மீன் என்றால் உயிர்
குருநாதர் ஒருவரும், அவரது சீடனும் குளக்கரையில் அமர்ந்திருந்தனர். சீடனின் சந்தேகங்களுக்கு குரு பதிலளித்துக் கொண்டிருந்தார். ''குருதேவா! சுயநலத்திற்கும், சுயநலமின்மைக்கும் என்ன வித்தியாசம்'' எனக் கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தார் குரு. ஒரு இளைஞன் துாண்டிலுடன் நின்றான். அவன் அருகில் கூடையில் மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன.அருகில் சென்ற குரு பேச்சு கொடுத்தார். சீடனும் உடனிருந்தான். ''தம்பி! மீன் என்றால் உனக்கு ரொம்ப பிடிக்குமா'' எனக் கேட்க, ''மீன் என்றால் எனக்கு உயிர். அவ்வளவு மீன்களையும் இன்றிரவே சமைத்து சாப்பிடுவேன்'' என்றான். சற்று நேரத்தில் மீன் கூடையுடன் புறப்பட்டான் இளைஞன். அப்போது முதியவர் ஒருவர் கையில் பையுடன் அங்கு வந்து, பொரியை நீரில் துாவினார். மீன்கள் ஓடி வந்தன. ''என்ன பெரியவரே! மீன் என்றால் மிகவும் பிடிக்குமோ?'' எனக் கேட்டார் குரு. ''மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றுக்கு உணவளிப்பேன்'' என்றார். சீடனை நோக்கி திரும்பினார் குரு. ''பார்த்தாயா! இருவருக்கும் 'மீன் என்றால் உயிர்'. ஆனால் இளைஞன் 'ருசி' என்னும் சுயநலத்திற்காக அதை பயன் படுத்துகிறான். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உணவளிக்கிறார் பெரியவர். இருவருக்கும் மீன் பிடிக்கும் என்றாலும் நோக்கம் வேறு வேறு. ''சுயநலம் அற்ற அன்பே உண்மையானது'' என விளக்கினார் குரு.