களையும் கவர்ந்தார். ஆங்கிலேய அரசாங்கத்தைக் கலங்கடித்தார். 1930ல் காந்திஜி ஆரம்பித்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இந்திய தேசிய காங்கிரசில் தீவிர உறுப்பினராக சேவையாற்றி, அந்தக் கட்சியின் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் அங்கம் வகித்தார். ஆனாலும் தன் சொந்த கட்சியே, அரசியல் நாகரிகத்தில் இருந்து விலகுவதை அவர் கண்டித்தார். அதாவது சட்டமன்றத்தில் தம் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக, கொள்கையற்ற சிலருடன் சமரசம் செய்வது மற்றும் தனிநபர் லாபத்துக்காகச் செயல்படுவது போன்ற அநாகரிகங்களை அவர் கண்டித்தார். 14 ஆண்டுகள் (1912 முதல் 1926) தொடர்ந்து உறுப்பினராகப் பதவி வகித்ததில் இருந்து, மக்கள் மத்தியில் எத்தனை செல்வாக்கோடு இவர் திகழ்ந்தார் என்பது புரியும். எந்த சமரசத்துக்கும் உடன்படாதவர் என்பதால், தீரத்துடன் சைமன் கமிஷனை இவரால் எதிர்க்க முடிந்தது. அதனாலேயே 1931ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் இந்திய அடிமை நிலையை ஆணித்தரமாக இவரால் பதிவு செய்ய முடிந்தது. 'அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்போம், இந்தியப் பொருட்களையே பயன்படுத்துவோம்' என்ற கோஷத்தை வலு பெறச் செய்தார். அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் பிரசாரத்தை இவர் இங்கிலாந்திலேயே மேற்கொண்டது, இவரின் துணிச்சலை வெளிப்படுத்தியது. அடிமைத் தளையைத் தகர்த்தெறியும் இது போன்றக் கருத்துகளை தாம் நிறுவிய 'தி லீடர்' பத்திரிகையில் விரிவாகப் பிரசுரித்தார். ஏற்கனவே ஆங்கில நாளிதழ்களான ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் ஒபினியன், ஹிந்தி வார இதழான அபியுதயா ஆகியவற்றில் ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு இந்தியா சுதந்திரம் பெற வேண்டிய அவசியத்தை விவரித்தார். அற்ப காரணத்திற்காக இந்திய விடுதலைப் போராளிகளைக் கைது செய்து, சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்திய ஆங்கிலேய அரசால், மதன் மோகன் மாளவியாவை எளிதாகக் கைது செய்ய முடியவில்லை. மிகச் சிறந்த வழக்கறிஞர் என்பதால், தன் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்குகளைத் தம் வாதத் திறமையால் வென்றார். தன் சொந்த பாதுகாப்புக்காக மட்டுமன்றி, போராட்டங்களில் ஈடுபட்ட பல இந்திய சகோதரர்களின் விடுதலைக்கும் இவர் காரணமானார். உதாரணமாக 1924ல் சவுரி சவுரா என்ற இடத்தில், போராளிகள் ஒத்துழையாமை இயக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். வழக்கம் போல அரசு அங்கும் அடக்குமுறையைக் கையாண்டது. விளைவாக மூன்று போராளிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடைந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதை தாங்கிக் கொள்ள இயலாத சில போராளிகள் தாமும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த காவல் நிலையம் தீக்கிரையானது. 22 காவலர்கள் உயிர் துறந்தனர். இந்தக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என 225 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத அப்பாவிகள் சிலரும் கைதாயினர். அந்த அப்பாவிகளின் சார்பாக மதன் மோகன் மாளவியா வாதாடினார். அவர்களில் ஆறு பேர் போலீஸ் காவலில் இருந்த போது இறந்ததைக் கண்டித்தும், நிரூபிக்கப்பட முடியாத சாட்சியங்களைச் செல்லாததாக்கியும், 155 பேருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இந்திய மக்களுக்குள் பாரபட்சம் இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 1933ல் ஹரிஜன (தலித்) சேவா சங்கத்தை நிறுவி அதன் தலைவராக விளங்கினார். இந்த அமைப்பால் ஒடுக்கப்பட்டவர்கள் பலர் மேன்மை பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து ஆதரிக்கும் வகையில் அரும்பணி ஆற்றினார். அடிப்படை ஒழுக்கப் பயிற்சியால்அன்றி ஒருவரிடம் நற்பண்புகளைவளர்ப்பது கடினம் என்பதை தன் இளம் வயதிலேயே புரிந்து கொண்டவர் மதன் மோகன் மாளவியா. அதாவது அடக்குமுறை, முறைகேடான தண்டனைகளால் அடிமை உணர்வை மக்களிடையே வளர்த்த ஆங்கிலேய அரசு, மாணவப் பருவத்தினரையும் தம் வசப்படுத்தக் கையாண்ட உத்திதான் பள்ளிக்கூடம், கல்லுாரிகளையும் அமைத்தது. இந்த வலையில் இந்திய மாணவர்கள் சிக்கக் கூடாது என்பதால் நம் பாரம்பரியம், ஆன்மிக உணர்வுகளை மேம்படுத்த பிரத்யேகமான கல்விக் கூடங்கள் அமைக்க வேண்டும் என மதன் மோகன் மாளவியா உணர்ந்திருந்தார். அதற்காக 1889ல் அலகாபாத்தில் 'பாரதி பவன்' என்ற நுாலகத்தை நிறுவினார். 1915ல் அகில பாரத ஹிந்து மஹாசபையை உருவாக்கினார். பள்ளி மாணவ மாணவியரிடையே முறையான உடற்பயிற்சி, அறிவார்ந்த போதனைகள் மூலம் ஆன்மிகம், தேசிய உணர்வுகளை உருவாக்க 'பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் (Bharath Scouts and Guides) என்ற சாரணர் இயக்கதை உருவாக்கினார். வேதங்களின் அங்கமான முண்டக உபநிஷத்தில் இடம்பெற்ற 'சத்யமேவ ஜெயதே' அதாவது 'சத்தியமே வெல்லும்' என்ற சொற்றொடரை நாடெங்கும்பரப்பினார். இன்றளவும் நம் தேசிய சின்னத்தின் அங்கமாக இச்சொற்றொடர் விளங்குகிறது. இந்திய சுதந்திரத்துக்காகத் தனி வழிமுறையை வகுத்துக் கொண்டு போரிட்ட மதன் மோகன் மாளவியா, இந்தியா சுதந்திரம் பெற்றதைக் காணாமல் 1946ல் உயிர் நீத்தார்.-அடுத்த வாரம்: பத்மாசனி அம்மாள்பிரபு சங்கர்72999 68695