உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 9

அவள் நிகழ்த்திய அற்புதம்“கூடப் பிறந்த அக்காவை நம்பி எல்லாத்தையும் தொலைச்சிட்டேன்யா” என் முன் அழுதவளுக்கு ஐம்பது வயது. “நான் செல்வி. எங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு நானும் எங்க வீட்டுக்காரரும் அஞ்சு லட்சம் சேத்ேதாம். பணத்த அக்காகிட்ட கொடுத்து வச்சிருந்தேன். மாசம் பத்தாயிரம் ரூபாய் வட்டி கொடுப்பா. பொண்ணுக்கு நிச்சயமானதும் பணத்த கேட்டேன். எப்போ எங்கிட்ட பணம் கொடுத்தன்னு சொல்லிட்டாங்க. நான் அழுதப்போ அவ என்ன சொன்னா தெரியுமா?“நீதான் என்கிட்ட மாசம் பத்தாயிரம் வாங்கியிருக்க. ஸ்டாம்ப் ஒட்டின ரசீதுல கையெழுத்து போட்டிருக்க. ஏதாவது வம்பு பண்ணின இந்தப் பணத்துக்கு உன் மேல கேஸ் போட்டிருவேன்”“நீங்க கொடுத்த அஞ்சு லட்சத்துக்கு அக்காகிட்ட எழுதி வாங்கலையா?”“அக்காதானேன்னு ஒண்ணும் வாங்காம விட்டுட்டேன். அதுவே வினையாப் போச்சு.”நான் திகைத்தேன்.“ஒரு முடிவுக்கு வந்துட்டேன்யா. எங்க தெருவுல மாரியம்மன் கோயில் இருக்கு. யாராவது துரோகம் செஞ்சா அம்மனுக்கு மிளகாய அரச்சிப் பூசுவாங்க. தாயே உங்க உடம்பு எரியற மாதிரி எதிரியோட உடம்பும் எரியணும்னு வேண்டிப்போம். அதத்தான் செய்யப்போறேன்.”நான் நடுங்கினேன்.“வெள்ளிக்கிழமை வாங்க. ஏதாவது தெரிஞ்சா சொல்றேன். அதுக்கப்பறம் வேண்டுதல செய்யுங்க”செல்வி சென்றுவிட்டாள். வெள்ளிக்கிழமை. அலுவலக வாசலில் காரை நிறுத்தும் இடத்தில் இளநீர் விற்றாள் ஒரு பெண்.“நல்லாத் தண்ணி உள்ள இளநீரா வெட்டுங்கம்மா”“இன்று செல்வி வரப்போகிறாள். அவளுக்கு என்ன வழிகாட்டுவது என பதறாமல் இளநீர் கேட்கிறாயே?”“தாயே, வழிகாட்டப் போவது நீங்கள். என் பங்கு எதுவுமில்லை”“அவளை மிளகாயை அரைத்து வைக்கச் சொல். இன்று மாலை பிரார்த்தனையை நிறைவேற்றலாம் எனச் சொல்லி வை”என் தாய்க்கும் மிளகாய் பிரார்த்தனை பிடித்திருக்கிறதோ?அவள் பெரிதாகச் சிரித்தாள். “இன்று மாலை என்ன நடக்கிறது என பார்”பச்சைப்புடவைக்காரியின் படத்தின் முன் கண்ணீர் மல்க உட்கார்ந்திருந்தாள் செல்வி. ஒரு பாத்திரத்தில் அரைத்த மிளகாய் இருந்தது.யாரோ கதவைத் தட்ட, செல்வி திறந்தாள்.“செல்வியக்கா, நம்ம மாரியம்மன் கோயில இடிக்க ஆளுங்க வந்திருக்காங்க. உலகம் அழியப் போகுதுன்னு நெனைக்கறேன்”செல்விக்கு ஆவேசம் வந்துவிட்டது.மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் கூட்டம் இருந்தது. அரசியல்வாதி போல இருந்த ஒருவர் அடியாட்களுடன் நின்றிருந்தார். பல கார்கள் நின்று கொண்டிருந்தன.அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு முதியவர்,“ஐயா, விஷயம் தெரிஞ்ச நீங்களே இப்படி செய்யலாமா? எனக்குத் தெரிஞ்சு இந்தக் கோயில் நுாறு வருஷமா இருக்கு. நாங்கதான் கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா. அதுக்கான பத்திரமெல்லாம் இருக்கு. அத எடுத்துக்கிட்டு வர்றேன். வெள்ளிக்கிழமையும் அதுவுமா கோயில இடிக்கிறதா சொல்றீங்களே, பாவம் இல்லீங்களா?”“பாவமாவது பரங்கிக்காயாவது? இது எங்க பரம்பரைச் சொத்து. அது சம்பந்தமான ரிக்கார்டை கோர்ட்டுல காட்டி உத்தரவு வாங்கிக்கிட்டு வந்திருக்கேன். கோயில் இருக்கற இடம் எனக்குச் சொந்தம்னு தீர்ப்பாயிருக்கு. கோயில இடிச்சிட்டு அப்பார்ட்மெண்ட் கட்டப்போறோம். அதுக்குரிய அனுமதியும் வாங்கியாச்சு. இதுக்குமேலயும் குறுக்க வந்தீங்கன்னா பிரச்னை வரும். கொஞ்சம் பின்னால பாருங்க”வேல், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு அடியாள் கூட்டம் நின்றிருந்தது.