உள்ளூர் செய்திகள்

இறுதியையும் அவரே அறிவார்

கும்பகோணம் சங்கர மடத்தில் கஜான்ஜியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர். வாய்ப்பு கிடைக்கும் போது காஞ்சிப்பெரியவர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை பெரியவர் விசாகப்பட்டினம் அருகிலுள்ள அனகாபள்ளியில் தங்கியிருந்தார். இரவு 9:30 மணியளவில், எதிர் வீட்டில் இருந்த ராமச்சந்திர அய்யர், 'நாத தனு மனிசம்' என்ற பாடலைப் பாடினார். இதைக் கேட்ட பெரியவர் அவரை அழைத்து வரும்படி சீடரை அனுப்பினார். அதற்கு சீடர், ''நம்ம கஜானா மாமா தான்'' என்று பதிலளிக்க பெரியவர் வியப்பில் ஆழ்ந்தார். ராமச்சந்திர அய்யர் உடனே அங்கு வர பெரியவர், ''உனக்கு சங்கீத பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியாது. இப்போது 'க்ஷீரஸாகர சயன... 'என்று தொடங்கும் பாடலைப் பாடு. நாளை பூஜையின் போது 'தனுமனிசம்' பாடலைப் பாடு,'' என்று சொல்லி பிரசாதம் அளித்தார். பணிவுடன் அவரும் பாடினார்.ராமச்சந்திர அய்யர் ஒருமுறை ஸ்ரீசைலம் புறப்பட்டார். அங்குள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் மண்டபம் கட்டப்பட்டு காஞ்சிப்பெரியவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் பெரியவரிடம் ஆசி பெற்றனர். அப்போது அங்கிருந்த ராமச்சந்திர அய்யரை அழைத்த பெரியவர், ''மூணு நாளா இங்கே தங்கி நீ தரிசனம் செய்துட்டே. இனி இங்கே என்ன வேலை? உடனே ஊருக்குப் புறப்படு,'' என்று உத்தரவிட்டார். பெரியவர் சொல்வதில் காரணம் இருக்கும் என நினைத்து, உடனே ஊருக்குப் புறப்பட்டார். வரும் வழியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள மகன் வீட்டுக்குச் சென்றார். இரண்டு நாளில் அவரது உயிர் பிரிந்தது.ராமச்சந்திர அய்யரின் முடிவு நெருங்குவதை அறிந்த பெரியவர், பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததை எண்ணி குடும்பத்தினர் கண்களில் கண்ணீர் பெருகியது.- சப்தகிரி