உள்ளூர் செய்திகள்

பணமுடிப்பு

மகான் துகாராமை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்பினார். அவரை அழைத்து வர பல்லக்கு, குதிரை, யானைகளை அவரின் குடிசைக்கு அனுப்பினார். பணியாளர்கள், ''சுவாமிஜி! தங்களை தரிசிக்க மன்னர் விரும்புகிறார். தாங்கள் விரும்பும் வாகனங்களில் உங்களை அழைத்து செல்ல வந்திருக்கிறோம். எதில் வேண்டுமானாலும் நீங்கள் வரலாம்''என்றனர்.''வாகனம் எதுவும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால்கள் இருக்கிறது. நடந்தே வருகிறேன். ஆனால், இப்போது பூஜை செய்து கொண்டிருக்கிறேன். வர இயலாதே,” என்றார்.“தேடி வந்த ராஜ உபசாரத்தை மறுக்கும் இவர் மன்னரின் கோபத்திற்கு ஆளாகப் போகிறார்,” என நினைத்த பணியாளர்கள், மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.சிவாஜிக்கு கோபம் வரவில்லை. மாறாக, துகாராமிற்கு காணிக்கை அளிக்க பை நிறைய பொற்காசுடன் குதிரையில் புறப்பட்டார்.“சுவாமிஜி....தவறுக்கு மன்னியுங்கள். தங்களைத் தரிசிக்க, நான் முதலிலேயே வந்திருக்க வேண்டும்,” என்றார்.“தவறு செய்தால் தானே மன்னிப்பதற்கு?,” என்று சொன்ன துகாராம், சிவாஜியை அன்புடன் தழுவிக் கொண்டார். சிவாஜி, ''சுவாமி... இந்த காணிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்''என பணமுடிப்பு கொடுக்க, ''பணத்தாசையில் சிக்கினால் பக்தி பயனற்று போகுமே'' என்றார் துகாராம். மன்னர் சிவாஜி அதை ஏழைகளுக்கு தானம் அளித்தார்.