ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 34
வித்தகன் விஸ்வகர்மாகட்டடக் கலையின் தொழில் நுட்பம் அறிந்த பொறியாளர்கள் புராண காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். பிரமாண்ட மாளிகையைப் பார்த்தால் 'இதென்ன மயன் உருவாக்கிய மாளிகையோ' என நாம் வியப்பதுண்டு. இந்த மயன், கட்டடக் கலை வல்லுநனான விஸ்வகர்மாவின் மகன். இருவரும் கட்டடக் கலையின் பல பரிமாணங்களைத் திறம்பட நிர்மாணித்த சாதனையாளர்கள்.பலரின் பாராட்டுக்களை பெற்றவன் விஸ்வகர்மா. இவனை தேவதச்சன் என சிறப்பாகச் சொல்வர். சிவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஆளுக்கு ஒரு வில் உருவாக்கினான். இரண்டில் எது வலிமையானது என அறிய தேவர்களுக்கு ஆர்வம் உண்டானது. பிரம்மாவின் ஆலோசனையின்படி சிவன், விஷ்ணு இருவரும் தத்தம் வில்லை வளைத்தனர். சிவ தனுசின் நாண் இற்று விழ, மகாவிஷ்ணுவின் வில் பழுதின்றி கம்பீரமாக நின்றது. பிறகு தன் வில்லை ஜனகரின் மூதாதையரான நிமி என்பவரிடம் வழங்கினார் சிவன். பரசுராமனின் பாட்டனார் ரிஷீபனிடம் தன் வில்லைக் கொடுத்தார் மகாவிஷ்ணு. அவ்வாறு ஜனகரிடம் வந்த சிவதனுசையே ராமன் முறித்து சீதையை மணந்தார். அதே போல மிதிலையில் நடந்த திருமணத்துக்குப் பிறகு உறவினர்களுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் எதிர்த்த பரசுராமரிடம் இருந்த விஷ்ணு வில்லையும் வளைத்தான் ராமன்.தச்சுக் கலையில் வித்தகனான விஸ்வகர்மா, இலங்கையில் ராவணனுக்கு அழகிய மணி மண்டபத்தை உருவாக்கித் தந்தான். அதே போல ராவணனுக்காக சந்திரகாந்த மண்டபம் கட்டித் தந்தான். நிலவின் குளிர்ச்சியைத் தரக் கூடியது இது. எதற்காக இதைக் கட்டினான் தெரியுமா?ராமன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை தன் முயற்சியில் தோற்றதால் கோபம் கொண்டாள். தன்னை ராமன் விரும்பாததற்கு ஒரே காரணம், பேரழகி சீதை என்பதால் அவளைக் கொல்லவும் திட்டமிட்டாள். அதற்காக காமுகனான ராவணனிடம் அவளது அழகைப் பற்றி தெரிவித்தால் அவன் ஓய மாட்டான் எனக் கருதினாள். அதன்படி சீதையின் அழகை அண்ணனான ராவணனிடம் விவரித்தாள். அதைக் கேட்ட அவன் பார்க்காமலேயே மோகித்தான். இரவில் அவன் எண்ணத்தை சீதை ஆக்கிரமித்ததால், நித்திரா தேவி அவனை விட்டு விலகினாள். காமப் பித்தனாக மாறிய அவனது உடல் வெம்மையால் தகித்தது. ராவணனைக் குளிர்விக்க ஏற்பாடு செய்யும்படி விஸ்வகர்மாவிடம் அவையினர் முறையிட்டனர். அதற்கான உருவானதே இந்த சந்திர காந்த மண்டபம். நிலாவின் அமுத கிரணங்களை கிரகித்து குளிர்ச்சியூட்டும் மண்டபமான அதில் அமர்ந்து தன்னைக் குளிர்வித்தான் ராவணன். இப்படி கட்டட தொழில் நுட்பங்களில் பல பரிமாணங்களைக் கண்டவன் விஸ்வகர்மா. சீதையைத் தேடி வந்த அனுமன் மாளிகைகளை கண்டு வியந்தான். 'பொன் தகட்டில் ஒளி வீசும் மணிகளை எப்படி பதித்தனர்? மேகங்களையும் விஞ்சி விண்ணைத் தொடும் இந்த மாடங்கள் மின்னல்களால் உருவாக்கப்பட்டிருக்குமோ அல்லது சூரியக்கதிர்களின் தொகுப்பால் ஒளிர்கின்றதா? வானுலக தேவர்களும் பொறாமையால் இலங்கையில் இருந்து நாம் இன்பத்தை அனுபவிக்க மாட்டோமா என ஏங்கினர். எழிலார்ந்த மாளிகைகளை எந்த உளி கொண்டு செதுக்கினர்? தன் பலத்தால் மேரு மலையையே அசைத்த காற்றும் இலங்கையைக் கடக்கும்போது இதமாக வீசுகிறதே, அதற்கு இலங்கை நகரின் வனப்பு தான் காரணமோ? புயலையும் மயக்கி, தன்னைத் தாக்காமல் தென்றலாக தழுவிச் செல்ல அனுமதிக்கும் அந்தக் கலைநேர்த்தியை வியக்காமல் இருக்க முடியவில்லையே! 