உள்ளூர் செய்திகள்

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 30

சத்தியத் தம்பி சத்ருக்னன்ராம சகோதரர்களில் நான்காவதாக இருந்தாலும் தியாகம், பாசத்தால் பெரிதும் போற்றப்படுபவன் சத்ருக்னன். தாயான சுமித்திரையின் அறிவுரைப்படி பரதனுக்குச் சேவை புரிந்தவன். பரதனை வற்புறுத்தாத குறையாக அவனுடைய மாமன் நாடான கேகயத்துக்கு அனுப்பினார் தசரதன். என்ன தான் சகோதரர் நால்வரும் பாசமாகப் பழகினாலும், அவரது மனதிற்குள் சந்தேகம் இழையோடியது. ராமனுக்கு பட்டாபிஷேகம் என முடிவு செய்தாகி விட்டது. ஆனால் கேகய மன்னன் அசுவபதியிடம், அவனுடைய மகளான கைகேயியிக்குப் பிறக்கும் மகனே(பரதன்) தன் வாரிசு என வாக்களித்திருந்தார். ஆனால் ராமன் முதலில் பிறக்கவே, அவனே நேரடியான முதல் வாரிசாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன் ராமன் நற்குணங்களால் அனைவரின் மனதையும் கவர்ந்தான். தம்பி மூவரும் அவனை தெய்வமாக போற்றினர். தசரதரின் விருப்பமும் அயோத்தியை ராமனே ஆள வேண்டும் என்பது தான். ஆனாலும் மனதில் ஒரு தயக்கம் தசரதனை சஞ்சலப்படுத்தியது. ஒருவேளை பரதன், அவனது பாட்டனுக்குக் கொடுத்த வாக்குறுதியை அறிந்து ராமனுக்குப் போட்டியாக வருவானோ என பயந்தார். ஆகவே அவனை கேகய நாட்டில் சில நாள் இருக்கச் சொல்லி அனுப்பினார். ராமனைப் பிரிய மனமில்லாமல் பரதனும் சென்றான். சத்ருக்னன் நிழலாகப் பின்தொடர்ந்தான். ஆனால் சில நாட்களுக்குள் அயோத்தி திரும்ப நேரும் என பரதன், சத்ருக்னன் நினைத்துப் பார்க்கவில்லை. ராமன் காட்டிற்குப் போன பிறகு, அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அயோத்தி திரும்ப மாட்டான் என்ற நிலைப்பாட்டை அறிந்த தசரதன் உயிர் விட்டார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டியவன் பரதனே. ஆகவே அவனை காரணம் எதுவும் குறிப்பிடாமல் உடனடியாக அயோத்திக்கு வருமாறு ஓலை அனுப்பினர். அவன் வருவதற்கு இரண்டு மூன்று நாளாகும் என்பதால் தசரதன் உடலை தைல பாண்டத்திற்குள் இட்டு பாதுகாத்தனர். பரதனும், சத்ருக்னனும் ராமனைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் புறப்பட்டனர். அயோத்திக்குள் நுழைந்ததுமே அசாதாரண மவுனம் நிலவியதைக் கண்டனர். மக்கள் எல்லாம் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொள்வதைப் பார்த்த பரதன் திகைத்தான். நாடே பொலிவு இழந்தது போல் இருந்தது. ''சத்ருக்னா, இது அயோத்திதானா? எல்லோரும் உற்சாகமின்றி இருக்கிறார்களே'' என வேதனைப்பட்டான். ''ஆம் அண்ணா. அயோத்தியில் இருந்து மகாலட்சுமி விடைபெற்று விட்டாளா? செழிப்பு மிக்க நம் நாடு வறட்சியாக தோன்றுகிறதே'' என்றான் சத்ருக்னன். அப்போதே பரதன் மனதில் சந்தேகம் சூழ்ந்தது. இருவரும் விரைந்து சென்று அரண்மனையை அடைந்தனர். அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. ராமன் அயோத்தியை விட்டு நீங்கினான்; தசரதனை விட்டு உயிர் நீங்கியது என்ற செய்திதான் அது. அப்படியே நிலைகுலைந்து போனான் பரதன். தம்பி சத்ருக்னன் பாதிக்கப்பட்டாலும், பரதனை தேற்ற முயன்றான். நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்ட பரதன், தன் தாயை கோபித்தான். 'பாதகி, கிராதகி' என ஏசினான். சத்ருக்னன் மவுனமாக இருந்து அந்த வசவுகளை ஆமோதித்தான். சரி, அடுத்தது என்ன? தந்தைக்கு இறுதிக் கடன் செலுத்த வேண்டியதுதானே! அதற்காக பரதன் முன் வந்த போது வசிஷ்டர் குறுக்கிட்டார். ''உனக்கு அந்த உரிமை இல்லை பரதா. உன் தந்தையார் அப்படித்தான் தான் இறக்கும்போது சொன்னார்'' என்றார். துடித்துப் போனான் பரதன். உடனிருந்த சத்ருக்னன் 'மூத்தவன் ராமனை காட்டிற்கு அனுப்பி பரதனுக்கு தண்டனை கொடுத்தது போதாதென ஈமச்சடங்கையும் நிறைவேற்றக் கூடாது என நிபந்தனை இட்டிருக்கிறாரே' என தந்தை மீது வெறுப்புடன் பேசினான். பரதனைச் சார்ந்து