கடனை அடைச்சாச்சா
காஞ்சி மஹாபெரியவரின் பக்தையான கற்பகம் வீடு கட்ட இடம் வாங்கினார். அதற்கான வரைபடத்தை (பிளான்) காமாட்சியம்மன் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு, மஹாபெரியவரிடம் ஆசி பெற மடத்திற்கு வந்தார். அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் நன்கு தெரியும் என்பதால் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி, 'எப்படி இருக்கிறார்?' என சுவாமிகள் நலம் விசாரித்தார். அதன் பின் பிளானைக் காட்டி விரைவில் வீடு கட்ட இருப்பதாக கற்பகம் தெரிவித்தார். அதைப் பார்த்து விட்டு பிரசாதமாக திராட்சை, கல்கண்டு, குங்குமம், அட்சதை கொடுத்தார். அப்போது கற்பகம் குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஒன்றரை ஆண்டிற்குள் வீடு கட்டி முடித்தனர். சுவாமிகளிடம் இதை தெரிவிக்கச் சென்ற போது, 'சொந்தப் பணத்தில் கட்டினாயா? அல்லது கடன் வாங்கினாயா?' எனக் கேட்டார். உடனே கற்பகத்தின் கணவர் வெங்கட கிருஷ்ணன், 'பெரியவா... முக்கால்வாசி நாங்கள் சேமித்த பணம். கால்வாசி பேங்கில லோன் வாங்கினோம்' என்றார். 'நிச்சயம் கடனைக் கட்டி விடுவாய்' என ஆசியளித்தார். மீண்டும் வணங்கிப் புறப்பட்டனர் கற்பகம் குடும்பத்தினர்.நாட்கள் ஓடின. அதன் பின்னர் வீட்டின் மீது மாடி எழுப்பினர். இந்த தகவலை மஹாபெரியவரிடம் சொல்லலாம் என தீர்மானித்த போதெல்லாம் அங்கு செல்ல முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. இருபது ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்றார் கற்பகம். அனைவருக்கும் ஆசியளித்த மஹாபெரியவர், 'இவர்களுக்கு கல்கண்டு கொடு' என பணியாளரிடம் தெரிவித்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுவாமிகள், 'கடனை அடைச்சாச்சா?' எனக் கேட்டார். கற்பகம், வெங்கடகிருஷ்ணன் தம்பதியின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. 'வீட்டுக்கான பிளானைக் காட்டி ஆசி பெற்று இருபது ஆண்டுகளாகி விட்டது. அப்போது சொன்னதை இப்போதும் நினைவில் வைத்து கேட்கிறாரே' என வியந்தனர். 'பெரியவா ஆசியுடன் கடனை அடைத்து நிம்மதியாக குடியிருக்கோம்' என்றார் கற்பகத்தின் கணவர். மீண்டும் ஆசியளித்த போது, 'தினமும் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினரை சந்திக்கும் நேரத்தில் எப்போதோ வந்த எங்களையும் நினைவில் வைத்து விசாரிப்பது நாங்கள் செய்த புண்ணியமே'' என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com