உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக் காட்டுவோம்! (22)

தற்காலத் தலைமுறையினரின் மனோபாவம் குறித்துக் கவியரசர் கண்ணதாசன் உரைநடை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.'ஏறிப் பறிக்க வேண்டிய மாம்பழத்தையும், தேங்காயையும் எட்டிப் பறிக்கும் வண்ணம் எளிதாக்கி விட்டது விஞ்ஞானம். இதன் காரணமாக உழைத்துப் பெறவேண்டியதை உட்கார்ந்தே பெற நினைக்கிறது இளைஞர் சமுதாயம்'.சிலர் எவ்வித முயற்சி, உழைப்பு இன்றி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று மோசமான பகற்கனவு காண்கின்றனர்.இன்னும் பலர் எடுத்த காரியத்தில் இரண்டொரு தடைகள் ஏற்பட்டாலே 'இச்செயல் நமக்கு ஒத்து வராது' என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.'எடுத்த காரியம் யாவினும் வெற்றி!எங்கு நோக்கினும் வெற்றி!'என்று பாடுகிற பாரதியாருக்கு வெற்றிக்கனி என்ன தானாகவா கையில் வந்து விழுந்தது!ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஒரு பக்கம்!அன்றாடக் குடும்பப் பிரச்னை மறு பக்கம்!கவிதை கேட்கக் கூட ஆட்கள் இல்லாத நிலை!'உப்புக்கும் புளிக்கும் என்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தால், உன்னை எப்படி பாடுவேன் பராசக்தி!' என்று அவரே ஒரு கட்டத்தில் அங்கலாய்க்கிறார்!இப்படிப்பட்ட இன்னல்களுக்கு இடையே தான் அவர் 'இந்தியா' பத்திரிகை நடத்தினார். இந்திய விடுதலைக்கு எழுச்சி கீதங்கள் பாடினார். ஆங்கிலத்திலும் கவிதை நுால் எழுதினார். கீதையைத் தமிழில் தந்தார். 'வால்ட்விட்மன்' முதல் ஜப்பானிய ஹைக்கூவரை அறிந்து வைத்திருந்தார்.பெல்ஜியம், பிஜித், ரஷ்யா என உலகளாவிய பார்வையில் பாடல்கள் புனைந்தார். 39வயதிலேயே மரணமடைந்த போதும் 'மகாகவி' என்ற புகழைப் பெற்றார்.'பட்ட காலிலே படும்' என்ற பழமொழிக்கு ஏற்ப அடுத்தடுத்து சோதனைகள் வந்தாலும், அவற்றை எதிர்த்து முன்னேற நினைக்கும் ஒருவனிடம், துன்பங்கள் தான் துன்பம் அடையும் என்று கூறுகிறார் வள்ளுவர்,'அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கன் இடுக்கட் படும்.'இந்திய கிரிக்கெட் வீரர் 'ஷிகர் தவான்' சொல்கிறார்.''தடைகளும்,தோல்விகளும் தான் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தருகின்றன. இந்த விஷயத்தில் 'இனி நான் எவ்வாறு இயங்க வேண்டும்' என முன்னேற்றச் சிந்தனைகளிலேயே அதிக கவனம் செலுத்தினேன்,'' என்று.ஒவ்வொருவரும் தனக்கான லட்சியத்தை நோக்கிப் பயணப்படும் போது மூன்று நிலைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவை, ஏளனம், எதிர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படுதல்.''நீயாவது அந்த நிலையை எட்டிப் பிடிப்பதாவது? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டால் அந்த முயற்சி கை கூடுமா என்ன?''இப்படி ஏளனம் செய்வோரிடம் இருந்து மீண்டு வந்தால் அடுத்த நிலை 'எதிர்ப்பு'. எதிரிகளின் தாக்குதல்களையும் சமாளித்து முன்னேறினால் தான் ஏற்றுக் கொள்ளப்படுதல் என்னும் மூன்றாவது நிலை உருவாகும்.ராமாயணத்தில் சிறப்பான பகுதியாக கருதப்படுவது 'சுந்தர காண்டம்'. சுந்தரகாண்டத்தின் கதாநாயகனாகச் சுடர் விடுகிறார் ஆஞ்சநேயர்.இலங்கையில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் சீதை. கடலைக் கடந்து தெற்குப் பக்கம் சென்றால் தேவியைக் காணலாம்.'கடலை தாண்டுவது என்பது என்ன சாதாரண செயலா? அத்தகைய கடினமான காரியத்தை மேற்கொள்ளும் போதும், அப்பயணத்தின் நடுவே ஆஞ்சநேயரைத் தடுத்து நிறுத்துவதற்கு தடைகள் மூன்று வந்தன என்று பாடுகிறார் கம்பர்.அதுவரை ஆழ்கடலுக்குள் மூழ்கி இருந்த மைந்நாகம் என்னும் மலை, அலைகளுக்கு மேல் வந்து 'என்னிடம் இளைப்பாறி, விருந்து அருந்தி பிறகு செல்க' என்றது.ஆஞ்சநேயரின் பலத்தை சோதிக்கும் பொருட்டு தேவர்களே 'சுரசை' என்ற அரக்கியை அனுப்பி அவரோடு போரிட வைத்தனர்.இலங்கை செல்லக்கூடாது என்று 'அங்கார தாரை' என்னும் ராட்சஷி பகைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டாள்.இத்தனை தடைகளையும் தாண்டி, சீதாதேவி இருக்குமிடம் சென்று 'கவலைப்படாதீர்கள்! கணவர் வருகிறார்! கட்டாயம் மீட்பார்!' என்று ஆறுதல் சொன்னார் ஆஞ்சநேயர்.அதனால் தான், 'செவிக்குத் தேன் என ராகவன் கதையைத் திருத்தும் கவிக்கு நாயகன்' என்று கவிச்சக்கரவர்த்தியாலும், பக்தர்களாலும் அவர் பாராட்டப்படுகிறார்.கப்பலைச் செலுத்துகிறார் மாலுமி ஒருவர். திடீரென்று கடலில் ராட்சத அலைகள் எழும்புகின்றன. பேய்க்காற்று சுழன்று அடிக்கிறது.மாலுமி சொல்கிறார், ''ஆர்ப்பரிக்கும் அலைகளும், சூறாவளிக் காற்றும் என்னை பொறுத்தவரை தடைகள் அல்ல. எப்படி எல்லாம் லாவகமாக கப்பலை இயக்க வேண்டும் என்று அவை கற்றுக் கொடுக்கின்றன,'' என்று.தடங்கல்கள் பல வந்த போதும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தடங்கள் பதிப்பவனையே சமுதாயம் பாராட்டும்.- தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்