பச்சைப்புடவைக்காரி - 12
நடிகையின் வேதனை“என்னை வாழவும் விடாம சாகவும் விடாம தவிக்கவிடராய்யா உங்க பச்சைப்புடவைக்காரி” என் முன் இருந்த நாற்பது வயது பிரியா ஒருகாலத்தில் முன்னணி நடிகை. மார்க்கட் போனவுடன் ஓட்டல் நடத்த தொடங்கினாள். அவள் திருமணம் செய்யவில்லை.“என் ஓட்டல் நல்லா நடக்குது. தொழில அபிவிருத்தி பண்றதுக்கு பேங்க்ல கடன் கேட்டிருந்தேன். ஒரு வண்டி கேள்வி கேட்டாங்க. நிறைய டாகுமெண்ட்ஸ் கேட்டாங்க. எல்லாம் கொடுத்தாச்சு. பத்து நாள்ல லோன் வரும்னு சொன்னாங்க. அத நம்பி கட்டட வேலைய ஆரம்பிச்சேன். அவசரத் தேவைக்கு சினிமா பைனான்சியரிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கினேன்”“பேங்க் லோன் வந்துச்சா?”“அந்த லோன சேங்ஷன் பண்ற ஆபீசரு சரியான பொறுக்கி. அவன்கூட ஒருநாள் தங்கினா தான் லோன் கொடுப்பானாம். லோன் வரலேன்னா வட்டி ஏறிரும்யா. அந்த மாதிரி ஆளுங்கள பச்சைப்புடவைக்காரி ஏன்யா கண்ணக் குத்த மாட்டேங்கறா?”நடிகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ''உங்க பார்வையோட அர்த்தம் புரியுது. நான் ஒண்ணும் யோக்கியமானவ கிடையாது. பத்து வருஷம் தயாரிப்பாளர்ல இருந்து லைட்பாய் வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற அவலமான வாழ்க்கை வாழ்ந்தாச்சு. ஆனா பணத்துக்காக கண்டவனுக்கும் முந்தி விரிக்கற அளவுக்கு கேவலமானவ கிடையாது. அப்படி நெனச்சிருந்தா எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு ஓட்டல் நடத்தணும்? உலகத்துலேயே பழைய தொழில நோகாம செஞ்சிக்கிட்டுப் போயிருப்பேனே”“லோன் வரலேன்னா... என்ன செய்வீங்க?”“அதான் முழிச்சிக்கிட்டிருக்கேன். பைனான்சியர் மொத்தச் சொத்தையும் அமுக்கிருவாரோன்னு பயமா இருக்கு. அதுக்குப் பயந்துக்கிட்டு அந்த ஆபீசர் ஆசைக்கு இணங்கறதுக்குப் பேசாம செத்திடலாம்னு தோணுது. நான் வாழறது பச்சைப்புடவைக்காரிக்குப் பிடிக்கலையோ?”“ஏதாவது வழி தெரிஞ்சா உங்களக் கூப்பிடறேம்மா”“என் சொந்த ஊர் மதுரைதான்யா. பச்சைப்புடவைக்காரியத் தவிர வேற தெய்வத்த நான் கும்பிட்டதில்ல. எனக்கு ஏன்யா இப்படி நடக்கணும்?”என்னால் பதில் சொல்லமுடியாத கேள்வி அது.“இதுல என்ன கூத்துன்னா அந்தக் கேடுகெட்ட பேங்க் ஆபீசரோட பொண்ண எனக்கு நல்லாத் தெரியும். அவ பேரு ரித்திகா. சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு, 'அக்கா எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுங்க. யார்கிட்ட டான்ஸ் கத்துக்கலாம்? எப்படி மேக்கப் போட்டுக்கணும்?' தினமும் என்னிடம் பேசிட்டுப் போவா. அவ மூலமாத்தான் அந்த பேங்க் ஆபீசரையே பார்த்தேன்” பெருமூச்சுடன் சொன்னாள் பிரியா.அவள் சென்றவுடன் கோயிலுக்குப் புறப்பட்டேன். செருப்பு வைக்கும் இடத்தில் இருந்த பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள். கண்டு கொள்ளாமல் கோயிலுக்குள் செல்ல முயன்றேன்.“நான் இங்கே இருக்கிறேன். யாரைப் பார்க்க உள்ளே போகிறாய்?”காலில் விழுந்தேன். கண்ணீர் மல்க கைகூப்பினேன்.“நடிகையின் மூலம் அந்தக் கயவனுக்கு பாடம் கற்பிக்க இருக்கிறேன். அவன் மகளிடம் நான் சொல்வது போல் பேசு”அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன். மறுநாளே பிரியா மூலம் ரித்திகாவின் அலைபேசி எண்ணை வாங்கி அவளை வரச் சொன்னேன். அவள் பேரழகியாக இருந்தாள். நன்றாகப் பேசினாள். “நான் சொல்ற மாதிரி உங்கப்பாகிட்ட சொல்லணும். உடனே உன்னைக் கூட்டிக்கிட்டு அவர் என்னைப் பார்க்க வரணும்”“என்ன சொல்லணும் அங்க்கிள்?”