புன்னகை என்ன விலை
மீனவன் ஒருவனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. ஒருநாள் நண்பனை அவன் சந்தித்த போது அவனது வருமானம், குடும்ப சூழலைக் கேட்டறிந்தான். வறுமையில் வாடினாலும் அவன் புன்னகைத்தபடியே இருந்தான்.அன்றிரவு மீனவனுக்கு துாக்கம் வரவில்லை. 'வருமானம் குறைவு; பிரச்னைகள் அதிகம். ஆனாலும் நண்பன் மகிழ்ச்சியாக இருக்கிறானே...' என யோசித்தான்அந்த ஊரில் துறவி ஒருவர், பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வதாக கேள்விப்பட்டான். அவரை காணச் சென்றான். பிரச்னையை கேட்ட அவர் பதிலளிக்காமல் புன்னகைத்தார். 'இவரும் நம்மை ஏளனம் செய்கிறாரே' என கோபம் வந்தது. அதை வெளிப்படுத்தினால் சாபமிடுவாரோ என பயந்தபடி விடை பெற்றான். மறுநாளும் பிரச்னையை மீண்டும் அவரிடம் தெரிவித்தான். அப்போதும் புன்னகையே பதிலாக வந்தது. “என் பிரச்னைகளை நான் இருமுறை சொல்லியும் தீர்வு சொல்ல வில்லையே?” எனக் கேட்டான்.“ பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக இரு. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ். பிரச்னை மட்டுமே மனதை ஆக்கிரமித்துள்ளதால் 'புன்னகை என்ன விலை' என்ற நிலைக்கு தள்ளப்பட்டாய். எந்த பிரச்னைக்கும் புன்னகையே மருந்து” என்றார்.