பச்சைப்புடவைக்காரி - 52
முத்தாய்ப்பாய் ஒரு முடிவுசொக்கநாதர் கோயில் அருகே நின்ற போது ஒரு பெண் அங்கே தோன்றினாள். “பயந்து விட்டாயா?”பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.“நம் சந்திப்புகள் இனி மேல் தொடராது”“இத்தனை வருடங்கள் பழகி விட்டு திடீரென முடிந்துவிட்டது என்றால்... உங்கள் நெஞ்சில் ஈரமில்லையா?''“உறவும், பிரிவும், பிரிவைத் தாங்கும் சக்தியும் நான்தான்.”பேச்சிழந்தேன்.“ஆன்மிகத்தில் நீ இன்னும் வளர வேண்டும். நான் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு துறவியிடம் செல். அவன் சொல்வதைச் செய்”அன்னை மறைந்தாள். ஊரின் எல்லையில் பிரமாண்டமாக இருந்தது ஆசிரமம். துறவியை பார்க்க வரிசையில் நானும் நின்று கொண்டேன்.ஒரு பெண் ஓடிவந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.துறவியை வணங்கினேன்.“உன்னைப் பற்றிய எல்லா விவரங்களும் எனக்கு வந்துவிட்டன. தினமும் மாலையில் என் அடியவர்களைச் சந்திப்பேன். அந்தச் சமயத்தில் நான் அவர்களிடம் பேசுவதிலிருந்து நீ கற்க வேண்டிய பாடம் நிறைய இருக்கும் என அன்னை சொல்லியிருக்கிறாள். நாளையிலிருந்து பயிற்சியை தொடங்குவோம்”துறவி சொன்னபடியே செய்தேன். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், கோடீஸ்வரர்கள் என பலரும் வந்தனர். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு நடுங்கினேன். சிலர் என்னை பார்த்தபடி துறவியிடம், “சாமி, உங்ககிட்ட தனியா பேசணும்” என்றனர்.“நல்லா பேசுங்க. இவரும் உங்க பிரச்னைய கேட்டா உங்களுக்குத்தான் நல்லது”சிலர் நான் அங்கே இருக்கக்கூடாது என வற்புறுத்தினால் துறவி அவர்களை வெளியே அனுப்பி விடுவார். தனியாக இருக்கும்போது துறவி அன்னையின் மகிமைகளைச் சொல்வார். கேட்டு மகிழ்வேன். அன்று வெள்ளிக்கிழமை. ஒரு முதியவள் வந்தாள். அவள் கையில் பெரிய பாத்திரம் இருந்தது. துணியால் அதன் வாய் மூடப்பட்டிருந்தது.“மரகதம்மா நல்லா இருக்கீங்களா?” கேட்டார் துறவி.அழுது தீர்த்தாள் மரகதம்.“ என் பையனுடைய குடிப்பிரச்னை தான். குடிக்கக் காசு தரலைன்னா பெத்த அம்மான்னும் பாக்காம அடிக்கறான். எங்க வீட்டுக்காரர் பண்ணிப் போட்ட நகைகளக் கொண்டு வந்திருக்கேன். இதெல்லாம் சாமிகிட்டயே இருக்கட்டும். நான் செத்தபிறகு என் மக தேடி வருவா. அவகிட்ட கொடுத்திருங்க.“சாமி, இதப் பாத்தீங்களா?”ஆவல் தாங்க முடியாமல் எட்டிப் பார்த்தேன் கோழி முட்டையின் அளவிற்கு இருந்த ஒரு வைரக்கல் ஜொலித்து கொண்டிருந்தது.“எங்க தாத்தா பெரிய கவிராயர். சிவகங்கை சமஸ்தானத்துலருந்து பரிசாக் கொடுத்தது. மதிப்பு அஞ்சு கோடி. பத்திரமா வச்சிருந்து மககிட்ட கொடுத்திருங்க”துறவி வைரத்தை வாங்கிக் கொண்டார். பின் அந்த முதியவள் கற்றையாக ஐநுாறு ரூபாய் தாள்களைக் கொடுத்தாள். “ரூபாயை தொடறதில்லன்னு விரதம். ஆபீஸ்ல கொடுத்து ரசீது வாங்கிக்கங்க”முதியவள் சென்று விட்டாள்.மூன்று மாதம் கழித்து... ஒருநாள் மாலை துறவியைப் பார்க்க ஒரு இளம்பெண் வந்தாள். “சாமிகிட்ட ஒரு விஷயம் பேசணும்'' என்று சொல்லி குறுகுறுப்புடன் பார்த்தாள். நான் எழுந்துவிட்டேன். “இவர் இங்கு இருந்தால் தப்பில்லை”“நான் மரகதத்தோட மகள் வானதி. அமெரிக்காவுல இருக்கேன். அம்மா இறந்துட்டாங்க. அம்மாகிட்ட நிறைய நகையைப் பாத்த ஞாபகம். உங்ககிட்ட கொடுத்து வச்சிருக்காங்களா?”