காணிக்கை
விவசாயியான காளிமுத்து யார் உதவி கேட்டாலும் உடனடியாக செய்வார். அத்துடன் மந்திரம் ஜபித்து திருநீறும் கொடுப்பார். அந்த ஊரில் கோடீஸ்வரன் என்ற பெயருடைய கருமி இருந்தான். ஒருநாள் அவனது குழந்தை இரவில் துாங்காமல் அழுதது. காளிமுத்துவை பற்றிக் கேள்விப்பட்டு குழந்தைக்கு குணமாக வேண்டும் என திருநீறு பெற வந்தான். காணிக்கை தர விரும்பிய கோடீஸ்வரனிடம், 'விரும்பியதை கொடுங்கள்' என்றார். சில்லரைகளை கொடுத்து விட்டு கிளம்பினான். அன்றிரவு குழந்தை உறங்கியது. கோடீஸ்வரன் மனதிற்குள், '' குழந்தை நிம்மதியா உறங்குவதைப் பார்த்தா அந்தாளு மந்திரவாதியா இருப்பானோ...''என நினைத்தார். மறுநாள் விவசாயியின் வீட்டுக்குச் சென்றான். களைப்புடன் விவசாயி திண்ணையில் இருந்தார். அருகில் போய், ''சாமி... ரொம்ப நாள் எனக்கொரு ஆசை. பெயருக்கேத்த மாதிரி கோடீஸ்வரனா வாழ ஆசைப்படறேன். நீங்க தான் வழிகாட்டணும்''என்றான். ''அதுக்கென்ன... ஆக்கிட்டா போச்சு''என்றார். கோடீஸ்வரன், ''இப்பவே எனக்கு பணம் தரப் போறீங்களா...''எனச் சிரித்தான். “தந்திட்டா போச்சு. தினமும் பத்தாயிரம் ரூபா வாங்கிக்கோ. ஆனா ஒரு நிபந்தனை''என இழுத்தார் விவசாயி. ''நிபந்தனையா...''எனத் தயங்கினான். ''காளியாத்தாளுக்கு காணிக்கை தரணுமே! முதல் நாளான இன்று ஒரு ரூபாய் கொடுக்கணும். அது அப்படியே இரட்டிப்பா தினமும் அதிகமாயிட்டே இருக்கும்''என்றார் பக்தர்.''ம்ம்... சரிங்க சாமி... காளி மீது சத்தியமா காணிக்கை தர்றேன்'' என்றான் கோடீஸ்வரன் வேகமாக.பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, காணிக்கையாக ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டார் விவசாயி. வீட்டிற்குப் போன கோடீஸ்வரனுக்கு சந்தேகம் வர, கள்ள நோட்டாக இருக்குமோ என எடுத்துப் பார்த்தான். ஆனால் நல்ல நோட்டாக இருந்தது. 'ஒரு ரூபாய்க்கு பதிலா பத்தாயிரம் கொடுக்கிற இந்த ஆளு மடையனா தான் இருக்கணும்' என சிரித்தான். இரண்டாம் நாளும் பத்தாயிரத்தை பெற்றுக் கொண்டு இரட்டிப்பாக இரண்டு ரூபாய் காணிக்கை கொடுத்தான். கொடுக்கல், வாங்கல் தொடர்ந்தது.பத்தாம் நாள் பத்தாயிரத்திற்கு ஈடாக 512 ரூபாய் கொடுத்தான். 15ம் நாள் வந்தது. பத்தாயிரத்தை விட காணிக்கையாக ரூ.16,384 கொடுக்க வேண்டியிருந்தது. இரவெல்லாம் துாக்கம் இன்றி தவித்த அவன், காலையில் விவசாயி வீட்டுக்குச் சென்று, ''என்னை மன்னிச்சிடுங்க! விபரம் தெரியாம காணிக்கை தர்றதா சத்தியம் பண்ணிட்டேன்'' என அழுதான்.'உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். இனியாவது உழைச்சு வாழு. காளியாத்தா ஒருபோதும் உன்னைத் தண்டிக்க மாட்டா'' என்றார். வாங்கிய பணத்தை எல்லாம் திரும்பிக் கொடுத்து விட்டு உழைத்து வாழ முடிவு செய்தான் கோடீஸ்வரன்.