உள்ளூர் செய்திகள்

மகாபாரத மாந்தர்கள் - 31

அரவானாகிய நான்...பாண்டவர்களில் நடுநாயகமான அர்ஜுனனுக்கும் உலுாபி என்பவருக்கும் பிறந்தவன் நான். என் தாயும் தந்தையும் மணம் செய்து கொண்ட பின்னணியே மிக வித்தியாசமானது.திரவுபதியை மணந்த போது பஞ்சபாண்டவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் பொது நன்மை கருதி அதை ஒருமுறை அர்ஜுனர் மீற வேண்டி வந்தது. இதன் காரணமாக அர்ஜுனர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வெளியேறி பல இடங்களுக்குச் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்டு தவம் செய்யும்படி ஆனது. அப்போது அவர் பாரதத்தின் வடகிழக்குப் பகுதிக்கும் சென்றார். அங்குள்ள கங்கை நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது அவர் அழகில் மயங்கிய உலுாபி அந்த நதியின் அடிப்புரத்துக்கு அவரை இழுத்துச் சென்றார். என் தாய் உலுாபி ஒரு நாக கன்னிகை. அவர் உடலின் மேல்பாதி மனித உருவிலும் மறுபாதி பாம்பு உருவிலும் இருந்தது. இவரது தந்தை நாக அரசனான கவுரவ்யர். அவர்தான் கங்கை நதியின் அடிப்புறத்தில் உள்ள நாக ராஜ்ஜியத்தின் தலைவர்.அர்ஜுனரின் அழகில் மயங்கி உலுாபி அவரைத் தன் ராஜ்ஜியத்துக்கு அழைத்துச் சென்றார். அதேசமயம் பாண்டவர்கள் நாக வம்சத்துக்கு எதிராக செயல்படுபவர் என்று தான் கருதுவதாகக் கூறினார். பிற்காலத்தில் கவுரவர்களுடன் போர் புரிய நேரிட்டால் தனக்குப் பல கோணங்களிலிருந்து நட்பும் ஆதரவும் தேவைப்படும் என்று கருதிய அர்ஜுனர், பாண்டவர்கள் நாகலோகத்துடன் நட்பாக இருக்கவே விரும்புவதாக குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து தன்னை அர்ஜுனர் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று உலுாபி வேண்டுகோள் விடுக்க, அதை அர்ஜுனன் மறுத்தார். பின்னர் உலுாபி பலவிதமாகப் பேசி அவரைத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தார். இதைத் தொடர்ந்து தண்ணீரில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் அர்ஜுனரின் அடிமைகள் என்றும் தண்ணீரில் அர்ஜுனர் ஒருபோதும் தோற்கடிக்கப்பட்ட மாட்டார் என்றும் வரங்களை அளித்தார்.நான் நாகலோகத்தில் வளர்ந்தேன். அதே சமயம் என் தந்தை அர்ஜுனரின் பராக்கிரமங்களை என் தாய் தொடர்ந்து கூறி வந்தார். ஒருகட்டத்தில் தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற நாகலோகத்தை விட்டு நீங்கினேன். அப்போது தன் தந்தையான இந்திரனோடு இந்திரலோகத்தில் அர்ஜுனர் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன். அங்கு என்னைப் பார்த்து மகிழ்ந்தார் என் தந்தை. பின்னர் குருக்ஷேத்திரத்தில் நடைபெற இருக்கும் மகாபாரதப்போரில் நானும் அவருக்கு உதவ வேண்டும் என்று கேட்க ஒத்துக் கொண்டேன்.மகாபாரதப் போரில் ஸ்ருதயுஷ் அவந்தி நாட்டு இளவரசர்களான விந்தன், அனுவிந்தன் ஆகியவர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடித்து. சகுனியின் சகோதரர்களையும் கொன்றேன். என்னால் தன் படைக்கு நேரும் கஷ்டங்களைப் பார்த்து துரியோதனன் ராட்சதனான ஆலம்புஷன் என்ற அரக்கனை என்மீது ஏவினான். எங்கள் இருவருக்குமிடையே கடுமையான சண்டை நடந்தது. அந்த அரக்கனின் தேரை நான் உடைத்தேன். அவனைப் பல துண்டுகளாக்கினேன். ஆனால் அந்தத் துண்டுகளை சேர வைத்து மீண்டும் உருவம் கிடைக்கும் சக்தி அவனுக்கு இருந்தது. நான் நாக வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால் பல தலைகள் கொண்ட பாம்பாக அவனை அணுகினேன். ஆனால் அவனோ கருடனின் உருவை எடுத்துக் கொண்டு என்னை சின்னாபின்னம் ஆக்கினான். பின்னரும் மனம் தளராமல் சகுனியிடம் கடும் போரிட்டேன். அப்போது தந்திரமாக பின்னால் வந்து என்னைக் கொன்றான் ஆலம்புஷன்.