ஜெயித்து காட்டுவோம்! (9)
சிறுவர்கள் பம்பரம் சுழற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை முதியவர் ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தார்.'நீங்களும் பங்கு பெறலாமே!' என்று விளையாட்டாக அவரைக் கேட்டனர் சிறுவர்கள்.பெரியவர் பதிலளித்தார்,'நான் இளம் வயதில் பம்பரம் விடுவதில் கில்லாடி. நான் பங்கு பெறுவது இருக்கட்டும். இதோ...ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறானே சிறுவன், அவனை ஏன் சேர்க்கவில்லை?''ஆரம்பத்தில் அவனும் சுறுசுறுப்பாக பம்பரம் விட்டான். ஆனால், இப்போது சலிப்படைந்து மூலையில் போய் முடங்கி விட்டான்' என்றனர் சிறுவர்கள்.சிலர் வாழ்க்கையிலும் இப்படித்தான்... எதிலும் முதலில் மும்முரம் காட்டுவர். பிறகு அலுப்பும், சலிப்பும், சோம்பலும், ஓய்வும், சாய்வுமாக ஓரிடத்தில் உட்கார்ந்து விடுகிறார்கள்.வேகமாகச் சுழலும் பம்பரம் சில வினாடிகளில் விசை தீர்ந்து விழுவது போல் நம் முயற்சிகள் முழுமை பெறாமலேயே முடிந்து விடுவதற்கு காரணம் சலிப்படையும் மன நிலை தான்.'உள்ளம் என்றும் எப்போதும்உடைந்து போகக் கூடாதுஎன்ன இந்த வாழ்வு என்றஎண்ணம் தோன்ற கூடாது' என்று திரைப்பாடல் தெரிவிக்கின்றதே.அனைத்து வளம் ஒருவரிடம் இருந்தாலும் தைரியம் இல்லையேல் அவரால் வாழ்வில் வெற்றி பெற இயலாது.'வயிரமுடைய நெஞ்சு வேண்டும் இதுவாழும் முறைமையடி பாப்பா' என்று பாப்பா பாட்டில் அறிவுரை கூறுகின்றார் பாரதியார்.நவராத்திரி பண்டிகையில் அம்பிகையை ஒன்பது நாட்கள் நாம் ஆராதித்து மகிழ்கின்றோம்.மும்மூன்று தினங்களாக முறையே துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என துதி செய்து வழிபடுகின்றோம்.தைரியத்தை வழங்குபவள் துர்கா தேவி. செல்வத்தை தருபவள் லட்சுமி. ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அளிப்பவளே சரஸ்வதி.செல்வமும், கல்வியும் ஒருவரிடம் சேர்ந்து இருந்தாலும், அடிப்படையான மனத்துணிவு இல்லையேல் அவரால் வெற்றி பெற இயலாது.துணிவை தருகின்ற துர்காதேவியை தொடக்கத்தில் வழிபட்டு தளர்ச்சி அடையாத மனம் பெற்றால் வளர்ச்சி அடையலாம்.தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும்தளர்வறியா மனம் தரும் என்று அம்பிகையின் புகழ் பாடுகின்றார் அபிராமி பட்டர்.'நோய் நொடி இல்லாமல் நுாறாண்டு காலம் வாழ்க' என்று திருமணத் தம்பதிகளை வாழ்த்துவர்.நோய் என்றால் உடல் சுகவீனம் என்பதை அறிவோம். நொடி என்றால் என்ன என்பது பலருக்கு தெரியாது.'நொடி' என்றால் மன பலவீனம். வியாபாரம் நடக்கவில்லை என்றால் 'நொடித்துப் போய் விட்டது' என்று சொல்கிறோமல்லவா!'தேக வலிமையோடு மன தைரியம் பெற்று வாழ்க' என்பதே 'நோய் நொடி இல்லாமல் வாழ்க' என்பதன் பொருள்.சலியாத மனம் கொண்டவர்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் இடையூறு குறுக்கிட்டாலும், அவற்றை எதிர்கொண்டு லட்சியத்தை எட்டும் வெற்றி வீரர்களாக விளங்குவர்.ஸ்காட்லாந்து மன்னர் 'ராபர்ட் தி புரூஸ்' இங்கிலாந்தை வெற்றி கொள்ள விரும்பி போர் தொடுத்தார். படைகளைத் திரட்டி தம் பக்கம் இருந்த ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகப்படுத்தி போரிட்ட போதும், புரூஸ் தோல்வியடைந்தார். ஒருமுறை, இருமுறை அல்ல... ஆறுமுறை முயன்றும் பலனில்லை.ஏமாற்றமடைந்த ஸ்காட்லாந்து மன்னர் கனத்த இதயத்தோடு வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்த நிலையில், காட்டில் இருந்த ஒரு குகையில் தங்க நேர்ந்தது. அங்கு சுவரில் சிலந்தி ஒன்று, வலை பின்னுவதைக் கண்டார். சிலந்தி பலமுறை முயன்றும், வலை நுால் அறுந்து போனது. இருந்தாலும் பின்னுவதை சிலந்தி நிறுத்தவில்லை. தொடர்ந்து முயற்சித்து வலையை பின்னி முடித்தது..இதை பார்த்த மன்னர் ஒரு புது தெம்போடு வீறு கொண்டு எழுந்தார்.'இறைவா! ஒரு பூச்சியின் மூலம் எனக்குப் பாடம் புகட்டினாய்' என்று சொல்லி மீண்டும் படைகளைத் திரட்டி இங்கிலாந்துடன் போரிட்டு வென்றார். 'விழுந்தால் விழுந்தது தான்' என்று இருந்தால் அது சவம்!'விழுந்தாலும் எழுவேன்' என்று இருந்தால் தானே அது சரீரம்!சாதனையாளர் என்ற பட்டத்தை யாரும் சாமானியமாகப் பெற்று விடவில்லை.சிக்கல்களில் அகப்பட்டாலும் சிதையாத நெஞ்சுடன், உருக்குலையாத உறுதி கொண்டு போராடியவர்களே வாழ்வில் புகழடன் திகழ்கின்றனர்.'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்வாசல் தோறும் வேதனை இருக்கும்!'என்று பாடிய கண்ணதாசன்'எதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!' என்று வாழும் வழியை விளக்குகிறார்.உற்சாகம் ஊற்றெடுக்கும் உள்ளம் இருப்பதால் தான், குழந்தைகள் தடுமாறி விழுந்தாலும் மீண்டும் குதுாகலத்துடன் எழுந்து கும்மாளமிடுகின்றன.தொடர் வெற்றிகளைப் பெறுவதால், சிலர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால் தான் அவர்களை வெற்றிகள் வந்தடைகின்றன.தொடரும்திருப்புகழ் மதிவண்ணன்அலைபேசி: 98411 69590