உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணஜாலம் - 2 (5)

கிருஷ்ணனை சந்தித்து விட்டு வந்த அர்ஜுனனை சகோதரர்கள் திரவுபதி, குந்தி அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.தர்மன் பேசத் தொடங்கினான்'சகோதரா... போன காரியம் என்னாயிற்று, பழம் தானே?''பழம் தான் அண்ணா.. அதே சமயம்...' அர்ஜுனன் இழுத்தான்.'என்ன அர்ஜுனா.... அதே சமயம் என்று இழுக்கிறாயே... பொல்லாத துரியோதனனும் வந்ததாக கேள்விப்பட்டேனே...?' பீமன் இடையிட்டான்.'ஆம்... எனக்கும் முன்பாக கிருஷ்ணனை காண வந்திருந்தான்.''வெட்கம் கெட்டவன். மாயாவி என்றும், தந்திரக்கார யாதவன் என்றும் சொல்லி கேவலப் படுத்தியவன் எந்த முகத்தோடு கிருஷ்ணனை காண வந்தான்?' பீமன் கொந்தளித்தான்.'பீமண்ணா... இப்படி உணர்ச்சிவசப்பட்டால் எப்படி? துரியோதனன் காரியக்காரன். கூடவே சூத்திரதாரி சகுனி வேறு இருக்கிறான். அவன் தான் துரியோதனனை பக்குவப்படுத்தி அனுப்பியிருப்பான்' என்றான் சகாதேவன்.'ஆம்... அப்படித்தான் இருக்கும். அதனால் என்ன... அவனைத் தான் நம் கோவிந்தன் நன்கு அறிவாரே?'''சல்லியன் மாமாவை வசப்படுத்தியது போல் கிருஷ்ணனை வசப்படுத்துவது தான் துரியோதனன் நோக்கம். ஆனால் கிருஷ்ணன் ஆயுதம் எடுத்து போராடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதால், துரியோதனனுக்கு ஏமாற்றமாகி விட்டது...!''இருக்காது. நிம்மதி அடைந்திருப்பான்... ஆனாலும், கிருஷ்ணன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டாம்.' என்றான் நகுலன்.'முடிவாய் என்ன நடந்தது?' தர்மன் தவிப்புடன் கேட்டான்.'படைகள் துரியோதனன் பக்கம். ஆனால், கிருஷ்ணபிரபு நம் பக்கம்...''இது என்ன விநோதம்... போராட விரும்பாத அவரால் உதவ முடியுமா?' என படபடத்தான் பீமன்.'பீமசேனா.. கிருஷ்ணர் ஆயுதம் கொண்டு தான் உதவ வேண்டும் என்றில்லை. அருகில் இருந்தால் போதும். அர்ஜுனா நீ செய்தது சரி தான்' என பாராட்டினான் தர்மன்.'கிருஷ்ணரை நானும் மதிக்கிறேன். ஆனால், வீரர்களை நமக்கெதிராக அனுப்பி விட்டு, நம் பக்கம் நிற்பதில் பயன் கிடைக்குமா? தான் போரிடாவிட்டாலும் படையில் பாதியை நமக்களித்திருக்கலாமே?' என பீமன் விடுவதாக இல்லை.'ஆனால், நான் தான் மறுத்து விட்டேன். அருகில் கிருஷ்ணன் இருந்தால் போதும். மற்றவைகளை என் பாணம் பார்த்துக் கொள்ளும்..' என அர்ஜுனன் நம்பிக்கையோடு பேசினான். 'சரியாகச் சொன்னாய் அர்ஜுனா. கிருஷ்ணன் நம்மோடு இருக்க சம்மதித்ததே பெரிது. அது நம் பாக்கியமும் கூட' என குந்தியும் வழிமொழிந்தாள்.'