சத்ருக்னனும் ஆத்திரம் கொண்டான். நேரடியாக கைகேயியை கோபிக்க இயலாதவனாக மனதிற்குள் திட்டினான். அப்போது, ''ராம, லட்சுமணர் காட்டுக்கு போய் விட்டனர். தசரதனின் ஆணைப்படி பரதன் காரியம் செய்ய இயலாது. ஆகவே நீயே இறுதிக் கடன் செலுத்த வேண்டும்'' என குலகுரு வசிஷ்டர் தெரிவித்த போது திடுக்கிட்டான் சத்ருக்னன். அப்போது கண்ணசைவால் பரதன் உத்தரவிட, வேறு வழியின்றி சம்மதித்தான். சம்பிரதாயம் எல்லாம் முடிந்ததும் எப்படியாவது அண்ணன் ராமனை அயோத்திக்கு அழைத்து வர வேண்டும் என முடிவெடுத்தான் பரதன். தம்பி சத்ருக்னனிடம் தன் எண்ணத்தைச் சொல்லி, அச்செய்தியை அயோத்தி எங்கும் அறிவிக்க ஆணையிட்டான். இதன் மூலம் அரியணை மீது ஆசை இல்லை என்பதை ஊரே அறிய வேண்டும் என அவன் விரும்பியதை சத்ருக்னன் புரிந்து கொண்டான். உடனே ஏற்பாடும் செய்தான். அவ்வளவுதான், மக்கள் அரண்மனை வாசலில் கூடி, ''நாங்களும் வருகிறோம். எல்லோருமாகச் சேர்ந்து ராமனை அழைத்து வரலாம்'' என்றனர். அவர்களுடன் அயோத்தி படைவீரர்களும் சேர்ந்து கொண்டனர். ராமனைச் சந்திக்க பரதனின் தலைமையில் புறப்பட்டனர். கூட்டத்தில் மந்தரை(கைகேயியை துாண்டியவள்) இருப்பதை சத்ருக்னன் பார்த்தான். இதற்கெல்லாம் மூலகாரணம் இவள்தானே என்ற கோபத்துடன் அவளை இழுத்து வந்தான். பதறிப் போன பரதன், ''வேண்டாம், அவளை விட்டு விடு. அவளைத் துன்புறுத்துவதை அண்ணன் ராமன் விரும்ப மாட்டார்'' எனக் கேட்டுக் கொண்டான். சத்ருக்னனுக்கு ஆச்சரியம். அன்று கைகேயியை அப்படி ஏசிய பரதன், அவளை முடுக்கி விட்ட மந்தரையை ஒன்றும் செய்ய வேண்டாம் என தடுக்கிறானே! காலமும், அது அளிக்கும் அவகாசமும், எத்தகைய கோபத்தையும் மாற்றி விடுமோ? இப்படித்தான் மனதை அடக்கும் பயிற்சியை ராமன் மேற்கொண்டாரோ அதுவே பரதனுக்கும் கைவந்ததோ என யோசித்தான். அனைவருமாக ராமனை சந்தித்து கெஞ்சி அழைத்தனர். ஆனாலும் ராமன் அயோத்தி திரும்பவில்லை. அதற்கு பதிலாக பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு திரும்பினான் பரதன். அயோத்திவாசிகளான மற்றவர்கள் ஏமாற்றத்துடன் பின்தொடர்ந்தனர். அயோத்தியின் எல்லையை அடைந்ததும், ராமன் நுழையாத அந்த நகருக்குள் தானும் நுழைய விரும்பாமல் நந்தி கிராமத்திலேயே குடிலமைத்து தங்கினான் பரதன். பாதுகையை ஒரு பீடத்தில் அமர்த்தி அதனடியில் அமர்ந்தான். சத்ருக்னனும் உடனிருந்தான். பரதனை விட்டுவிட்டுத் தான் மட்டும் சுகபோகங்களை அனுபவிக்க அவன் விரும்பவில்லை. பதினான்கு ஆண்டு முடிந்த நிலையில், ராமன் அயோத்திக்கு வராமல் இருப்பதைக் கண்டு மனம் வெறுத்தான் பரதன். ஏற்கனவே நிச்சயித்தபடி கண் முன்னே எரியும் தீயில் இறங்க நினைக்கிறான் பரதன். அதற்கு முன்னதாக, '' சத்ருக்னா... அண்ணன் ராமன் வராவிட்டால் உயிர் தரிக்க மாட்டேன் என்னும் சபதப்படி, தீக்குண்டத்திற்குள் இறங்கப் போகிறேன். ஆனால் நீ அயோத்தி சென்று அரசாட்சி நடத்து'' என்று கூறினான். பதறிப் போன சத்ருக்னன். ''எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டீர்கள் அண்ணா! ராமன் இல்லாத அயோத்திக்குள் புகவே விரும்பாத உங்களின் தம்பியான நான் மட்டும் அயோத்தி புகுவேனா? என்ன அபாண்டமான கற்பனை இது! எங்கும், எப்போதும் தங்களையே பின்பற்றிச் செல்பவன் நான். அதனால் நானும் தீக்குண்டத்திற்குள் இறங்குவேன், அதுதான் தங்கள் மீதான அன்பின் அடையாளம்''என தழுதழுத்த குரலில் பதிலளித்தான் சத்ருக்னன். மன்னின் பின் வளநகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும்சொல் நிற்கும் என்று அஞ்சிப் புறத்து இருந்தும்அருந்தவமே தொடங்கினாயே என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான்.-கம்பர்ஆனால் அனுமன் முன்கூட்டியே வந்து, ராமன் வரவிருக்கும் தகவலைச் சொன்ன பிறகே அனைவரும் ராமனுடன் அயோத்திக்கு வந்தனர். -தொடரும்பிரபு சங்கர்72999 68695