உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (7)

துருபதன் துரோணரை அழிக்கும் எண்ணத்தில் யாஜர், உபயாஜர் எனும் இரு பிராமணர்கள் தலைமையில் அவர்களுக்கு பத்து கோடி பசுக்களை, தானமாக கொடுத்து செய்தது தான் சவுந்தரா மணி என்னும் யாகம்!இந்த யாகத்தீயில் இருந்து வெளிப்பட்டவன்தான் த்ருஷ்டத்யும்னன்! 'த்ருஷ்ட' என்றால் 'அதிக கோபமும் கர்வமும் உடையவன்'. 'த்யும்னன்' என்றால் 'கிரீடகுண்டலங்களோடு பிறந்தவன்'. இரண்டும் இணைந்து 'த்ருஷ்டத்யும்னன்' என்றும் 'திருஷ்டத்துய்மன்' என்றும் சற்று மருவி அழைக்கப்பட்டான். இதே யாகத்தில் இவனைத் தொடர்ந்து பிறந்தவளே திரவுபதி! இவள் பிறந்த உடனேயே அசரீரி இவளை 'கிருஷ்ணை' என்றது. 'கிருஷ்ணை' என்றால் 'கரியநிறம் கொண்டவள்' என்று பொருள். கிருஷ்ணன் என்றாலும் கரியநிறத்தவன் என்பதே பொருள்!திருஷ்டத்துய்மன் தன் விதியை முடிப்பதற்காக பிறந்து விட்டது தெரிந்தும் துரோணர் அதை எண்ணி கலங்கவில்லை. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்று அவர் அறிந்திருந்தமையால், திருஷ்டத்துய்மனுக்கு அவரே குருவாக இருந்து தானறிந்த வித்தைகளை கற்றுத் தரவும் தயாரானார். கிருஷ்ணையான திரவுபதி பேரெழிலோடு விளங்கினாள். இவள் பிறந்த நொடி கிருஷ்ணை பிறந்து விட்டாள் என்று மட்டும் அசரீரி கூறவில்லை. அர்ஜுனனை மணக்கத் தகுந்தவள் பிறந்துவிட்டாள் என்றும் அதே அசரீரி கூறிற்று. எப்படியோ துருபதன் ஒரு கல்லில் இருமாங்காய் போல, துரோணர் மேல் ஏற்பட்ட வெறுப்பால் திருஷ்டத்துய்மன், திரவுபதி என்று இருமக்களை பெற்று விட்டான். துருபதனை துரோணருக்காக போரில் வென்றவன் அர்ஜுனனே... அப்படிப்பட்ட அர்ஜுனனை திரவுபதி மூலம் துருபதன் வெல்லப் போகிறான். இங்கே இவர்கள் இருவரும் பிறந்த வேளை, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களின் ஆட்சி மிகுந்த கீர்த்தியோடு நடந்தபடி இருந்ததால், துரியோதனன் மிகவும் வருத்தப்பட்டான். பாண்டவர்களின் வெற்றியை, புகழை துரியோதனனால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களை அழிக்கவும் அவனால் முடியவில்லை. அப்போது 'வாரணவதம்' எனும் ஒரு நிகழ்வு பெரும் வனப்பரப்புக்குள் நடைபெற இருந்தது. இந்த நிகழ்வில் சிவபூஜை மிக பிரசித்தம். இது பெரிய திருவிழாபோல கொண்டாடப்படும். இதில் தேவர்களுடன் கின்னர, கிம்புருட, நாக, யவ்வனர் என எல்லாரும் கலந்து கொள்வர். இந்த நிகழ்வு நடக்கும் வாரணவத நகரத்துக்கு சென்று அந்த திருவிழாவில் பங்குகொள்வது பெரும் விசேஷம் என்று தர்மருக்கு சொல்லப்பட்டது. தர்மர் அங்கு செல்ல விரும்பினாலும், ராஜ்ய நிர்வாகப் பணிகளை எண்ணி எப்படி செல்வது என யோசித்தார். இது எப்படியோ துரியோதனனுக்கு தெரிய வர, அவன் தன் தந்தை திருதராஷ்டிரன் மூலம் தர்மரையும், அவரோடு கூட அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், குந்திதேவி என்று ஆறுபேரையும் வாரணவத நகருக்கு அனுப்புகிறான். துரியோதனனின் சூது தெரிந்தும், திருதராஷ்டிரன் மிகுந்த சிரமத்தோடு அவர்களை வாரணவத நகரம் அனுப்புகிறான். அந்த நகருக்கு சென்று வர ஆறுமாத காலம் ஆகும். அதுவரை, தான் ராஜ்யத்தை பார்த்துக் கொள்வதாக கூறுகிறான். பாண்டவர்கள் வாரணவத நகருக்கு கிளம்ப சம்மதம் தெரிவித்த