உள்ளூர் செய்திகள்

ஊமத்தம்பூ நடராஜர்

காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் சுந்தரேசன். இவரது இஷ்ட தெய்வம் சிதம்பரம் நடராஜர். ஒருமுறை சுவாமிகளை தரிசித்த போது, ''சுந்தரேசா... நீ திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியில் உள்ள நடராஜர் சன்னதியை பார்த்திருக்கியா'' எனக் கேட்டார். நடராஜர் மீது எனக்கு ஈடுபாடு என இதுவரை நான் சொன்னதில்லையே... ஆனாலும் சரியாக கேட்கிறாரே என வியந்தபடி, ''பார்த்ததில்லையே சுவாமி'' என்றார் சுந்தரேசன்.''அங்கு என்ன விசேஷம் தெரியுமா...பெருமாள் கோயில்ல நடராஜர் இருக்கார். சிதம்பரத்தை விட விசேஷமானவர். பார்த்துட்டு வா. அப்புறம் என்ன ஸ்பெஷல்னு சொல்லு'' என்றார். சுந்தரேசன் கோயிலுக்குச் சென்றார். அர்ச்சகரிடம் 'காஞ்சி பெரியவாள் உத்தரவு' என்றதும் சன்னதிக்கு அழைத்துச் சென்றார் அர்ச்சகர்.நடராஜர் சன்னதியை உற்று நோக்கினார். திருவாசி, விரிந்த சடை, உடுக்கை, அனல் ஏந்திய கை, புன்னகை தவழும் முகம், துடிஇடை, துாக்கிய திருவடி, ஊன்றிய திருவடி என ஒவ்வொரு அங்கமாக ரசித்தார்.'என்ன ஸ்பெஷல்'ன்னு சொல்லணுமே? என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது. ''ஓ... இந்த ஊமத்தம்பூ. தலைகீழாக சிலையின் முன் உச்சியைத் தொடுவது போல் சரிந்து கிடக்கிறதே? முன்புறம் பத்து அடி தள்ளி நின்று பார்த்தார். பின்புறமாக சுற்றிய போது அதன் பின்னழகு கண்டு சொக்கினார். தன்னை மறந்த கோலத்தில் ஆனந்தமாக நடனமாடும் கோலத்தில் நடராஜர் வடிக்கப்பட்டிருந்தார். கோயில் தரிசனம் முடித்தபின் மடத்திற்கு வந்த போது, ''என்ன... நடராஜர் மெய் மறந்தபடி தாண்டவம் ஆடும் கோலத்தில் இருந்தாரா'' எனக் கேட்டார் மஹாபெரியவர். ''ஆம் சுவாமி. தலையில் இருக்கிற ஊமத்தம்பூ கூட நழுவி விழுவது போல தத்ரூபமாக இருக்கு'' ''பேஷ்! நன்னா கவனிச்சிருக்கே! ஒவ்வொரு கோயிலிலும் நடராஜர் ஒவ்வொரு நடனம் ஆடுகிறார். இங்கே 'உன்மத்த நடனம்' என்ற அபூர்வ நடனம் ஆடுகிறார். உன்மத்தம் என்றால் தன்னை மறந்து ஆடுதல், ஊமத்தம்பூ என இரண்டு பொருள் உண்டு'' என்றார் மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.