“போலீசும் வந்திருவாங்க. எதிர்த்து நின்னீங்கன்னா உங்களச் சுட்டுப் பொசுக்கிட்டு இடிப்போம்'' முதியவரால் பேச முடியவில்லை. அம்மனைப் பார்த்து, 'தாயே... கோயிலை இடிக்கப் போறாங்களாம்! அதைப் பார்த்தபின் என்னால் உயிர் வாழ முடியுமா? உன் இஷ்டம் போல் நடக்கட்டும்”“யாருக்கு காத்திருக்கீங்க? இடிங்கடா” அரசியல்வாதி முழங்கினார். ஒரு அடியாள் கடப்பாரையுடன் கோயில் சுவரை இடித்தான். சில அடியாட்கள் கோயிலுக்குள் சென்றனர். “டேய்” என பெரிய சத்தம் கேட்டது. எல்லோரும் திகைத்துப் போனார்கள். செல்வி பயங்கரமான தோற்றத்துடன் வந்து கொண்டிருந்தாள். அம்மனுக்காக அரைத்த மிளகாயைத் தன் மீது பூசிக்கொண்டு வந்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.“என் கோயிலையே இடிக்க வந்துட்டீங்களா? உங்கள அழிக்காம விடமாட்டேன்டா”கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தவன் செல்வியைப் பார்த்து இளக்காரமாக சிரித்தான். அவன் மீது பாய்ந்தாள் செல்வி. அவன் கண்களைக் கைகளால் தொட்டாள். கையில் இருந்த மிளகாய் கண்களில் பரவவே எரிச்சலில் துடித்தான். கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சுருண்டு விழுந்தான். கஷ்டப்பட்டு எழுந்து நின்று கத்தினான்.“டேய் வெளிய வாங்கடா. ஆத்தா கண்ணக் குத்திட்டாடா” கோயிலை இடிக்க உள்ளே சென்றவர்கள் ஓடி வந்தனர். “டேய்” செல்வி மீண்டும் கத்தினாள். அரசியல்வாதியும் அவன் ஆட்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடினர். பரம்பரை தர்மகர்த்தா செல்வியின் காலில் விழுந்து வணங்கினார்.“எங்களக் காப்பாத்திட்ட தாயே! இனிமே ஒவ்வொரு வருஷமும் இதே நாள்ல உனக்குப் பொங்கல் படைப்போம் தாயே. கோயிலக் காப்பாத்தின திருநாளா இத வருஷா வருஷம் கொண்டாடுவோம்”அதற்குள் அர்ச்சகர் சூடம் ஏற்றிக்கொண்டு வந்தார். அதை செல்வியின் முன் காட்டினார்.அந்தச் சமயம் பார்த்து செல்வியின் அக்கா அங்கு வந்தாள். செல்வியின் காலில் விழுந்தாள்.“தாயே என்னை மன்னிச்சிரு. என் தங்கச்சிக்குத் துரோகம் செஞ்சிட்டேன். அவ பணத்த இன்னிக்கே திருப்பிக் கொடுத்துடறேன். இது உன் மீது சத்தியம்”செல்வி மயங்கி விழுந்தாள். நான் இளநீர் விற்கும் பெண்ணின் கால்களில் விழுந்தேன்.“உனக்கு என்ன வேண்டும் சொல்”“ஆயிரம் கோடி அண்ட சராசரங்களைப் படைத்த நீங்கள் எங்கோ ஒரு மூலையில் நடந்த அநியாயத்தைப் பார்த்து அதற்குரிய தண்டனையை வழங்கி விட்டீர்கள். கோயிலை இடிக்க வந்தவர்களை அதை இடிக்காமல் பார்த்துக் கொண்டீர்கள். தன் தங்கைக்குத் துரோகம் செய்ய இருந்தவளை தடுத்து விட்டீர்கள். அதையே நான் உங்களிடம் வரமாகக் கேட்கிறேன்”“என்னவென்று?”“நான் குற்றம் குறையுள்ள சாதாரண மனிதன். என் மனதிலும் தவறு செய்யும் எண்ணம் தோன்றலாம். அது பாவம் செய்யத் துாண்டலாம். அப்படி நடக்காமல் என்னைக் காப்பாறுங்கள்.அது முடியவில்லை எனில் என்னை அடையாளம் தெரியாமல் அழித்துவிடுங்கள். என்னால் யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை வரமாகக் கேட்கிறேன்”அவள் சிரித்தாள்.“தந்தேன். செல்வி உனக்காகக் காத்திருக்கிறாள். நான் சொன்னதை அவளிடம் சொல்”-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com