'இந்த மாடங்களில் அழுக்குபடியாதபடி பணியாளர்கள் துாய்மையாக பராமரிக்கிறார்களே! மின்னல்களைப் பிடித்து, தொகுத்து துடைப்பமாக்கி, மாடங்களில் படிந்திருக்கும் வாசனைப் பொடிகளைப் பெருக்கித் தள்ளியதோடு, ஆகாய கங்கையில் இருந்து அழகிய இரு கைகளால் நீர் அள்ளித் தெளித்து மாடமாளிகையின் அழகுக்கு மெருகூட்டுகிறார்களே!'இந்த மாளிகைகள், இந்திரலோக அரண்மனை போல விளங்குகின்றன. உலகில் ஒளி வீசும் மணிகள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் அவை மகாவிஷ்ணு அணிந்திருக்கும் கவுஸ்துப மணிக்கு ஈடாகுமா? அதே போல தேவ சிற்பியான விஸ்வகர்மா உருவாக்கிய இந்த இலங்கை நகரின் கட்டட தொழில் நுட்பத்துக்கு ஈடாக வேறு எதைத் தான் சுட்டிக் காட்ட முடியும்? அப்படி வேறு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின்அணியும் காசினுக்கு அகன்றன உள என அரிதால்திணியும் நெடுந் திருநகர் தெய்வ மாத் தச்சன் துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அத்தொழில்கள்- கம்பர்இப்படி பிரமித்த அனுமன் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டான். ஆமாம், இந்த அழகை ரசித்து அப்படியே வியப்பில் ஆழ்ந்தால் அப்புறம் சீதையைத் தேடுவது எப்படி? உடனே தன் நோக்கத்தைச் செயல்படுத்தப் பாய்ந்து சென்றான். சீதையைக் கண்டபின், அவனுக்கு இப்போது இலங்கை நகர் அழகானதாகத் தோன்றவில்லை. அன்னையை கொடுஞ்சிறை வைத்த கொடுங்கோலன் ராவணன் மீது கோபம் ஏற்பட்டது. அதை எப்படி வெளிக்காட்டுவது? பருத்து நெடிது உயர்ந்த மரங்களை அழித்தான். சற்று முன்பு ரசித்து அதிசயமாக பாவித்த மாட மாளிகைகள், கூடகோபுரங்களை தகர்த்தான். இப்போது விஸ்வகர்மாவின் கலைநுட்பம் பெரிதாகத் தோன்றவில்லை, சீதை இருக்கும் கொடுஞ்சிறையாகவே இலங்கையைப் பார்த்தான். ஆகவே நகரின் அழகை துவம்சம் செய்தான். சரிந்து விழுந்த மாடங்கள் துாள் துாளாயின. அனுமனின் ஆக்ரோஷத்தைக் கண்டு அரக்கர்கள் கலங்க, இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை சிறைப்பிடித்து, ராவணன் முன்பு நிறுத்தினான். ரசித்து மகிழ்ந்த கவின்மிகு கட்டடங்களைத் தானே அழித்ததற்கான தண்டனையோ இது என எண்ணினான் அனுமன். ஆனால் அதன்பின் தன் வாலில் இட்ட தீயால் நகரை நிர்மூலமாக்கி விட்டு ராமனை வந்தடைந்தான். அனுமனால் தாக்கப்பட்ட வீரர்களும், தன் மகன் அக்ககுமாரனும் உயிர் பிரிந்த நிலையிலும் சீதை மீதான மோகம் ராவணனுக்குக் குறையவில்லை. அதே சமயம், அனுமன் வந்துவிட்டுப் சென்றதன் அடையாளம் ஒன்றுகூட இருக்கக் கூடாது எனக் கருதினான். அனுமனால் பலியான தன் மகன், தளபதிகள், படை வீரர்களை உயிர்ப்பிக்க முடியாதுதான், ஆனால் இலங்கை நகரைப் புதுப்பிக்க முடியும் அல்லவா? ஆகவே அவன் விஸ்வகர்மாவை அழைத்தான். ''உன் ஆற்றல் எனக்குத் தெரியும். நீ எனக்காக இலங்கை நகரை உருவாக்கிக் கொடுத்திருப்பதில் இருந்து அதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இதோ உனக்கு இன்னும் ஒரு சவால். ஒரு குரங்கு அழித்து விட்டுப் போயுள்ளது. மீண்டும் நீ நகரை புதுப்பிக்க வேண்டும்'' என்றான். உற்சாகமானான் விஸ்வகர்மா. தன் திறமையை பாராட்டினால் உண்மையான கலைஞனின் மனம் மகிழ்ச்சியால் படபடக்குமே... அப்போதே பணியைத் தொடங்கினான். இலங்கை பொலிவு பெற்றது. 'பலே' பாராட்டினான் ராவணன். ''குரங்கு கைபட்ட பூமாலை சிதைந்ததே என வருந்தினேன். ஆனால் அதைவிட நேர்த்தியாக நகரை நிர்மாணித்தாய்''விஸ்வகர்மா பணிவுடன் அந்தப் பாராட்டை ஏற்று மகிழ்ந்தான்.-தொடரும்பிரபு சங்கர்72999 68695