உள்ளூர் செய்திகள்

நற்றுணையாவது நமச்சிவாயவே!

மே 13, 2023 - திருநாவுக்கரச நாயனார் குருபூஜை புத்தம் புதுமலர்க் கொத்துகளைத் தாங்கிக் கொண்டு, பெருகி ஓடிவரும் பெண்ணை ஆற்றினால் செழித்திருந்தது அன்றைய பல்லவ நாடு. இத்தகைய வளமையான பகுதியில் திருவாமூர் (கடலுார்) ஊரில், புகழனார் - மாதினியார் தம்பதி வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தது. இவர்கள்தான் சைவ சமயத்தை காப்பாற்ற வந்தவர்கள். ஆம்! அன்றைய காலகட்டம் சமண சமயம் ஓங்கியிருந்த காலம். அப்போது மருள் எல்லாம் போக்கும் அருள் வடிவமாக மருள் நீக்கியார் பிறந்தார். இவரது சகோதரிதான் திலகவதி அம்மையார். இவர் யார் தெரியுமா? கோயிலில் உழவாரப்பணி செய்ய அடித்தளம் இட்டவர். ஆம்! தருமசேனர், நாவுக்கரசர், அப்பர், உழவாரத் தொண்டர், தாண்டக வேந்தர் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான திருநாவுக்கரச நாயனார்தான் இவர். சைவ சமயத்தில் சமயக்குரவர் என போற்றப்படும் நால்வரில் ஒருவர். விதிவசத்தால் இவர் சமண சமயத்திற்கு மாறினார். காரணம் நல்லறங்களை செய்வதற்கு இதுவே சரியான சமயம் என, தவறான முடிவை எடுத்து சமண பள்ளியில் சேர்ந்தார். சமண நுால்களை நன்கு கற்றுணர்ந்தார். பவுத்தர்களை வாதத்தில் வென்று, தலைமை பதவியையும் பெற்றார். இதை அறிந்த சகோதரி திலகவதியார் வருந்தி, சிவபெருமானிடம் முறையிட்டாள். கனவில் தோன்றிய அவர், 'திலகவதி! கலங்காதே. அவனை தடுத்தாட்கொள்வோம்' என்றார். மறுநாள் மருள் நீக்கியார் வயிற்று வலியால் துடித்தார். சமணர்கள் எவ்வளவோ முயன்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை. வெந்தணல் போல் உடலை சுட்டெரித்துக் கொண்டிருந்த நோயின் துயரத்தை தாங்க முடியாமல் கடைசியில் சகோதரியிடம் வந்தார். சகோதரனைப் பார்த்து உள்ளம் உருகி, ''புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து அறியாது அல்லுற்றாய். இனி நம் தலைவரான சிவபெருமான் உன்னை காப்பாற்றுவார்'' என கூறினாள். பிறகு திலகவதியார் கொடுத்த திருவெண்ணீற்றினை தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்டவர், உடல் முழுவதும் பூசினார். பிறகு திருவீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு சென்று, 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். சிறிது நேரத்தில் வயிற்று வலி நீங்கியது. மகிழ்ந்தவர், 'ஐயனே! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன்' என ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது அசரீரி, 'இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத்தை பாடியருளிய தொண்டனே! இனி நாவுக்கரசு என அழைக்கப்பெறுவாய்' என்றது. அன்றுமுதல் தலை, கழுத்து, கையிலும் ருத்திராட்ச மாலை அணிந்து சைவப்பணியாற்றத் தொடங்கினார். இதனால் கோபப்பட்ட சமணர்கள், இவரை தண்டிக்கும்படி பல்லவ மன்னர் மகேந்திரவர்மனிடம் கூறினர். அவரும் சுண்ணாம்புக் காளவாசலில் தள்ளியும், நஞ்சு கலந்த பால் சோற்றை கொடுத்தும், மத யானையால் இடறச் செய்தும் கொல்லப் பார்த்தார். இந்த சோதனைகளை எல்லாம் 'நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்தை சொல்லிக் கடந்தார் நாவுக்கரசர். இறுதியாக 'கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிவிடுங்கள்' என ஆணையிட்டார் மன்னர். அதன்படி வீரர்கள் செயல்படுத்தினர். அப்போது நாவுக்கரசர், 'சொற்றுணை' என அடி எடுத்து, 'நற்றுணையாவது நமச்சிவாயவே' என்று பதிகம் பாடினார். இதன் மூலம் கடலில் மூழ்காமல், பக்திக் கடலில் மூழ்கினார். ஆம்! அவர் பாமாலை தொடுத்ததும் அவரது உடலைக் கட்டியிருந்த கயிறு அறுபட்டது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. இப்படி திருப்பாதிரிப்புலியூருக்கு அருகே கரை சேர்ந்தார். மன்னர் இதையறிந்ததும் நாவுக்கரசர் தங்கியிருக்கும் மடத்திற்கு வந்து, அவரது மலரடியில் வீழ்ந்து வணங்கினார். தான் செய்த பிழையை பொருத்தருளப் பிரார்த்தித்தார். சிவப்பழமாக நின்ற இவருக்கு, ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து திருவெண்ணீறு கொடுத்தார் நாவுக்கரசர். இதுபோல் பல செயல்களை செய்து சைவ நெறியை வளர்த்தார். இப்படிப்பட்ட குருவின் பாதம் பணிவோம். நாமும் பிறவிக் கடலில் இருந்து கரையேறுவோம்.