உள்ளூர் செய்திகள்

வேடிக்கை பார்க்காதீர்

ஒருசமயம் சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஆகமங்களை உபதேசம் செய்ய தொடங்கினார். குழந்தைகளான விநாயகர், முருகனை நந்திதேவரிடம் ஒப்படைத்து கவனித்துக் கொள்ள சொல்லி விட்டார். பாடத்தில் ஈடுபாடு இல்லாத பார்வதி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கோபம் அடைந்த சிவபெருமான் அவளை மீனவப் பெண்ணாகப் பிறக்கும்படி சாபமிட்டார். இந்த நேரத்தில் விநாயகரும், முருகனும் அங்கே வந்தனர். தாயை சபித்ததால் தந்தை மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. ஆகமச் சுவடிகளை கடலில் விட்டெறிந்தனர். மனைவியிடம் கோபித்தது போல குழந்தைகளிடம் கோபிக்க முடியுமா. அதனால் கோபம் வேறு பக்கம் திரும்பியது. கற்றுக் கொடுக்கும் போது பாட அறைக்குள் குழந்தைகளை அனுமதித்த நந்திதேவர் மீது கோபம் திரும்பியது. “கொடுத்த வேலையைச் சரிவர செய்யாத நீ பாதுகாவலனாக இருக்க தகுதியற்றவன்” எனக் கூறி அவரைச் சுறாமீனாகப் பிறக்குமாறு சபித்தார். கடலுக்குள் சுறாவாகத் திரிந்த நந்திதேவர் அட்டகாசம் செய்தார். மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் துன்பப்பட்டனர். சுறாவை பிடித்து தரும் மீனவனுக்கு தன் மகளையே திருமணம் செய்து தருவதாக அறிவித்தார் மீனவர் தலைவர். சிவபெருமானே மீனவ இளைஞனாக வந்து சுறாவின் கொட்டத்தை அடக்கினார். மீனவர் தலைவனுக்கு காட்சியளித்து பார்வதியை மணந்தார்.படிக்கும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது, பணியில் கவனக்குறைவு கூடாது என்பதை எடுத்துக்காட்ட இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.