உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா... உனைத் தேடுகிறேன் வா!

'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி பணிகளைச் செய்வாள் மூதாட்டி ஒருத்தி. தினமும் கோயிலில் வழிபாடு செய்வாள். அடிக்கடி சந்திக்கும் நபர் என்பதால் பாட்டியிடம் நட்புடன் பழகினார் அர்ச்சகர். ஒருநாள் காலையில் அர்ச்சகர் கோயில் நடையைத் திறந்த போது அதிர்ந்தார். காரணம் மூலவரின் காதில் சாணம் அப்பியிருந்தது. 'அன்றாடம் அபிஷேகம் செய்கிறோம்; இரவில் பூட்டி விட்டுச் செல்கிறோம். ஆனால் சாணம் அப்பியது எப்படி?' எனச் சிந்தித்தார். விடை தெரியவில்லை. மறுநாளும் மூலவர் காதில் சாணம். தெய்வ குற்றம் நேர்ந்ததோ என வருந்தினார். அன்றிரவு கனவில் தோன்றி, ' அர்ச்சகரே... உம் மீது குறை இல்லை. பக்தையான மூதாட்டியின் வீட்டில் நடப்பதைப் பார்'' என்றார் கிருஷ்ணர். அவள் பாடியபடியே வீட்டை மெழுகிக் கொண்டிருந்தாள். கடைசியில் மீதமிருந்த சாணத்தை ஜன்னல் வழியாக 'கிருஷ்ணார்ப்பணம்' என்றபடி வீசினாள். அது பறந்து வந்து கிருஷ்ணரின் காதில் ஒட்டியது. கண் விழித்த அர்ச்சகர் பொழுது புலர்ந்ததைக் கண்டார். நீராடி விட்டுக் கோயிலுக்கு புறப்பட்டார். அன்றும் சாணம் இருந்தது. அதை சந்தனமாகக் கருதி பத்திரப்படுத்தினார். அது பற்றி மூதாட்டியிடம் பேச நினைத்தார். ஆனால் வரவில்லை. இரவு மீண்டும் கனவில், 'மூதாட்டி... என் திருவடியை அடையப் போகிறாள். உடனடியாக அவளது வீட்டிற்குச் செல்'' எனக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். அதன்படி சென்ற போது மூதாட்டி இறந்ததை கண்டாள். விஷ்ணு துாதர்கள் புஷ்பக விமானத்துடன் காத்திருந்தனர். அவர்களிடம், ' எனக்கு வைகுண்டம் வேண்டாம். என்றென்றும் கிருஷ்ணரோடு வாழவே விரும்புகிறேன்'' என்றாள். விமானத்தில் மூதாட்டியை ஏற்றிய துாதர்கள் கோயிலை அடைந்தனர். நேரில் காட்சியளித்த கிருஷ்ணர், 'அன்பான பக்தையே... என்றென்றும் என்னுடனேயே நீ இரு' என்று அவளை குண்டலமாக்கி காதில் அணிந்தார். அப்போது நடை திறந்த அர்ச்சகர், காதில் குண்டலம் அணிந்த கிருஷ்ணர் சிலையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.