மகாபாரத மாந்தர்கள் - 18
ரிஷ்ய சிருங்கராகிய நான்...விபாண்டகர் ஒரு சிறந்த முனிவர். அவருடைய மகன் நான். என் தந்தையுடன் வனப்பகுதியில் வசித்து வந்தேன். தனக்குத் தெரிந்த அத்தனை மந்திரங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார் அவர். நான் அப்பழுக்கில்லாத பிரம்மச்சாரியாக வளர்ந்தேன். ஒரு பெண்ணையும் நான் சந்தித்ததே இல்லை. சொல்லப்போனால் ஆண், பெண் என்று பேதம் உண்டு என்பதையே நான் அறிந்திருக்கவில்லை!இந்தக் காலகட்டத்தில் அங்கதேசம் பஞ்சத்தால் வாடிக்கொண்டிருந்தது. அங்கு நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. தன் நாட்டிலுள்ள மந்திரிகளையும் அந்தணர்களையும் அழைத்து இது குறித்து ஆலோசித்தான் மன்னன் ரோமபாதன். அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு 'பரிபூரணமான பிரம்மச்சாரியாக இருக்கும் அவரை நம் நாட்டுக்கு அழைத்து வந்தால் நாட்டில் மழை பொழியும்' என்றனர். ஆனால் என் தந்தை ஒரு போதும் நான் வனத்தை விட்டு வெளியேற சம்மதிக்க மாட்டார் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. எனவே ஒரு சதித் திட்டம் தீட்டினர். என் தந்தை வெளியே சென்றிருந்த சமயமாகப் பார்த்து அரசனால் அனுப்பப்பட்ட அழகிய இளம்பெண் ஒருத்தி என்னிடம் வந்தாள். 'முனிவரே நலமா. வனத்தில் உங்களுக்கு போதிய கிழங்குகளும் கனிகளும் கிடைக்கின்றனவா. உங்கள் தந்தை நலமா' என்றெல்லாம் கேட்டாள். அதுவரை நான் எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லை. எனவே வந்திருந்த பெண்ணையும் என்னைப் போன்ற ஒரு ரிஷி குமாரன் என்றே நினைத்தேன். ஆனால் இயற்கையின் நியதி காரணமாக என் மனதில் அவளைப் பார்த்ததும் ஒரு புதிய கிளர்ச்சி பொங்கியது. 'உங்களது ஆசிரமம் எங்கே இருக்கிறது' என்று கேட்டேன். அந்த ரிஷிகுமாரர் 'சொல்கிறேன். அதற்கு முன் நான் உங்களை நமஸ்கரிக்கப் போகிறேன். நாங்கள் நமஸ்கரிக்கும் முறை இதுதான்' என்றபடி என்னைக் கட்டித் தழுவினாள். அதுவரை அப்படி ஒரு ஆனந்தத்தை நான் அனுபவித்ததே இல்லை. வார்த்தைகள் குழற, 'சிறிது நேரத்தில் என் தந்தை வந்துவிடுவார் காத்திருங்கள்' என்றேன். அதைக் கேட்டு திடுக்கிட்ட அவர் 'நான் இன்னொரு நாள் வருகிறேன்' என்றபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.சிறிது நேரம் கழித்து அந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் என் தந்தை. என் முகம் மிக வித்தியாசமாக ஒளி விடுவதைக் கண்டு அதன் காரணத்தைக் கேட்டார். 'மிகச் சிறப்பாக தோற்றமளித்த ஒரு பிரம்மச்சாரி இங்கே வந்திருந்தார். அவர் குரல் மிக இனிமையாக இருந்தது. அவர் என்னைக் கட்டித்தழுவி நமஸ்கரித்தார். அது எனக்கு மிக ஆனந்தமாக இருந்தது' என்றேன். கூடவே 'மீண்டும் மீண்டும் அந்த பிரம்மச்சாரியைப் பார்க்கவேண்டும் போல் எனக்கு தோன்றுகிறது தந்தையே' என்றும் கூறினேன். என் தந்தைக்கு உண்மை புரிந்திருக்க வேண்டும். 'இது எல்லாம் மாயை' என்று கூறி என் மனதை திசை திருப்பப் பார்த்தார். சில நாட்களுக்குப் பிறகு இளம் ரிஷிகுமாரராக எனக்கு தோற்றமளித்த அந்த இளம் பெண் மறுபடியும் என் ஆசிரமத்திற்கு வந்தாள் - என் தந்தை இல்லாத சமயமாகப் பார்த்துதான். 'ரிஷிகுமாரரே, என்னுடைய ஆசிரமத்துக்குப் போகலாமா' என்று அவள் கேட்க உடனே அதற்கு சம்மதித்து நான் கிளம்பிவிட்டேன். அங்க நாட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள். அந்த நாட்டுக்குள் நான் நுழைந்தவுடன் அங்கு மழை பெய்ய ஆரம்பித்தது. மன்னன் மிகவும் மகிழ்ந்தார். என்னை அரண்மனையில் தங்க வைத்து பணிவிடைகள் செய்தார். தன் மகள் சாந்தாவை எனக்கு மணம் முடித்தார்.