“ஆமாம்மா. எங்கிட்டதான் இருக்கு”அருகில் இருந்த ஒரு சீடரிடம் சைகை காட்ட அவன் நகைகளை கொண்டுவந்தான். துறவி என்னை அருகில் வரச்சொன்னார்.“உங்கம்மா கொடுக்கும்போது இவரும் கூட இருந்தாரு. இவர் முன்னிலையிலேயே இந்த நகைய உன்கிட்ட கொடுக்கறேன்”அந்தப் பாத்திரத்தை எட்டிப் பார்த்தேன், திடுக்கிட்டேன். வைரக்கல்லை மட்டும் காணோம். மற்ற நகைகள் இருந்தன. வானதி வாங்கிக்கொண்டு போய் விட்டாள். துறவி என்னிடம் கேட்டார்.“வைரம் இல்லையே என பார்க்கிறாயா? அதை பச்சை புடவைக்காரியின் காலடியில் வைப்பதற்காக எடுத்துக்கொண்டுவிட்டேன்”“அவர்களாகக் கொடுக்காமல் நாமாக எடுத்துக்கொள்வது தப்பில்லையா? அஞ்சு கோடி மதிப்புள்ள பொருளை உடைமைக்காரரின் அனுமதியில்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தானே!”“என்ன வார்த்தை தடிக்கிறது? நீ என்னிடம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்னை இங்கே அனுப்பியிருக்கிறாள்.”“கற்க வேண்டியதைக் கற்று விட்டேன். இனிமேல் எனக்கு இங்கு வேலையில்லை.”துறவி தடுத்ததையும் மீறி கிளம்பினேன்.கண்ணீருடன் கோயிலை நோக்கி நடந்தேன். நடை சாத்தியிருந்த கோயில் வாசலில் ஒரு பூக்காரி வழிமறித்தாள்.“என்னப்பா துறவி ஆஷாடபூதியாக இருக்கிறானே எனக் கோபம் வருகிறதா? இல்லை, அவனிடம் உன்னை அனுப்பி வைத்த என் மீது ஆத்திரம் வருகிறதா?”“எனக்கு அழுகைதான் வருகிறது, தாயே!”“ஏனப்பா?”“ ஒரு அழுக்கு பிச்சைக்காரன் இருந்தானாம். உடம்பெல்லாம் சொறி, சிரங்கு. ஒருநாள் அவன் ஒரு சக்கரவர்த்தினி அரண்மனையில் பிச்சை கேட்டானாம். அவனது முன்னோர் செய்த தவப்பயனாக சக்கரவர்த்தினியே பிச்சையிட்டாளாம். தங்கம், வைரம் என அள்ளி கொடுத்தாளாம். எல்லாம் கொடுத்தபின் போதுமா எனக் கேட்டாளாம். போதாது. நீங்கள் வெள்ளிதோறும் என் குடிசைக்கு வர வேண்டும் என்றானாம். அவளும் சில வருடங்கள் வந்தாளாம். ஒருநாள் இனி நான் வர முடியாது என்றாளாம். “உங்கள் நெஞ்சில் ஈரமில்லையா?” என்றானாம். அந்த பிச்சைக்காரன் நான்தான். சக்கரவர்த்தினி நீங்கள்தான்”“அப்படி என்னப்பா செல்வத்தைக் கொடுத்து விட்டேன்?”“நல்ல துறவியையே வைரக்கல் திருடனாக்கி விட்டதே! இந்தப் பிச்சைக்காரன் ஆசைக்கடலில் வீழ ஒரு குந்துமணி தங்கம் போதுமே, தாயே! அதைக்கூட அந்தப் பிச்சைக்காரனின் கண்ணில் காட்டாமல் பார்த்துக் கொண்டீர்கள். அழுக்குப் பிச்சைக்காரனுக்கு மன நிறைவு என்ற அபரிமிதமான செல்வத்தை வழங்கினீர்கள். அந்தப் பேராசைக்காரன் வாராவாரம் தன் குடிசைக்கு வரச் சொன்னான். நீங்களும் வந்தீர்கள். வந்து கொண்டேயிருங்கள் எனக் கேட்பது நியாயமாகுமா?”“நீ விரும்பினால் வருகிறேன்”“எனக்கென்று தனியாக ஒரு விருப்பம் இருந்தால் அப்புறம் என்ன கொத்தடிமையும் கொத்தவரைக்காயும்? நீங்கள் விரும்பும்போது வாருங்கள். அது அடுத்த வாரமாக இருந்தாலும் சரி, இன்னும் ஆறாயிரம் பிறவிகள் கழிந்த பின் இருந்தாலும் சரி. அதுவரை உங்கள் அன்பை நினைத்து அழுதபடி கொத்தடிமையாய் வாழும் பேற்றை உங்களிடம் மடியேந்திப் பிச்சை கேட்கிறேன்”தலையில் ஏற்பட்ட ஒரு தொடு உணர்வு என்னைச் சிலிர்க்க வைத்தது.-முற்றும் வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com