“நான் உன் கையப் பிடிச்சி இழுத்தேன்னு சொல்லு”“ஐயையோ! அப்படிச் சொன்னா என் நாக்கு அழுகிடும். உங்களப் பத்தி பிரியா அக்கா எப்படி சொல்வாங்க தெரியுமா?”“உங்கப்பாவ காப்பாத்த இருக்கற ஒரே வழி இதுதாம்மா. அப்புறம் உன் இஷ்டம்”மறுநாள் மாலை ஏழு மணிக்கு புயலாக என் அறைக்குள் நுழைந்தவருக்கு ஐம்பது வயதிருக்கும். என் சட்டையைப் பிடித்து உலுக்கி,“இந்த வயசுல பொம்பள சுகம் கேக்குதோ? வெட்டிருவேன், ராஸ்கல். யார் கிட்ட விளையாடிக்கிட்டிருக்கன்னு தெரியுமா?”என் மனதில் சிறிதும் பதற்றமில்லை. மெதுவாக அந்த மனிதரின் கைகளை விலக்கினேன். பெருமூச்சு விட்ட அவர், “இதெல்லாம் வேலைக்கு ஆகாது. வாம்மா போலீசுக்குப் போவோம்” தன் மகள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தார். “நில்லுய்யா” எனக் கத்தினேன். அதிர்ந்தார் அதிகாரி.“நீ பெரிய ஒழுங்கோ? ஒரு நடிகை லோன் கேட்டா தரேன்னு சொல்லு. தர மாட்டேன்னு சொல்லு. 'நீ என்னோட ஒரு நாள் இருக்கணும்னு சொல்றது என்னய்யா நியாயம்? அதே மாதிரி யாராவது உன் பொண்ணக் கேட்டா எப்படி இருக்கும்? நான் கையப் பிடிச்சி இழுத்தேன்னு பொய் சொன்னதுக்கே உனக்கு கொலைவெறி வந்திருச்சே! பிரியாவ படுக்கைக்குக் கூப்பிட்டபோது அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும்?”அதிகாரி வாயடைத்து நின்றார். “இவரோட நகம்கூட என் மீது படலப்பா. இவர்தான் உங்களுக்குப் புத்தி வரணும்னுதான் அப்படி பொய் சொல்லச் சொன்னாரு”“மிஸ்டர் சேதுபதி. உங்க பொண்ணுக்கு வந்தா ரத்தம். பிரியாவுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?”“ரித்திகா, கொஞ்சம் வெளியே இரும்மா”தன் மகள் வெளியேறியதும் என் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டார் சேதுபதி.“நடிகைதானே... அப்படின்னு... ஒரு சபலத்துல... பச்சைப்புடவைக்காரி உங்க மூலமா பிரியாவக் காப்பாத்திட்டா''“இல்ல, அவ உங்களத்தான் காப்பாத்தியிருக்கா. பிரியாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்க பொண்ணுக்கும் அதே நிலைமை வந்து நீங்க துடிதுடிச்சிச் செத்திருப்பீங்க”“இப்போ நான் என்ன செய்யணும் சார்?”“பிரியா லோன் சம்பந்தமான ஆவணங்கள் சரியா இருக்குல்ல? அதுல ஏதும் குறைபாடு இருந்தா அத என் உயிரக் கொடுத்தாவது சரி பண்ணித் தர்றேன். உங்க பேங்க் விதிமுறைகள் படி பிரியாவுக்கு கடன் கொடுக்கலாம்னு எனக்குத் தெரியும்”“எப்படி...''“இந்தக் கடனக் கொடுக்கலாம்னு நீங்க உங்க மேலதிகாரிக்குத் தகவல் அனுப்பிச்சது எனக்குத் தெரியும். இனி மேலும் தாமதப்படுத்தாம பணத்தைக் கொடுங்க. உங்க பொண்ணக் கூட்டிக்கிட்டுப் போய் பிரியாவிடம் மன்னிப்பு கேளுங்க. இதெல்லாம் நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள நடக்கணும்”அவர்கள் சென்ற பின் அலுவலகத்தைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன். காருக்குள் யாரோ அமர்ந்திருப்பது கண்டு அதிர்ந்தேன். உள்ளே இருந்த அழகி சிரித்தாள். கதவு திறந்தது. அவள் காலடியில் அமர்ந்தேன்.“இருவரையும் காப்பாற்றி விட்டாய். உனக்கு என்ன வேண்டும்?”“அந்த பேங்க் மேனேஜர் கயவன் போலவும் நான் நல்லவன் போலவும் ஒரு தோற்றம் இருக்கலாம் தாயே. அந்த மனிதனுக்கு இருக்கும் சூழ்நிலை எனக்கு இல்லை. ஒருவேளை அவன் சூழ்நிலையில் இருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ! என்னை வழி தவற வைக்கும் எந்தச் சூழலிலும் என்னை வைக்காதீர்கள் தாயே! நரகத்தில் உழன்றாலும் நல்லோர் துணை இல்லையென்றாலும் நான் உங்கள் கொத்தடிமை என்பதை மறவாத வரம் வேண்டும் தாயே”சிரித்தபடி மறைந்தாள் அந்தச் சிங்காரவல்லி. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com