அதேசமயம் என் தந்தை என்னைத் தேடிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக அங்க நாட்டை அடைந்தார். வழியில் அவர் கோபம் தணியும் வகையில் பலவித உபசாரங்களை அவருக்கு செய்ய ஏற்பாடு செய்தார் மன்னராகிய என் மாமனார். எனவே அரண்மனைக்கு வரும்போது என் தந்தையின் கோபம் தணிந்து இருந்தது. அங்கே நான் மிகுந்த ஆனந்தத்துடன் என் மனைவியோடு மணவாழ்க்கை நடத்துவதைக் கண்டதும் முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். 'இங்கேயே இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள். உனக்கு ஒரு மகன் பிறந்ததும் மீண்டும் வனத்துக்கு என்னுடன் வந்து விடு' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அதற்கு பிறகு நான் தந்தை வசித்து வந்த வனத்தை அடைந்தேன். என் மனைவி சாந்தாவும் அந்த ஆசிரமத்துக்கு வந்து எனக்குப் பணிவிடைகள் செய்ய தொடங்கினார்.-தொடரும்ராமாயணத்தில் ரிஷ்ய சிருங்கரின் கதை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கர் செய்து வைக்க, அதன் பயனாக ராமன் உட்பட நான்கு மகன்கள் பிறந்தனர். மகாபாரதத்தில் ரிஷ்ய சிருங்கர் குறித்து விரிவாகக் கூறப்படுகிறது. லோமசர் என்ற முனிவர் யுதிஷ்டிரனிடம் இவரது வாழ்க்கையை விளக்குகிறார்.காட்டில் வசித்து வந்த போது ஒரு சிவலிங்கத்தை தொடர்ந்து பூஜை செய்து வந்தவர் ரிஷ்யசிருங்கர். அவர் வாழ்வில் பின் பல அனுபவங்கள் ஏற்பட்டன. பெண் என்பதையே அறியாமல் வளர்ந்த அவர் பின்னர் சாந்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். நாளடைவில் அவர் மனம் பேரின்பத்தை நாடியது. காட்டுக்குச் சென்று தான் வணங்கிய சிவலிங்கத்தை வழிபடலானார். காலப்போக்கில் அவரது ஆத்மா உடலிலிருந்து நீங்கி சிவலிங்கத்தில் புகுந்தது. அதற்குப் பின்னர் அங்கு வந்த பக்தர்கள் சிவனோடு சேர்த்து ரிஷ்ய சிருங்கரையும் வணங்குவதாக நம்பினார்கள். கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிரபல புண்ணியத் தலம் சிருங்கேரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் துாரத்தில் உள்ள 'கிக்கா' என்கிற கிராமம். இங்குதான் மேற்படி லிங்கம் உள்ளது. சிருங்கேரி என்பது சிருங்க கிரி என்றும் அழைக்கப்படுகிறது. ரிஷ்யசிருங்கர் வசித்ததால் தான் இந்த பெயர் என்பவர்களும் உண்டு. லிங்கத்தின் நெற்றியில் கொம்பு காணப்படுகிறது. ரிஷ்யசிருங்கர் பிறக்கும்போது நெற்றியில் ஒரு கொம்புடன் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிங்கம் மலஹணிகரேஸ்வரா என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் 'மனதின் அசுத்தங்களை அழிப்பவர்'. லிங்கம் ரிஷ்ய சிருங்கருக்கு முன்பே அவரது தந்தையாலும் வழிபடப்பட்டது. இதை விளக்கும் வகையில் இவரது தந்தை விபாண்டகர் சிவலிங்கத்தை வழிபடுவதை இங்குள்ள ஒரு சிற்பம் தெரியப்படுத்துகிறது.இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுா மாவட்டம் பஞ்சார் என்ற இடத்தில் சென்னி கோட்டையில் உள்ளது மற்றொரு ரிஷ்ய சிருங்கர் கோயில். குலுாவில் இருந்து 50 கி.மீ., துாரத்தில் உள்ளது இக்கோயில். இங்கே ரிஷ்ய சிருங்கரையும் அவரது மனைவி சாந்தாவையும் வழிபடுகிறார்கள்.உள்ளூர்வாசிகள் இக்கோயிலை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். ரிஷ்யசிருங்கரை சிருங்கி ரிஷி என்கிறார்கள். தங்களின் 18 தெய்வங்களில் இவரே முக்கியமானவர் என்கின்றனர். பஞ்சார் பள்ளத்தாக்கின் காவல் தெய்வம் ரிஷ்யசிருங்கர். ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள்.ஜி.எஸ்.எஸ்.