உள்ளூர் செய்திகள்

ஒன்றும் புரியவில்லை சுவாமி

இளைஞர்கள் சிலர் முனிவர் ஒருவரைச் சந்தித்து, ''சுவாமி... இந்த உலகத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கள் தான் நல்வழி காட்ட வேண்டும்'' எனக் கேட்டனர். அதற்கு முனிவர், ''எனக்கும் ஒன்றும் புரியவில்லையப்பா'' என பதிலளித்தார். ஆனால் அவர்கள், ''என்ன சுவாமி. பெரிய முனிவரான உங்களுக்கே ஒன்றும் புரியவில்லை என்கிறீர்களே'' என தயங்கி நின்றனர்.“சரி நால்வரும் என்னுடன் புறப்படுங்கள். புஷ்பக விமானத்தில் இந்த வனப்பகுதியை சுற்றி வருவோம். அங்கு ஒரு காட்சியை காட்டுகிறேன். அதைப் பற்றிய கருத்தை ஒவ்வொருவராகச் சொல்லுங்கள். உங்களின் பதில் தவறாக இருந்தால் புஷ்பக விமானம் கீழே தள்ளி விடும்'' என்றார். இளைஞர்கள் நிபந்னையை ஏற்க புஷ்பக விமானம் புறப்பட்டது. ஓரிடத்தில் குட்டிகளுடன் பெண்புலி ஒன்று பசியுடன் நின்றிருந்தது. அந்த நேரத்தில் மான் ஒன்று இரண்டு குட்டிகளுடன் வர, தாய்மானைக் கொன்றது. மான்குட்டிகள் ஆதரவின்றி நின்றன. '' உங்களின் கருத்தை சொல்லுங்கள்'' என முனிவர் கேட்டார். முதல் இளைஞர், “சுவாமி.. இனி குட்டிகளுக்கு தாய் இல்லாமல் போனதே'' என வருத்தப்பட்டார். உடனே விமானம் அவரைக் கீழே தள்ளியது. இரண்டாமவரிடம் முனிவர் கேட்க ''நடந்தது சரிதான்.'' என அவர் சொல்ல விமானம் அவரையும் கீழே தள்ளியது. மூன்றாவது நபரோ, “ இது சரியோ தவறோ எனச் சொல்ல அவரையும் விமானம் தள்ளியது. கடைசியாக நான்காவது இளைஞன், ''ஒன்றும் புரியவில்லையே....சுவாமி'' என்றார். அவரை விமானம் கீழே தள்ளவில்லை. முனிவருடன் வானில் தொடர்ந்து பறந்தது. நம் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை புரிந்து கொண்டால் போதும். தெரியாத விஷயங்களை பற்றி தெரிந்தது போல பேசக் கூடாது.