மாத்திரத்தில் துரியோதனன் தன் நண்பனும் மந்திரியும், வலதுகை, இடதுகை என்று எல்லாமுமான புரோசனன் என்பவனை அழைத்து வாரணவத நகரில் ஒரு அரக்குமாளிகை கட்டச் சொல்கிறான். அதில் அவர்கள் தங்கியிருக்கும்போது தீவிபத்து ஏற்படும்படி செய்து அந்த அரக்குமாளிகை உருகி எரியும்போது பாண்டவர்களும் அழிந்து விடவேண்டும் என்பது துரியோதனன் திட்டம். புரோசனன் இந்த அரக்குமாளிகையை மிகத்திட்டமிட்டு கட்டுகிறான். அதே சமயம் துரியோதனனின் சதியை பாண்டவர்கள், கவுரவர்கள் இருவருக்கும் சிற்றப்பனாக விளங்கும் விதுரர் தெரிந்து கொள்கிறார். அவர் பாண்டவர்களை காப்பாற்ற, தன் சார்பில் கனகன் என்பவனை அதே வாரணவத நகருக்கு அனுப்புகிறார். கனகன், புரோசனன் கட்டிய அரக்குமாளிகைக்குள் புரோசனன் அறியாதபடி பூமியைக் குடைந்து கொண்டு வெளியேறத் தோதாக சுரங்கப் பாதையை உருவாக்குகிறான். பின் வாரணவத நகரம் வரும் பாண்டவர்கள் அரக்குமாளிகையில் தீக்கிரையாக நேரிடும் போது அந்த சுரங்கம் வழியாக அவர்களை தப்புவிக்கச் செய்பவன் கனகன் தான். கனகன் இல்லாவிட்டால், பாண்டவர்களோ, பின் மகாபாரதமோ உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், பாண்டவர்கள் தப்பித்த விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியாது. அவன் அரக்குமாளிகையில் பாண்டவர்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகக் கருதி, அவர்களுக்குரிய பித்ருகர்மங்களை கூட செய்யத் தயாராகி விடுகிறான். பாண்டவர்கள் அரக்குமாளிகையில் இறந்து விட்டார்கள் என்னும் பொய்யான தகவல் துருபதனையும் எட்டுகிறது. அவன் மிகவே வருந்துகிறான். தன் மகள் திரவுபதியால் அர்ஜுனனை இனி மாலையிட முடியாதே? தன்னை போரில் வென்ற அர்ஜுனனை மருமகனாக்கி அடிபணியச் செய்ய எண்ணியது வீண்போய் விட்டதே என்றும் கலங்குகிறான். அப்போது துருபதனின் அரண்மனை புரோகிதர், ''யாகத்தின் போது வந்த அசரீரி வாக்கு பொய்யாகாது. அர்ஜுனனை மட்டுமல்ல, பாண்டவர்களை அழிக்க யாராலும் முடியாது. அவர்கள் தீயில் அழிந்திருக்க மாட்டார்கள், தப்பியிருப்பார்கள். இது நிச்சயம்,'' என்கிறார்.துருபதனும் புரோகிதர் வாக்கை நம்புகிறான். பாண்டவர்களும் சுரங்க வழியே தப்பி வாரணவத நகரைவிட்டு விலகி பெரும் வனாந்திரம் ஒன்றுக்குள் பிரவேசிக்கின்றனர். அசாத்தியமான வனம் அது!அதில், பீமன் தாயான குந்திதேவியை தோளில் சுமந்தபடி நடக்க மற்றவர்கள் பின் தொடர்கின்றனர். எப்படியோ பஞ்சபாண்டவர்கள் தப்பி விட்டனர். தப்பிட மூலகாரணம் விதுரரும் அவரால் அனுப்பப்பட்ட கனகனும் தான்! இவ்வேளையில் விதுரர் குறித்து சற்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சந்திர குலத்தின் வம்ச விருட்சங்களாய் பிறந்த பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகிய மூவரில், விதுரர் வியாச மகரிஷிக்கும் அரண்மனை வேலைக்காரிக்கும் பிறந்தவர் ஆவார். வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்தவர் திருதராஷ்டிரர். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்தவர் பாண்டு. இம்மூவரையும் வியாசர் சந்திர குலம் விளங்கவே பெற்றுத் தந்தார். இவர்கள் பிறப்பின் பின்னே நிறைய சூட்”மங்கள் உள்ளன. முன்னதாக, பீஷ்மர் தன் சகோதரனான விசித்த வீரியனுக்காக அம்பிகை, அம்பாலிகை, அம்பை எனும் மூவரையும் காசிஅரசனிடம் இருந்து கவர்ந்து சென்றதை அறிந்தோம். அதில் அம்பை விசித்ரவீரியனை மணக்கமுடியாமல் தான் காதலித்த சால்வனையும் மணக்க முடியாமல், கவர்ந்து சென்ற பீஷ்மராலும் மணக்கமுடியாமல் நடுத்தெருவில் நின்று புலம்பி பின் தவமியற்றி, முருகப்பெருமானிடம் தாமரை மாலை பெற்று அதை துருபதன் அரண்மனை வாயிற் கதவில் மாட்டிவிட்டுச் சென்று விடவும் அந்த மாலையை எடுத்து அணிந்து கொண்ட துருபதன் மகளான சிகண்டினி, பின் சிகண்டியாக மாறியதையும் அறிந்தோம். பீஷ்மரின் செயலால் அம்பையின் தவம் சிகண்டினியில் முடிந்து நின்றது. அதேசமயம் யாருக்காக இதை எல்லாம் பீஷ்மர் செய்தாரோ, அந்த விசித்திரவீரியன் அம்பிகை, அம்பாலிகையை மணந்தும் புண்ணியமில்லை. அவன் இறந்து விடவே, சந்திரவம்சம் வாரிசு இல்லாது போய் கேள்விக்குறியாக நின்றது. இவ்வேளையில் தான் சந்திரவம்ச ராணியும், விசித்தவீரியன் மற்றும் பீஷ்மரின் தாயுமான சத்யவதி சாஸ்திரம் அனுமதித்த மாற்று வழியில் சென்று வாரிசுகளை பெற்றுக் கொள்ள தயாரானாள். அதன்படி துளியும் லவுகீக நோக்கம் இல்லாத முனிவர்கள் விருப்பம் தெரிவித்தால் அவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. எனவே, சத்யவதி, சந்தனு மகாராஜாவை மணக்கும் முன் பராசர மகரிஷியுடன் கூடிப் பெற்ற தன்மகனான வியாசரையே அம்பிகை, அம்பாலிகைக்கு சந்ததி விருத்தி செய்ய தீர்மானம் செய்கிறாள். பீஷ்மரும் இதற்கு சம்மதிக்கிறார். முதலில் இதற்கு மறுக்கும் வியாசர், தாயின் விருப்பம், மற்றும் சந்திரகுலம் விளங்கிட துளியும் விருப்பு வெறுப்பு அற்று இறுதியில் சம்மதிக்கிறார். அதன் அடிப்படையில் வியாசரோடு அம்பிகை, அம்பாலிகை கூடுகின்றனர். வியாசர் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பானவராக இருப்பார். இதனால் இவரைக் காணும் அம்பிகை அவரைக் கூடும் நேரத்தில், தன்கண்களை இறுக மூடிக் கொள்கிறாள். இதனால்தான் இவளுக்கு இருகண்களும் தெரியாத திருதராஷ்டிரன் பிறக்கிறான். அம்பாலிகை வியாசருடைய தோற்றம் கண்டு அச்சம் கொண்டு பயத்தில் வெளுக்கிறாள். இதனால் இவளுக்கு உடல் வெளுத்த பாண்டு பிறக்கிறான்.இப்படி இருவரும் இருவித ஊனங்களுடன் பிறந்து விட்ட நிலையில் ஊனமில்லாத பிள்ளை பெற சத்யவதி வேண்டுகிறாள். எனவே, அதற்காக அவள் அம்பிகையை திரும்ப வியாசரிடம் சேரத்தூண்டுகிறாள். ஆனால். அம்பிகை தன் அரண்மனை வேலைக்காரியை தன்னைப்போல் அலங்கரித்து அனுப்பி அவளை வியாசரோடு கூடச் செய்கிறாள். இந்த வேலைக்காரி வியாசரைப்பணிந்து அவர் தோற்றம் கண்டு வெறுப்படையாமல் ஒரு தாசியைப் போல இணக்கமாய் நடந்து கொள்ள வியாசரும் அவளுடன் பெரும் மகிழ்வுடன் கூடுகிறார். அப்படி வேலைக்காரியுடன் மகிழ்வுடன் கூடிப் பெற்ற பிள்ளைதான் விதுரர்! உண்மையில் இந்த விதுரர் யாரோ அல்ல! தர்மங்களை காத்திடும் பொறுப்புள்ள தர்ம தேவதை தான் விதுரராக பிறந்தது. தர்மதேவதை இப்படி விதுரராக பிறந்ததன் பின்னே ஒரு சம்பவம் உள்ளது. அது தெரிந்தால் தான், விதுரரின் பிறப்புக்கான காரணம் நமக்குத் தெரியவரும். அந்த காரணம் தெரிய வேண்டும் என்றால் நாம் ஆணி மாண்டவ்யர் எனும் பாத்திரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவர் யார் என்று பார்ப்போமா?-தொடரும்இந்திரா சவுந்தரராஜன்