உள்ளூர் செய்திகள்

ஜெயித்து காட்டுவோம்! (18)

''புகைப்படத்தில் உள்ள நபரை காணவில்லை. கண்டுபிடித்து தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்'' இப்படிப்பட்ட அறிவிப்பை நாளிதழ்களில் பார்த்திருப்போம். மேற்கண்ட முறையில் இன்னொரு அறிவிப்பை, இந்த காலத்தில் வெளியிட தோன்றுகிறது என்றார் ஒருவர்.அந்த புதுமையான அறிவிப்பு என்ன தெரியுமா?''அண்மைக்காலமாக நம் சமூகத்தில் மனித பண்பாக போற்றப்படும் 'அன்பு' என்பதை காண முடியவில்லை.எங்கே போனது அன்பு?நண்பரின் கேள்வி நியாயமானது தானே!'அன்பு தான் இன்ப ஊற்று.அன்பு தான் ஆனந்தத்தின் பிரகாசம் அன்பு தான் உலக மகா சக்தி' என்கிறார் புத்தர்.சங்கரர், புத்தர், இயேசு, நபிகள் நாயகம், மகாவீரர் என அத்தனை சமயச் சான்றோர்களும் அன்பின் பெருமையையும் வலிமையையும் எடுத்துரைத்தும், அதன் வழி நடந்து காட்டியும் உலகம் அதை பின்பற்றுவதாக தெரியவில்லையே.குடும்பம் - உறவுகள், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவர், அலுவலகம் - வேலை என அனைத்துமே ஒரு வர்த்தக ரீதியான உடன்படிக்கைகளாக மாறி வருவதை தானே பார்க்க முடிகிறது?அன்பு என்னும் அடிவேரின் தொடர்பு அற்றுப் போனதால் தான் வழக்குகளும், வக்கிரங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகுகின்றன.காதலித்து கல்யாணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் திருமணம் ஆன சில மாதங்களில் நீதிமன்றம் நாடிச் செல்வதை காண முடிகின்றது.ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அநத பெண்ணின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் வாலிபர்கள் பற்றி தற்காலத்தில் தானே கேள்விப்படுகின்றோம்.முதியோர் விடுதி, குழந்தை காப்பகங்கள் அதிகரித்து வருவது, அன்பு குறைந்து வருவதை காட்டுகிறது.அண்ணன், தம்பியான சகோதரர் இருவரை அறியாத ஒரு ஊர்ப்பெரியவர், ''நீங்கள் இருவரும் சகோதரர்களா? என்னால் நம்ப முடியவில்லையே...'' என்று கேட்டார். பக்கத்தில் இருந்த மற்றொருவர் பதிலளித்தார், ''அவர்கள் இருவருக்கும் இடையே சொத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. அதை வைத்தே அவர்களை அண்ணன் தம்பி என்று அறியலாமே!'' என்றார்.சகோதரர்களை இந்த காலத்தில் இப்படி தான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது.'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்பு தோல் போர்த்த உடம்பு'என்கிறார் திருவள்ளுவர்.'இவர் மூலம் இந்த வேலையை இன்று சாதித்து கொள்ளலாம்' என்றால் தான் 'குட்மார்னிங் சார்' என்று சொல்கிறார்கள்.பாசாங்கு மிக்க வார்த்தைகள், போலியான புன்னகைகள், பணத்தை பிரதானமாக கருதும் உறவுகள் என மனிதர்கள் ரோபோக்களாக மாறி விட்டனர். 'அன்பு' எனும் குணத்தை இழந்ததால் பலரின் வாழ்க்கை பட்ட மரம் போலாகி விட்டது.மனித சமூகம் எதை பெற வேண்டும் என்று எண்ணுகிறதோ அவை அனைத்தையும் அன்பின் மூலமே அடைய முடியும் என்கிறார் மகாகவி பாரதியார்.'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவம் இல்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.'ஆங்கிலேயர்களிடமிருந்து நம் பாரத தேசத்திற்கு, அன்பு வழியில் தானே சுதந்திரம் கிடைத்தது!பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அந்நாட்டின் பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர் கேட்டார், ''உலகெங்கும் நடைபெற்ற போர்களில் எல்லாம் வெற்றி பெற்ற தங்களால், இந்தியாவில் மட்டும் ஏன் வெற்றி பெற வில்லை?''''காந்திஜி துப்பாக்கியை எடுத்து சண்டை செய்திருந்தால், நான் பீரங்கியை வைத்து கொன்றிருப்பேன். அவர் பீரங்கியை பயன்படுத்தி இருந்தால், நான் ராக்கெட்டை ஏவி அழித்திருப்பேன். ஆனால், அவர் ஏந்தி நின்றதோ அன்பு, அகிம்சை, அமைதி எனும் மிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள். அவற்றை அழிக்கும் ஆயுதத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'' என்றார்.சர்ச்சிலின் பதில் நம் ஒவ்வொருவரும் நெஞ்சில் பதிக்க வேண்டிய சத்தியம்! அன்பு மட்டுமே நாம் அனைவரும் எப்போதும் ஏந்த வேண்டிய ஆயுதம்!! தொடரும்- திருப்புகழ் மதிவண்ணன்அலைபேசி: 98411 69590