உள்ளூர் செய்திகள்

நடமாடும் தெய்வம்

காஞ்சி மடத்தில் மஹாபெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வரிசையில் பாட்டி ஒருவர் நெற்றியில் திருநீறு, குங்குமம் சந்தனம் பூசி, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் நின்றிருந்தார். சுவாமிகளின் அருகில் வந்ததும் அவள் கைகூப்பினாள். உடனே மஹாபெரியவர் அங்கிருந்த சிப்பந்தியிடம், ''உள்ளே இருந்து நுாறு எலுமிச்சம்பழம் எடுத்து வா'' என்றார். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றி இருந்தவர்களுக்கோ ஆச்சரியம். ''பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நுாறு எலுமிச்சம்பழம் எடுத்து வரச் சொல்கிறாரே... இந்தப் பாட்டி பெரிய அதிர்ஷ்டசாலி'' என ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். அப்போது பழக்கூடையை சிப்பந்தி எடுத்து வர, பாட்டியின் பக்கத்தில் வைக்கச் சொல்லி விட்டு, ''இது உனக்குதான். நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்'' என்றார் மஹாபெரியவர்.திருதிருன்னு முழித்த பாட்டி, ''பெரியவா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை. எனக்கு எதுக்கு இத்தனை பழம்'' எனக் கேட்டாள். 'காசு வாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது. ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிட்டிருக்கியே... அதுக்கு இது உபயோகமாக இருக்கும்'' என்றார். மகாபெரியவா உரக்கச் சொன்ன பின்பே அங்கிருந்தவர்களுக்கு உண்மை புரிந்தது.''என்னை மன்னிச்சுடுங்கோ... காசுக்கு ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி சொல்லிட்டீங்களே... பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை புரிஞ்சிக்கிட்டேன். இனி கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ'' எனக் கதறினாள். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. ''உனக்கு தெரிஞ்ச ஏவல், பில்லிக்கான மந்திரங்களை (அபிசார மந்திரம்) எல்லாம் ஏதாவது ஒரு பசு மாட்டின் காதில் சொல்லு. உடனே போய் தலைக்கு குளி. நீ செய்த பாவம் போய் விடும். இனியாவது நல்லதை மட்டும் செய்'' என்றார். காஞ்சி மஹாபெரியவரை 'நடமாடும் தெய்வம்' என சொல்வது நிஜமான உண்மை.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.