கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 24
UPDATED : டிச 16, 2021 | ADDED : டிச 16, 2021
ராஜா, ராமனா - பரதனாகைகேயியை தனியே விட்டுவிட்டு வந்து விட்டாளே தவிர, அவளை இன்னும் கொஞ்சம் மூளைச் சலவை செய்திருக்கலாமோ என்று தோன்றியது மந்தரைக்கு. ஆகவே தான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் மனம் குழம்பிய கைகேயி நந்தவனம் சென்று திரும்பும்வரை காத்திருந்தாள். ''யோசிப்பதில் அர்த்தமே இல்லை கைகேயி. ராமன் அரசாண்டானானால் நீ அடிமையாக வாழ வேண்டியிருக்கும். யாருக்கு... கோசலைக்கு! ஒரு ராஜமாதாவான உனக்கு, இப்படி சம அந்தஸ்து உள்ள ஒருத்திக்கு சேவகம் செய்யும் கேவலம் வரத்தான் வேண்டுமா. ஆனால் தசரதன் உனக்கு ஆதரவாகப் பேசவே மாட்டார். அவருடைய நோக்கமெல்லாம் ராமனை ராஜாராமனாக்க வேண்டும் என்பதே! நீண்ட நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு, பிரமாண்டமாகத் திட்டமிட்டு, ஊர், உலகம் அனைவருக்கும் தெரிவித்து நடைபெற வேண்டிய வைபவத்தை ஏன் ரகசியமாக, நாளைக்கே நடத்திவிட அவசரப்பட வேண்டும்.''காரணம் பரதன். அவன் இல்லாதபோது நடத்தினால் அவன் வந்து கேட்டாலும், 'எல்லாம் முடிந்து விட்டது' என்று சொல்லித் தட்டிக் கழித்து விடலாமே. அவன் இந்த ஏற்பாட்டுக்கு இடையூறாக வந்துவிடுவானோ என்ற பயம்தானே. அதாவது பரதன் தான் அரியணைக்கு ஏற்றவன் என்பதை உணர்ந்திருக்கிறார் என்று தானே அர்த்தம்''கைகேயி ஆழ்ந்து சிந்திப்பதை அவளது முகம் காட்டியது. மந்தரை மனதுக்குள் மகிழ்ந்தாள்.இன்னும் துாண்டி விட்டாள். ''தசரதரின் இந்த மனநிலையில் நயமாக கேட்டால் அவர் அவ்வளவு சுலபத்தில் இசைந்துவிட மாட்டார். நீ அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அவர் அளித்த வரங்களை இந்த இரு செயல்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என அடம் பிடிக்க வேண்டும். பரதன் அரண்மனையை விட்டு விலகி, தெருவில் நின்று ராமனின் தயவுக்காக ஏங்கிக் காத்திருக்கப் போகும் அவலத்தை உன் மனத் திரையில் சித்திரமாக தீட்டிக்கொள். அப்போதுதான் எதிர்கால பயங்கரம் உனக்குப் புரியும். தொடர்ந்து ராஜமாதாவாக நீடிக்க வேண்டுமானால் உன் மகன் பட்டத்து ராஜாவாக ஆக வேண்டும். ஆமாம், நீ கோரப்போகும் இரு வரங்களால் இது முடியும். ஒரு வரம் பாதனுக்கு அரியணை அளிக்கட்டும்; இன்னொரு வரம் ராமனை ஆரண்யத்துக்கு அனுப்பட்டும்''திடுக்கிட்டு நிமிர்ந்தாள் கைகேயி. தன் வாழ்க்கை முறையையே திசைத் திருப்ப மந்தரை சொன்ன யோசனை அவளை பலமாகத் தாக்கியது. தசரதனை வீழ்த்தும் இறுதி அஸ்திரங்கள்தான் அந்த வரங்கள் என மந்தரை சொன்ன யோசனை, கைகேயியின் மனநிலைக்கும் ஏற்புடையதாகத்தான் இருந்தது. அதனால் மெல்லத் தலையசைத்தாள்.தன் திட்டத்தை அவள் ஏற்று விட்டதாகவே கருதினாள். அவளுக்குள் இருக்கும் ராஜதந்திரம், அவளுக்குப் பல உத்திகளைச் சொல்லித் தரும். அவளால் எளிதாக தசரதனை வழிக்குக் கொண்டுவர முடியும். தான் மேற்கொண்ட காரியம் வெற்றியடையப் போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள் மந்தரை. அயோத்தியின் அமைதியான சரித்திரம் தன்னால் அலங்கோலப்படப் போகிறது! எதிர்காலம் இதற்காக என்னை இகழும், கேவலப்படுத்தும், என் கண்ணின் மணியான ராமனும் என்னை உதாசீனப்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் தான் தயாராக இருக்க வேண்டும்… தசரதனை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, அவரை திக்பிரமையடைய வைக்க வேண்டும். அந்த வகையில் தன் தோற்றத்தை முற்றிலும் பாழாக்கிக் கொள்ள வேண்டும். தன்னைக் காணும் தசரதனை புத்தி பேதலித்த நிலைக்கு உட்படுத்த வேண்டும். அந்தத் தடுமாற்றத்தில் அவர் சம்மதிக்க வேண்டும். அதோ வருகிறார் தசரதன்…கைகேயி தலைவிரி கோலம் கொண்டாள். அணிந்திருந்த நகைகளைக் களைந்து அறையெங்கும் வீசினாள். திரைச் சீலைகளை கிழித்தாள். புடவை நெகிழ்ந்து அவிழ்வதை உணர்ந்தும் உணராதவளாக காட்சியளித்தாள்.