உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 47

ஆரம்பமானது அக்ஞாதவாசம்தர்மன் தன் தந்தையான தர்மராஜனிடம் வரங்களைக் கேட்கத் தயாராகி முதல் வரமாக தான் வனத்தில் இழந்த ஒரு வேத பிராமணனுக்கு சொந்தமான அரணிக் கட்டையைக் கேட்டான். அடுத்த நொடியே அந்த அரணிக்கட்டை தர்மன் முன் தோன்றியது. ''தர்மா... மேலும் வரங்களைக் கேள். தயங்காதே! பிறருக்காக கேட்டது போதும். உனக்காகவும், உங்களுக்காகவும் கேள். வரங்களைப் பெற்றிடும் எல்லாத் தகுதியும் உனக்குள்ளது''''மகிழ்ச்சி தந்தையே! எங்களின் இந்த வனவாழ்வு குறித்து தாங்கள் அறிவீர்கள். இந்த வாழ்வில் 12வது ஆண்டில் நாங்கள் இருக்கிறோம். அடுத்து வரும் 13வது ஆண்டில் நாங்கள் ஒருவரும் அறியாத வண்ணம் மறைந்து வாழ வேண்டும். யாராவது அடையாளம் கண்டு கொண்டால் திரும்பவும் 12 ஆண்டுகள் வனவாழ்வு வாழ்ந்தாக வேண்டும். எனவே எங்களின் 13ம் ஆண்டாகிய அக்ஞாதவாச காலம் எவரும் அறியப்படாத காலமாக திகழ வரம் தர வேண்டும்'' எனக் கேட்டான். தர்மனுக்கு அந்த வரம் அளித்து, ''உங்களின் அக்ஞாத வாச காலத்தில் நீங்கள் யார் என்பதை நீங்களாக அறிவித்தால் அன்றி பிறர் உங்களை அறிய மாட்டார்கள். அது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் வேடம் உங்களுக்கு உண்டாகும். இந்த வரம் உங்கள் பத்தினியான திரவுபதிக்கும் பொருந்தும்'' என்றான். ''மிக்க மகிழ்ச்சி தந்தையே! மிகக் கடினமான காலம் தான் இந்த வனவாச காலம். ஆனாலும் நாங்கள் இந்த 12 வருட காலத்தில் பெற்ற அனுபவங்கள் நிகரில்லாதவை. அதேவேளை எங்கள் ஹஸ்தினா புரத்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய இயலாத சூழலை எண்ணி வருந்துகிறோம்'' ''புரிகிறது மைந்தா... விதியின் வழிப்பட்டதே வாழ்வு. அதைப் புரிந்து மதியை நற்கதிக்காக இயக்க வேண்டும். அதில் பிழை நேரிடும் போது மதி சோதனைக்கு ஆளாகிறது. சோதனை என வந்து விட்டாலே நல்லதும் கெட்டதும் கலந்தே நிகழும். எந்த நிலையிலும் மதியானது தவறான போக்கிற்கு சென்று விடக் கூடாது. சென்றால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். தர்ம நியாயங்களை தெளிவுற அறிந்த நீ சூதாடியதாலேயே இத்தனை கஷ்டங்கள். அதை அறிந்திராதவன் தவறிழைத்தால் அவனது அறியாமை அவனை மன்னிக்க வைத்து விடுகிறது. ஆனால் உன் விஷயம் அப்படியல்ல...எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து பண்டிதனாக திகழ்கிறாய். அப்படிப்பட்ட நீ சூதாடியது மன்னிக்க முடியாத குற்றம். அவ்வகையில் உண்டான தோஷமே இந்த வனவாசம் வரை கொண்டு வந்து விட்டது. ஆயினும் இந்த காலத்தில் நீங்கள் மேற்கொண்ட தீர்த்த யாத்திரை, முனிவர் தரிசனம், கேட்ட புராண கதைகள் ஆகியவை தோஷ நிவர்த்தியை உருவாக்கி விட்டது. இனி வரும் காலம் சாதகமாக அமையும். இழந்த நாட்டையும் பெறுவீர்கள்''''உங்கள் அறவுரை மனத்தெளிவு, தைரியத்தை தருகிறது. மிக்க மகிழ்ச்சி தந்தையே'' ''மைந்தா... நீ இன்னொரு வரத்தையும் கேள். தரச் சித்தமாக உள்ளேன்''''எந்த நாளும் தர்மநெறி தவறாமல், சான்றோர்களைப் போற்றியும், பித்ருக்களை வழிபட்டும், கருணை கொண்டும், சத்தியத்தைக் காப்பாற்றவும் இம்மண்ணில் வாழ்ந்திட வேண்டும். மற்றபடி தனியே என் நலனுக்கென ஏதுமில்லை தந்தையே''''உன் எண்ணப்படியே அதையும் அளித்தேன். நீங்கள் ஐவரும் அக்னி தேவதையான திரவுபதியோடு வாழ்வாங்கு வாழ்வீர்களாக. அதோடு உங்களின் இந்த ஆரண்ய பர்வத்தை கூறுபவர், அதைக் கேட்பவர் எல்லா நலன்களையும் அடைவர்'' என்று கூறிய தர்மதேவன் வரம் அளித்த நிலையில் அங்கிருந்து மறைந்தான். சகோதரர் ஐவரும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்ந்தனர்....