உள்ளூர் செய்திகள்

அசுர வதம் - 20

விருஷபாசுரன் வதம்விருஷபாசுரன் என்பவன் கொடூர எண்ணத்துடன் முனிவர்களையும், துறவிகளையும் கடுமையாகத் தாக்கினான். தாக்குதலுக்குப் பயந்த முனிவர்கள் பலரும் காட்டை விட்டு வெளியேறினர்.முனிவர்கள் அனைவரையும் வெளியேற்றிய அவன், சிவனை வேண்டித் தவத்தைத் தொடங்கினான். அதைத் கண்டு மகிழ்ந்த சிவன் காட்சியளித்து, “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். “என் பலம் பன்மடங்கு பெருக வேண்டும். மூவுலகங்களும் என் ஆட்சியின் கீழ் வர வேண்டும். மனிதர்கள், அசுரர்கள், முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் அனைவரும் எனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தங்களால் எனக்கு அழிவு நேரக் கூடாது” ஆகிய வரங்களைக் கேட்டான் விருஷபாசுரன். சிரித்த சிவன், “கேட்ட வரம் அனைத்தும் சரிதான். கடைசியாகக் கேட்ட வரம்தான் குறையாகத் தெரிகிறது” என்றார்.”தங்களால் அழிவு நேரக் கூடாது எனக் கேட்பதில் என்ன குறை இருக்கிறது?” என்றான் அசுரன். “அழிக்கும் கடவுளான என்னிடம் இப்படி கேட்பது சரியா?” என்றார் சிவன். உடனே அவன், “அழிவே வரக் கூடாது எனக் கேட்கவில்லை, தங்களால் அழிவு வரக் கூடாது என்று தானே கேட்கிறேன்” என்றான். அதனைக் கேட்ட சிவன், “சரி, அனைத்து வரங்களும் தருகிறேன். என்னால் உனக்கு அழிவு நேராது, எனது முதன்மைச் சித்தன் அகத்தியனால் அழிவு ஏற்படும்” என்றார். அதற்கு அவன், “திருமாலால் அழிக்கப்பட்ட அசுரர்கள் மட்டுமே பெயர் பெற்ற அசுரர்களாக இருக்கின்றனர். எனக்கும் திருமால் மூலம் மட்டுமே அழிவு ஏற்பட வேண்டும்'' எனக் கேட்டான். “அசுரர்களை அழிக்கவும், உலகைக் காக்கவும் திருமால் இதுவரை ஒன்பது முறை அவதரித் திருக்கிறார். அடுத்ததாக கலியன் எனும் அசுரனை அழிக்க கல்கியாகத் தோற்றம் எடுப்பார். இதற்கிடையே உன்னைக் கொல்வதற்குப் புதிய தோற்றம் எடுக்க அவரால் முடியாது” என்றார் சிவன். உடனே அவன், “ஏன் முடியாது? தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எனக் கண்ணில் படுவோரை எல்லாம் துன்புறுத்தி அழிப்பேன். என்னால் துன்பமடைபவர்கள் திருமாலிடம் சரணடைவர். அப்போது அவர் என்னைக் கொல்ல வருவார்” என்றான்.அதைக் கேட்ட சிவன், “சரி, உன் விருப்பம் நிறைவேறட்டும்” என்று சொல்லி மறைந்தார்.மறுநாளில் இருந்து மூவுலகுக்கும் பயணித்த அவன் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். பாதிக்கப்பட்டவர்கள் திருமாலிடம் காப்பாற்றும்படி வேண்டினர். சரியான காலம் வரும் போது அழிப்பதாகச் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பினார். இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. இந்நிலையில் அகத்தியர் சீடர்களுடன் ஒரு மலைப்பகுதியில் தங்கி சிவவழிபாடு செய்து கொண்டிருந்தார். அங்கே சென்ற அசுரன், வழிபாட்டுப் பொருட்களையெல்லாம் துாக்கி எறிந்தான். அதனைக் கண்ட அகத்தியர், அவனது தலைமுடியைப் பிடித்துத் துாக்கி வீசினார். பாறை ஒன்றில் போய் விழுந்த அசுரனின் தலை உடைந்து ரத்தம் வெளியேறி பத்து இடங்களில் உறைந்து நின்றது. அதில் இருந்து பத்து அசுரர்கள் தோன்றினர். அனைவரும் அகத்தியரைக் தாக்க வந்தனர். அப்போது திருமாலால் மட்டுமே அசுரன் கொல்லப்பட வேண்டும் என அவன் சிவனிடம் வரம் பெற்றது அகத்தியருக்கு நினைவுக்கு வந்தது. உடனே திருமாலை நினைத்து வேண்டினார். திருமாலும் பத்து அசுரன்களையும் எதிர்த்துப் போரிட்டார். விருஷபாசுரன் கேட்டுப் பெற்ற வரத்தின்படி, அசுரனிடம் இருந்து உருவான பத்து அசுரன்களிடமும் அதிக வலிமை