உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு!

வியாபாரி ஒருவருக்கு மூன்று மகன்கள். தனக்குப் பின் வியாபாரத்தை கவனிக்க தகுதியானவன் யார் என அறிய விரும்பினார். மகன்களை அழைத்து, ''நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதற்காக ஒவ்வொருவருக்கும் நுாறு சீப்பு தரப்படும். மூவரும் தனித்தனியாக ஏதாவது புத்த மடத்திற்கு சென்று சீப்பு விற்க வேண்டும். மூன்று நாளைக்குள் யார் அதிகம் சீப்புகளை விற்கிறீர்களோ அவரே வெற்றியாளர்'' என்று சொல்லி அனுப்பினார்.'புத்த துறவிகள் மொட்டை போட்டிருப்பார்களே... அவர்களிடம் எப்படி சீப்பு விற்க முடியும்?.' என்ற குழப்பத்துடன் ஆளுக்கொரு மடத்தை நோக்கி சென்றனர். மூன்றுநாள் கடந்தது. மகன்களை அழைத்து விபரம் கேட்டார் வியாபாரி.முதல் மகன் சொன்னான், ''நான் இரண்டு சீப்பு விற்றேன்''''பரவாயில்லை. எப்படி விற்றாய் என்பதை மட்டும் சொல்'' என்றார் வியாபாரி''முதுகு சொரிய பயன்படும் என்றேன். அரைமனதாக ஒரு துறவி இரண்டு சீப்பு வாங்கினார்'' என்றான்.இரண்டாம் மகன் சொன்னான், ''மடத்திற்கு வரும் பக்தர்கள் கலைந்த தலையுடன் வந்தால் நன்றாக இருக்காதல்லவா.. வாசலில் ஒரு கண்ணாடியுடன் சீப்பு வைத்தால் சீவிக் கொள்வார்கள்' என்றேன். பத்து சீப்புகளை வாங்கி கொண்டனர். ''ஓ... நல்ல யோசனை தான்'' என்றபடியே மூன்றாவது மகனைப் பார்த்தார்.அவன் சொன்னான், ''அப்பா.. நுாறு சீப்பையும் விற்றேன். இன்னும் நுாறு சீப்பு தேவை '' என்றான்.ஆச்சர்யம் தாங்கவில்லை வியாபாரிக்கு.சிரித்தபடியே, ''பிரமாதம். பிரமாதம்..! எப்படி விற்றாய்?'' எனக் கேட்டார். ''சீப்புகளில் புத்தரின் உபதேசங்களை பொறித்தேன். அதை ஆசையுடன் பக்தர்கள் வாங்கிவிட்டனர்'' என்றான்.'சபாஷ்! என்ற வியாபாரி மூன்றாவது மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். 'எப்படியும் மூன்றாவது மகன் தான் வெற்றி பெறுவான்' என்று கதையின் ஆரம்பத்திலேயே நினைத்திருப்பீர்கள். ஆனால், 'இந்த நபர் போல நம்மால் முடிய வில்லையே ஏன்?' என்று நினைத்திருப்பீர்களே...அதற்கு காரணம், ஒரு விஷயத்தை, ஒரே கோணத்தில் மட்டும் அணுகாமல், மாற்றி யோசித்தால் போதும். சிறு மாற்றம் கூட பெரிய ஆதாயத்தை தரும்.