பன்னிரண்டு வருட வனவாசம் முடிந்த நிலையில் மிகச் சரியாக 13வது வருடம் தொடங்கியது. இது அக்ஞாத வாசம் எனப்படும் மறைந்து வாழும் காலம். இதில் பாண்டவர்களை துரியோதனனோ அவனது சகாக்களோ அடையாளம் கண்டால் அவர்கள் தோற்றவர்கள் ஆவர். இதுவே அக்ஞாதவாச விதி. இது வனவாசத்தை விட கொடியது. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். பாண்டவரை அடையாளம் காண வேண்டி துரியோதனனும், சகுனியும் நுாற்றுவர் படையை உருவாக்கி ஏவியிருந்தான். நல்லவேளையாக தர்மராஜன் அளித்த வரம் பாண்டவருக்கு துணை நின்றது. படையில் உள்ள நுாறு பேரும் வனத்தின் பல இடங்களில் பாண்டவரைக் கண்ட போதிலும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவர்களைக் கண்டதும் பாண்டவர் சுதாரிப்பாயினர். துரியோதனன் தங்களைக் கண்டுபிடிக்க நுாறு பேரை ஏவி விட்ட செய்தியும் விதுரர் வாயிலாக தெரிந்தது. எனவே எச்சரிக்கையாக செயல்பட தீர்மானித்து மாறுவேடம் பூண முடிவு செய்தனர். மாறுவேடம் எனில் யார் எந்த வேடமிடுவது எந்த நாட்டில் அடைக்கலம் புகுவது என்ற கேள்விகள் உருவான போது எப்போதும் நல்வழி காட்டும் தவுமிய மகரிஷி உதவினார். அவர்களுக்கு ஏற்றதாக விராட நாட்டைக் குறிப்பிட்டார். அந்த நாளில் பாஞ்சாலம், மச்சம், சால்வம், வைதேஹம், பாஹ்லிகம், தசார்ணம், சூரசேனம், கலிங்கம், மாகதம் என பல நாடுகள் இருந்தன. இந்நாட்டு அரசர்களுக்கு துரியோதனன் ஓலை அனுப்பினான். அதில் பாண்டவருக்கு அடைக்கலம் தரும் பட்சத்தில் தனக்கு தகவல் தரக் கோரியிருந்தான். அவன் ஓலை அனுப்பாத ஒரே நாடு விராடம் மட்டுமே. இந்த அரசன் விராடனுக்கும் துரியோதனனுக்கும் பகை இருந்தது. தவுமிய மகரிஷி இதைக் குறிப்பிட்டு பாண்டவர்கள் அக்ஞாத வாச காலத்தை மேற்கொள்ள உகந்த தேசம் விராடனின் தேசமே என்றார். தேசம் முடிவான நிலையில் வேஷத்தையும் முடிவு செய்யும் நிலை உருவாயிற்று. தங்களை பிறர் உணராவிட்டாலும் தங்களின் செயலால் கண்டுபிடிக்கக் கூடும் என்பதால் பெயர் மற்றும் 12 மாத கடமை ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டிய நிலையில் தெளமியர் முதலில் தர்மனைப் பார்த்து, ''தர்மா.. உனக்கேற்ற வேடத்தையும், கடமையையும் நீயே முடிவு செய்'' எனக் கட்டளையிட்டார். தர்மனும் ஆலோசித்து விட்டு, ''நான் விராடனுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்லும் ஆலோசகனாக இருக்க விரும்புகிறேன். எனக்கு பொருத்தமான வேடமும் அதுவே. நீதி சாஸ்திரம் முதல் பட்சி சகுனம் வரை நான் அறிந்ததை கூறுவதோடு சொக்கட்டானிலும் விராடனுக்கு துணையாக இருப்பேன். அதற்கு பொருத்தமாக சன்யாசி ரூபம் கொண்டு 'கங்கன்' என்ற பெயரை சூட்டிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றான். ''அருமை... சரியான முடிவு'' என்ற தவுமியர் அடுத்து பீமனைப் பார்த்தார். பீமன் யோசிக்கும் முன் நகுலன் இடையிட்டு, ''அண்ணா... நீ சமையல் நிபுணன். உன் கைபட்டால் மண்பாண்டமும் பொன் பாண்டமாகும். பச்சை மரமும் பற்றி எரியும். எனவே உனக்கு சமையல் கலையே பொருத்தமானது'' என்றிட பீமனும் மகிழ்ச்சியுடன், ''அருமையான யோசனை. நான் தான் இனி விராடனின் சமையல்காரன். அதற்கேற்ப என் பெயரும் 'வல்லன்' என்றான். அடுத்து அர்ஜூனன்! ''மகரிஷி... இரு கைகளிலும் நான் வில்லேந்தி போரிட்ட அடையாளத் தழும்புகள் பல உள்ளன. அதை வைத்தே துரியோதனாதியர் அடையாளம் காணக் கூடும். எனவே எனது கைகள் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் ஆடை எனக்கு முக்கியம். அடுத்து என் அலை பாயும் சுருண்ட கேசத்தையும் துரியோதனன் அடையாளம் கண்டு விடுவான். எனவே நான் முற்றாக மாற பெண் வேடமே உகந்தது. ஆனால் திரவுபதி இங்கே இருப்பதால் பெண்ணியம் சார்ந்த அரவாணியாக திகழ்வதே எனக்கு ஏற்றது. அதற்கேற்ப இந்திரலோகத்தில் ஊர்வசியால் நான் பெற்ற சாபமும் எனக்கு உள்ளது. அதற்கேற்ப 'பிருஹன்னளை' என்ற பெயரில் அரவாணியாவேன்'' என்றான்.--தொடரும்இந்திரா செளந்தர்ராஜன் 98947 23450