இருந்தது. அசுரன்களின் தாக்குதலையும் தடுக்க திருமால் கடுமையாகப் போரிட்டார். போர் நீண்டகாலம் நீடிக்கவே பத்து அசுரன்களும் களைப்படையத் தொடங்கினர். அதைப் பயன்படுத்திக் கொண்ட திருமால் சக்கராயுதத்தால் அசுரர்களின் தலையைத் துண்டித்தார். ஒன்பது அசுரன்களைக் கொன்ற பின் ஒருவன் மட்டும் தனித்திருந்தான். அவன் மீது இரக்கப்பட்ட திருமால், “உன் கடைசி ஆசை என்ன?” எனக் கேட்டார். “எனக்குப் பிடித்த நரசிம்மர் தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும். அத்தோற்றத்திலேயே என்னை அழித்து ஆட்கொள்ள வேண்டும். இந்த மலைக்கு என் பெயரைச் சூட்ட வேண்டும். தங்களைக் காண வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் நினைக்கச் செய்ய வேண்டும்” என்றான். திருமாலும் விருப்பம் நிறைவேறும் என்றார். நரசிம்மர் தோற்றத்தில் காட்சியளித்தார். விருஷபாசுரன் கைகுவித்து வணங்கினான். அதன்பின் சக்கராயுதத்தை ஏவி அவனது தலையைத் துண்டித்தார். விருஷபாசுரன் அழிந்தான். ஆனால் அவன் கேட்டுக் கொண்டபடி அந்த மலை விருஷப மலை எனப்படுகிறது. திருப்பதியில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான விருஷப மலை, அசுரனின் பெயரை பெற்றதுடன், திருப்பதி பெருமாள் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.திருப்பதி ஏழு மலைகள்திருப்பதி என்றதும் நினைவுக்கு வருவது ஏழுமலைகள்தான். இவற்றில் ஐந்து ஸ்ரீநிவாசப் பெருமாள்கள் உள்ளனர். 1. வேங்கட மலை: 'வேம்' என்றால் பாவம். 'கட' என்றால் நாசமாக்குதல், நீக்குதல் எனப் பொருள். பாவங்களை போக்கக்கூடிய மலை. இதில் வெங்கடாஜலபதி காட்சி தருகிறார்.2. சேஷ மலை: திருமாலின் அவதாரம் ஆதிசேஷன். இவர் மலையாக அமைந்ததால் இந்த மலைக்கு 'சேஷ மலை' எனப் பெயர். 3. வேத மலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி வெங்கடாஜலபதியை வழிபட்டன. அதனால் வேதமலை எனப்படுகிறது.4. கருட மலை: கருடன் வழிபாட்டுக்காக இங்கு வந்தார். அப்போது வைகுண்டத்தில் இருந்து ஏழுமலையானை எடுத்து வந்ததால் இது 'கருட மலை' எனப்படுகிறது.5. விருஷப மலை: விருஷபாசுரன் (ரிஷபாசுரன்) என்பவன் நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் காட்சியளித்த போது அவன் போரிட்டதால் நரசிம்மரால் கொல்லப்பட்டான். அதனால் இந்த மலைக்கு 'விருஷப மலை' எனப் பெயர் வந்தது. 6. அஞ்சன மலை: அனுமனின் தாயான அஞ்சனை குழந்தை வரம் வேண்டி ஆதிவராகரை நினைத்து தவமிருந்தார். அதன் காரணமாக அனுமன் பிறந்தார். அவரது பெயராலேயே இந்த மலை 'அஞ்சன மலை' எனப்படுகிறது.7. ஆனந்த மலை: ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நடுவராக மகாவிஷ்ணு இருந்தார். போட்டியின் முடிவில் இருவரும் சமபலம் கொண்டவர்கள் எனத் தீர்ப்பளித்தார். அதனால் ஆதிசேஷனும், வாயுபகவானும் ஆனந்தம் அடைந்தனர். அதனால் இந்த மலை 'ஆனந்த மலை' எனப் பெயர் பெற்றது.விருஷபாசுரன் மற்றொரு கதைவிருஷபாசுரன் (ரிஷபாசுரன்) என்னும் அசுரன், நரசிம்மரை வேண்டி தவமிருந்தான். காட்சியளித்த நரசிம்மர், “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அவன், “நான் உங்களுடன் போரிட வேண்டும். அதில் என்னைத் தாங்கள் அழிக்க வேண்டும்” எனக் கேட்டான். அவரும் சம்மதித்தார். அசுரன் உயிர் விடும் நிலையில் அந்த இடத்திற்குத் தன் பெயரை வைக்க வேண்டினான். நரசிம்மரும் சம்மதிக்க, அந்த மலை திருப்பதியின் ஏழு மலைகளில் ஒன்றாக அசுரனின் பெயரால் விருஷப மலை (விருஷாபத்ரி அல்லது ரிஷபாத்ரி) எனப்பட்டது. -தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925