இதற்குப் பழி தீர்க்கும் வகையில் என் பெரியப்பா மகனான கடோத்கஜன் ஆலம்புஷனை மகாபாரதப்போரின் பதினான்காம் நாள் அன்று கொன்றார்.-தொடரும்வியாசரின் மகாபாரதம் அர்ஜுனனுக்கும் உலுாபிக்கும் திருமணம் நடந்ததையும் அவர்களுக்கு அரவான் பிறந்ததையும் சித்தரிக்கிறது. அதில் அரவான் மகாபாரதப் போரில் இறப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால் பாரதத்தின் தமிழ் வடிவங்களில் அரவான் பலி கொடுப்பதாக கூறப்படுகிறது.அதன்படி அரவான் மிக அழகன். சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் பொருந்தியவன். ஆனால் இந்தத் தன்மையே அவனுக்கு முடிவைத் தந்தது. மகாபாரத யுத்தம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் பாண்டவர்கள் தரப்பு வெற்றி பெற வேண்டுமானால் அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒருவரை காளிக்கு பலி கொடுக்க வேண்டும் என குறிப்புகள் கூறின. கண்ணன் அரவானைத் தேர்ந்தெடுத்தார். பாண்டவர்கள் வெற்றிக்காக இந்த தியாகத்தை நீ செய்வாயா என்று கேட்க, எந்தத் தயக்கமும் இன்றி அரவான் சம்மதித்தான். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளை விதித்தான். போருக்கு முன்பு தனக்குத் திருமணம் நடைபெற வேண்டும். போருக்கு முன்பே தான் இறந்தாலும் போரில் நடைபெறும் நிகழ்வுகளை தன்னால் பார்க்க முடிய வேண்டும். பாரதப் போருக்கு முன்பாகவே அவனை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்த பிறகு யார் அவனுக்குப் பெண் கொடுப்பார்கள். கண்ணனே மோகினி அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டார். இறந்த பின்னும் ஆவி ரூபத்தில் அரவானால் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை காணமுடிந்தது. கண்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டதால் திருநங்கைகள் அரவான் கோயிலுக்குச் சென்று அவனைத் தன் கணவராக வரித்துக் கொண்டு தாலி கட்டிக் கொள்கின்றனர். பின்னர் அரவான் மகாபாரதப் போருக்கு களபலியானான் என்பதால் தங்கள் தாலியைத் துறந்து விதவைக் கோலத்தில் ஒப்பாரி வைக்கிறார்கள்.விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் இந்த நிகழ்வுகள் கூத்தாண்டவர் வழிபாடாக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கூத்தாண்டவர் என்று குறிப்பிடப்படுவது அரவான்தான். தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் அரவான் கோயில்கள் உள்ளன. அவர் காவல் தெய்வமாகவும் பல பகுதிகளில் வழிபடப்படுகிறார். சிங்கப்பூரில் உள்ள தொன்மையான மகா மாரியம்மன் கோயிலில் அரவானின் முகம் மரத்தில் பிரம்மாண்ட வடிவில் காணப்படுகிறது. இந்தோனேசியாவிலும் அரவான் வழிபாடு உள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலையான கூத்து வடிவிலும் அரவான் கதை நிகழ்த்தப்படுகிறது.ஜி.எஸ்.எஸ்.aruncharanya@gmail.com