உள்ளூர் செய்திகள்

பொய் சொல்வது பாவம்

வாழ்க்கையில் எந்த இடத்திலேயும் பொய் சொல்லாமல் வாழ்ந்தால் சந்ததியில் சற்புத்திரன் பிறப்பான் என்பதற்கு கீழ்கண்ட நிகழ்ச்சி சிறந்த உதாரணம்.கங்கைக் கரையில் பிறந்த முருகப்பெருமானுக்கு 'காங்கேயன்' என ஒரு பெயருண்டு.அவர் விரும்பி குடியிருக்கும் ஊரினை காங்கேயநல்லுார் என அழைத்தனர். வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமானுக்காக வாழ்ந்த வாரியார் சுவாமிகள் அங்கு பிறந்தது சிறப்பு. வேலுாரில் இருந்து 8 கி.மீ., தொலைவில் இருக்கும் காங்கேய நல்லுாரில் கங்கேசர் என்ற பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டு திகழ்கிறார். அங்கு முருகப்பெருமானுக்கும் அவருடைய மாமா மகாவிஷ்ணுவிற்கும் கோயில் உள்ளது. அங்கு சிவபக்தியில் சிறந்து விளங்கியவர் சாமியண்ணா. ஐம்பத்தைந்து மைல் நடந்தே சென்று ஞான தபோதரனை வா என்று அழைக்கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் கொள்கை உடையவர். அவர் ஒருமுறை திருவண்ணாமலைக்கு நடந்தே சென்ற சமயத்தில் காங்கேயநல்லுார் உள்ளிட்ட வேலுார் பகுதியில் காலரா நோய் பரவியிருந்தது.ஊர் எல்லையில் சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து இருந்தனர். வெளியூர் அன்பர்களை விசாரணை செய்து, தடுப்பூசி போட்டு திருவண்ணாமலைக்குள் அனுமதித்தனர். வேறு சில அன்பர்களும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அவர்கள் அதிகாரியிடம் அரக்கோணம், குடியாத்தம் என பொய் சொல்லி ஊருக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர். பொய் சொல்ல விரும்பாத வாரியாரின் தாத்தா காங்கேயநல்லுாரில் இருந்து வந்ததாகக் கூற, அதிகாரி அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. சென்று வர நுாற்றுப்பத்து மைல் நடந்தது வீணே என்பதை கருதாமல் பொய் சொல்லி அண்ணாமலையாரை தரிசிப்பது பெரும்பாவம் எனக் கருதினார் சாமியண்ணா. அவருடைய நான்காவது மகனான மல்லையதாசருக்கு சற்புத்திரனாக பிறந்தவர் வாரியார் சுவாமிகள். அண்ணாமலையாரை வணங்குபவருக்கு பொய் சொல்வது பிடிக்காது. உண்மையான வாழ்க்கையை வாழ வைப்பவர் அண்ணாமலையார் என்பதை இவருடைய வாழ்க்கை வழி உணரலாம்.