உள்ளூர் செய்திகள்

நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வளர்க!

பெரிய நிறுவனம் ஒன்றில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குறுகிய நிலையைக் கண்ட நீதிபதி பரிதாபம் கொண்டார். ''இன்று காலையில் உங்களுக்கு உணவு கொடுத்தார்களா'' எனக் கேட்டார். இல்லை என்று தலையாட்டினார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு நீதிபதி ஆணையிட்டார். இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. ''பரவாயில்லை இங்கேயே அமர்ந்து சாப்பிடுங்கள். அதற்குள் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன்'' என்றார் நீதிபதி.இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தார் இயக்குனர். ''என்ன இட்லியை மிச்சம் வைத்து விட்டீர்கள் சாப்பிடுங்கள்'' என்றார் நீதிபதி.''ஐயா... மூன்று இட்லி போதும். அதற்கு மேல் சாப்பிட முடியாது'' என்றார் இயக்குனர். ''பார்த்தீர்களா... உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான். அதற்கு மேல் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ஊழல் செய்தீர்கள். மனிதனின் அவசியத் தேவைகள் மிக குறைவானவை. ஆடம்பர தேவைகளே அதிகம். உங்கள் வயிற்றுக்கு நான்கு இட்லியே அதிகம். ஆனால் உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது'' என்றார் நீதிபதி. இயக்குனர் அழ ஆரம்பித்தார். மீதமாக வைத்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான். கொலை, கொள்ளை லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை. கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ தீமைகளைச் செய்கிறோம். வரிசையில் உணவுக்காகவோ, உத்யோகத்திற்கோ நம்பிக்கையுடன் நிற்பவர்களை புறம் தள்ளி விட்டு குறுக்கு வழியில் வாய்ப்பை தட்டிப் பறிப்பது, பொருளாதாரம் இல்லை என்பதற்காக நெருங்கிய உறவினர்களை ஒதுக்கி விட்டு வாய்ப்பு, வசதிக்காக வேறிடத்தில் சம்பந்தம் பேசி முடிப்பது, பசி, பணக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் பேசி விட்டு ஒன்றும் செய்யாமல் ஒதுங்குவது போன்ற அநியாயங்களைச் செய்து விட்டு புண்ணிய தலங்களுக்கு சென்று பரிகாரம் என்ற பெயரில் பிராயச்சித்தம் தேடுவது பெரும் பாவம். இது கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்கு கஷாயம் குடிக்கிற மாதிரி. உண்மையான மகிழ்ச்சி என்பது நம் அருகில் உள்ளவர்களை, நம்மைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துவது தான். நம்மிடம் உதவி பெற்றவர்கள் கடவுளிடம், 'எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து எங்களுக்கு உதவி புரிந்த இவருக்கு நுாறாண்டு காலம் வாழும் பாக்கியத்தைக் கொடு. ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு நீண்ட காலம் இவர் உதவ வேண்டும்' என முறையிடுவார்கள். பிறகு பாருங்கள். உங்களின் உடல்நலம் மேம்படும். நோய்நொடியின்று வாழ்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பெருகும். 'யாருப்பா இது... நாம் செய்ய வேண்டிய வேலையை இவன் தானாகவே முன்வந்து செய்கிறானே' என் கடவுளே உங்களைக் கண்டு ரசிப்பார். உலகில் யாரும் 200 ஆண்டுகள் உயிர் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை. உங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதியை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அப்போது உங்கள் குடும்பம் ஒரு கோயிலாகும். அதில் நீங்களே கடவுளாகத் திகழ்வீர்கள். எப்போதும் கடவுளிடம் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஒரு நாளாவது நம்மிடம் மீதமுள்ள உணவு, உடைகளை இல்லாதவர்களை தேடிச் சென்று கொடுத்திருக்கிறோமா... இப்போதே கொடுத்து பாருங்கள். கொடை வள்ளல் கர்ணனாக ஆவீர்கள். அப்போது அகம் அழகு பெறும். முகம் பொலிவு பெறும். தர்ம சிந்தனை மேலோங்கும்.