அந்த அறைக்குள் உற்சாகமாக நுழைந்த தசரதன் ஒரே கணத்தில் மனத் தாக்குதலுக்கு உள்ளானார். இது என்ன அமங்கலக் கோலம்! கைகேயிக்கு என்ன நேர்ந்தது. இப்படி தரையில் புரளும் வகையில் அப்படி என்ன சோகம் அவளுக்கு. தசரதன் பதறித்தான் போனார். இப்படி ஒரு கோலத்தில் அவளைப் பார்த்ததே இல்லையே… ஓடிப்போய் அவளது கைகளைப் பற்றினார். ''கைகேயி, என்னாயிற்று உனக்கு. ஆனந்தத்தில் ஆழ்த்தும் நற்செய்தி சொல்ல வந்த என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறாய்'' என்று பதறினார். ''உங்களுக்கு வேண்டுமானால் ஆனந்தச் செய்தியாக இருக்கலாம், ஆனால் எனக்கு அராஜக செய்தி. நான் கேள்விப்பட்டேன். ராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்களாமே'' என அலட்சியமாகக் கேட்டாள். தசரதன் அதிர்ந்தார். அவருடைய குழப்பத்தையும், மன வேதனையையும் அதிகரிக்கும் வகையில் பெரிதாக ஓலமிட்டாள் கைகேயி. இத்தகைய கோலத்தில் அதுவரை தசரதன் மட்டுமல்ல, அரண்மனையிலேயே யாருமே அவளை பார்த்ததில்லை. ஒரே விஷயத்தைத் தாரக மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தாள். 'ராமன் வனம் ஏக வேண்டும், பரதன் முடி சூட வேண்டும்'''இப்படி அடம் பிடிப்பதில் அர்த்தமே இல்லை கைகேயி. உன்னைத் திருமணம் செய்த போது உன் தந்தையார் உனக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தால் அவனை அரசனாக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆனால் முதலில் கோசலைக்கு அல்லவா ராமன் பிறந்தான். பரதன் உனக்கு இரண்டாவதாகத் தானே பிறந்தான். ஆகவே உன் தந்தையாரின் வாக்குப்படி ராமனே அரசாளத் தகுதியானவன்'' தசரதன் கெஞ்சினார். கைகேயியோ மிஞ்சினாள். ''அதெல்லாம் தெரியாது. என் மகன் பேரரசுப் பாரம்பரியம் உள்ளவன். அவன்தான் உங்களின் ராஜ வாரிசாகவும் பதவி ஏற்க வேண்டும். இப்போதே பரதனை கேகயத்திலிருந்து வரவழைக்கிறேன். நாளைக்கு அவனை அரியணையில் இருத்தி முடிசூட்டுவது உங்கள் பொறுப்பு''''இல்லை. அதர்மமாகப் பேசுகிறாய். இப்படி ஒருபோதும் நீ நடந்ததில்லையே''''இருக்கலாம். இப்போது என் சொற்படி நடக்காவிட்டால், என் மகனின் எதிர்காலம் வீணாகிவிடும். பரதன்தான் சக்கரவர்த்தி, ராமன்தான் அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டியவன்''''இது என்ன பிதற்றல். என்னால் உன்னுடைய அராஜகமான திட்டத்துக்கு உடன்பட முடியாது.''''நீங்கள் உட்பட்டுதான் ஆக வேண்டும். நீங்கள் அளித்த இரு வரங்களை இப்போது கேட்கிறேன். அவற்றை நிறைவேற்றித் தாருங்கள். அது உங்களுடைய தார்மீகக் கடமை''''சம்பந்தமில்லாமல் முடிச்சு போடாதே. உனக்கு வரமளித்தது உண்மைதான். அவற்றை அயோத்தி சாம்ராஜ்யம் மேலும் சிறக்க பயன்படுத்துவாய் என்றே எதிர்பார்த்தேன்''''நானும் அதற்காகவே கேட்கிறேன். நீங்கள் அளித்த ஒரு வரம் மூலம் பரதன் நாடாள வேண்டும், இன்னொரு வரத்தால் ராமன் காடேக வேண்டும்''அப்படியே சரிந்து நிலைகுலைந்து விழுந்தார் தசரதன்.கைகேயி உற்றுப் பார்த்தாள். பலவகை உணர்வுகள் பேரலைகளாக அவளது மனதை அலைக்கழித்தன. ஆனால் கண்களிலும், முகத்திலும் தீர்மானம் கடுமையைக் காட்டியது. தன்னுடைய இந்த நடத்தை பிறரால் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படும் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை. தசரதன் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்ள அனுமதித்தது போலக் காத்திருந்தாள் கைகேயி.-தொடரும்பிரபு சங்கர் prabhuaanmigam@gmail.com