தாயே.... புரியாமல் பேசுகிறீர்கள். உண்மையில் நான் துரியோதனனை எண்ணி பயப்படவில்லை. அவனும், சார்ந்தவர்களும் என் கதாயுதத்தின் முன் காணாமல் போவர். ஆனால், பிதாமகர் பீஷ்மரோ, குருநாதர் துரோணரோ சாமான்யர்கள் அல்ல. அந்த கர்ணன் கூட நாகாஸ்திரம் வைத்திருப்பவன். இவர்களெல்லாம் துரியோதனனுக்கு பலமாக இருப்பதால் அவனும், யுத்தம் ஒன்றே தீர்வு என கொக்கரிக்கிறான். படைகளை எதிரிக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் தனியாக வந்தால் நம்மால் சாதிக்க முடியுமா?' என பீமன் கேட்டான். அப்போது அங்கே கிருஷ்ணப் பிரவேசம் நிகழ ஆரம்பித்திருந்தது.அதற்கான கட்டியம் ஒலிப்பது, காதில் விழத் தொடங்கியது.'யாதவகுல திலகர் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண ராஜர் பராக்...துவாரகாதிபதி தீரர் ஸ்ரீ ஸ்ரீ நந்த புத்திரர் பராக்...ஸ்ரீ ஸ்ரீ பாமா ருக்மிணி மணாளர் பராக்.. பராக்..'அக்குரல் கேட்ட குந்தி மகிழ்ந்தாள். 'வர வேண்டும் கிருஷ்ணா. வர வேண்டும்...' என முன் சென்றான் தர்மன்.'கிருஷ்ணா.. உன்னைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தோம். உடனே வந்து நிற்கிறாயே. நீ வாழ்க..'என்றாள் குந்தி'நல்லவேளை அத்தை, முதியோருக்கே உரித்தான 'தீர்க்காயுசோடு இரு' என நீ வாழ்த்தாது விட்டாயே. சந்தோஷம்...''கிருஷ்ணா இது என்ன விந்தை பேச்சு. வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் எல்லா உயிர்களுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருப்பவன் தானே நீ?''அத்தை... என்னை பரம்பொருள் ஆக்கி அன்னியப்படுத்தி விடாதே. இப்போது அர்ஜுனனுடைய விருப்பப்படி உங்களுக்கு உதவ வந்திருக்கிறேன். நேரமும் குறைவாக உள்ளது. யுத்தத்துக்கான நாள் குறிப்பதில் துரியோதனன் வேகமாக இருக்கிறான். உங்களை அழிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறான்..''கிருஷ்ணா.. அவன் தான் 13 வருடங்களுக்கும் மேலாக துடித்துக் கொண்டிருக்கிறானே? அவனுக்குப் போய் உன் படைகளை அளிப்பது நியாயமா?' பீமன் தன் ஆற்றாமையை கொட்டி விட்டான்.'ஆம் கிருஷ்ணா.. பீமண்ணாவால் இதை ஏற்க முடியவில்லை. நீ தான் சமாதானம் கூற வேண்டும்.' என்றான் அர்ஜுனனும்.'உங்கள் வசமிருக்கும் தர்மத்தின் மீது நம்பிக்கை போய் விட்டதா பீமா...? ஏன் இந்த பதட்டம்..?' என்ற கிருஷ்ணனை வெறித்துப் பார்த்தான் பீமன்.பின் ஆவேசமாகப் பேசத் தொடங்கினான்.'கிருஷ்ணா இது என்ன கேள்வி? தர்மத்தின் மீது நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் ஒருபுறம் இருக்கட்டும். தர்மம் பலகாலமாக எங்களை வனவாசிகளாக வைத்திருந்தது? ஊழ்வினை என கருதி துன்பங்களை அனுபவித்த பின்னும், இழந்த எதுவும் எங்களுக்கு திரும்பக் கிடைக்கவில்லையே?மாறாக பெரும் யுத்தத்தில் போராட வேண்டியவர்களாக தானே எங்களை வைத்துள்ளது...? எங்களை நன்றாக அறிந்த நீயே கூட, ஆயுதம் எடுக்கப் போவதில்லை என உறுதி எடுத்து, எதிரிக்கு உதவி செய்திருக்கிறாய் அல்லவா? இதில் நான் எதைப் புரிந்து கொள்ள? எப்படி புரிந்து கொள்ள?' என்றான்.தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்