உள்ளூர் செய்திகள்

யார் உசத்தி...

பொங்கல் அன்று இலைகள் எல்லாம் கோயில் வளாகத்தில் கூடி பேசின. மற்ற இலைகளை பார்த்த வாழை இலை யார் வீட்டில், எங்கு, எந்த சாப்பாடாக இருந்தாலும் என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள். அவர்களும் பசியாறுகிறார்கள் அதனால் நான் தான் உசத்தி என்றது. அதைக்கேட்டுக் கொண்டிருந்த வெற்றிலை சிரித்துக் கொண்டே பைத்தியமே, சாப்பிட்டு முடித்ததும் உன்னை குப்பைத் தொட்டியில் வீசுவார்கள். உன்னை விட நான் தான் உசத்தி தெரியுமா... சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய..ஏன் அதற்கு மேலும் அதிகமாக சாப்பிடுவார்கள்...உணவின் ருசி அப்படிப்பட்டது, அதன் பிறகு ஜீரணமாக தேடுவது என்னைத்தான். அதனால் நான் தான் உன்னை விட உசத்தி என சொன்னது. என்ன ஒரு முட்டாள் தனமான பேச்சு. ஜீரணமாக உன்னையே உபயோகித்துவிட்டு சக்கையாக்கி துா என வீதியில் துப்பி விட்டு,போகிறவர்கள் வீதியெல்லாம் உன்னால் தான் அசுத்தம் செய்கிறார்கள் உங்களை விட நானே முக்கியமானவன் என்றது கறிவேப்பிலை. வீட்டுச் சமையல் ஆகட்டும், பெரிய விருந்தாகட்டும் எதுவாக இருந்தாலும் என்னுடைய தாளிப்பு இல்லாமல் சமையல் நிறைவடையாது அதனால் நானே உசத்தி என்றது. சமையல் முடியும் வரை தான் உன் ஆட்டம், இலைக்கு வந்ததும்,முதலில் உன்னை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்த பிறகு தானே சாப்பிடுகிறார்கள். ஒதுக்கப்பட்ட நீ எப்படி உசத்தி ஆவாய் எனச் சொல்லி இரண்டும் கேலி செய்தது.அப்போது சுவாமி சன்னதி முன்பு தட்டில் இருந்த பூக்களோடு சில இலைகளை எடுத்து அர்ச்சகர் சுவாமியின் மீது மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய, அது தெய்வத்தின் திருமேனியை அலங்கரித்தது. அவரது மார்பில் அமர்ந்த அந்த இலையான துளசி சொன்னதாம்... நீங்கள் எல்லாம் உசத்தி என்று தனக்கு தானே கர்வப்பட்டுக் கொண்டீர்கள். அதனால் தான் குப்பை தொட்டிக்கும்,தெருவிற்கும், இலையின் வெளியிலேயேயும் தள்ளப்படுகிறீர்கள். என்னைப்போல தான் என்ற அகங்காரத்தை விட்டீர்கள் என்றால் தெய்வத்திருமேனியை அலங்கரிக்கும் பேறினை பெறுவீர்கள் என்றது துளசி. மற்ற இலைகள் எல்லாம் அதன் பேச்சினை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தன.