உள்ளூர் செய்திகள்

பத்மநாபோ மரப்பிரபு

திருமாலுக்கு 'பத்மநாபோ அமரப்பிரபு' என பெயருண்டு. இதை 'பத்மநாபோ மரப்பிரபு' என தவறாக புரிந்து கொண்டார் பக்தர் ஒருவர். தன் வீட்டின் அருகிலுள்ள பெரிய மரம் ஒன்றை, 'பத்மநாபோ மரப்பிரபு' எனச் சொல்லியபடி சுற்றிக் கொண்டே திருமாலை வழிபட்டார். அதைக் கண்ட அந்தணர் ஒருவர், '' இப்படிச் சொல்வது தவறு. இந்த சொல் மரத்தைக் குறிக்கவில்லை. தேவர்களுக்கு எல்லாம் தலைவனான மகாவிஷ்ணு என்னும் பொருளில் 'பத்மநாபோ அமரப்பிரபு' என்று சொல்கிறோம்'' என்று விளக்கிச் சென்றார். அன்றிரவு அந்தணரின் கனவில், ''ஏன் என்னை மரம் எனக் கூறக் கூடாதா? நான் மரங்களில் குடியிருப்பதை உணர்த்தவே விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷி 'புவனானி விஷ்ணு' என்றார். அது போல காட்டில் நான் இருப்பதைக் காட்ட 'வனானி விஷ்ணு' என்றார். எனவே அந்த பக்தர் மீது தவறு ஒன்றும் இல்லை” எனச் சொல்லி மறைந்தார்.பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே.