ராம்லீலா
சீதையை ராவணன் கடத்திச் சென்ற கவலையில் இருந்தார் ராமர். அவரைச் சந்திக்க வந்த நாரதர், “வருந்தாதே ராமா! நவராத்திரி விரதமிருந்த சிவபெருமான், அசுரர்களான திரிபுராந்தகர்களை அழிக்கும் சக்தி பெற்றார். இந்த விரத பலத்தால் மது, கைடபர் என்னும் அசுரர்களை மகாவிஷ்ணு கொன்றார். விருத்திராசுரனை இந்திரன் வென்றார். அன்னை பராசக்தி துன்பங்களை நொடியில் போக்கும் சக்தி உடையவள். நானே உனக்கு குருநாதராக இருந்து விரதம் பூர்த்தியாகும்படி செய்கிறேன்” என்று ஆசியளித்தார். பராசக்தியை பிரதிஷ்டை செய்து ராமன் நவராத்திரி விரதம் மேற்கொண்டார். துர்கா அஷ்டமியன்று நள்ளிரவில் பராசக்தி தரிசனம் தந்து, “ராமா! நீ செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்தேன். விரும்பிய வரத்தை தருகிறேன்” என வாக்களித்தாள். “ராமா! நீயே மச்சமாக (மீன்) அவதரித்து வேதங்களை மீட்டாய். ஆமையாய் வந்து மந்திர மலையைத் தாங்கி தேவர்களுக்கு அமுதளித்தாய். பன்றி உருவம் தாங்கி கோரப்பல்லால் பூமியைக் காத்தாய். நரசிங்கமாக அவதரித்து இரண்யனை கொன்றாய். குள்ள வாமனனாக வந்து மகாபலியின் செருக்கைப் போக்கினாய். பரசுராமனாக வந்தவனும் நீ தான். இப்போது தசரத சக்கரவர்த்திக்கு மகனாகப் பிறந்துள்ளாய். ராவணனைக் கொன்று சீதையை மீட்கும் சக்தியை உனக்கு தருகிறேன்” என்றாள்.மகாவிஷ்ணுவின் அம்சம் ராமன் என்பதை ஞாபகப்படுத்தியது போல், வானரக்கூட்டங்கள் தேவர்களுடைய அம்சம் என்பதையும், லட்சுமணன் ஆதிசேஷனின் அம்சம் என்பதையும் நினைவூட்டினாள். ராவண சம்ஹாரத்திற்குப் பிறகு இந்த ராஜ்யத்தை பத்தாயிரம் ஆண்டுகள் அரசாள்வாய் என்று சொல்லி மறைந்தாள். அதன்பின் நாரதரிடம், “நவராத்திரி விரதமிருக்க உதவிய உமக்கு குருதட்சணை தர பொருள் இல்லையே” என்றார் ராமர்.“ ராமா... தட்சணையை விட உன் அன்பே எனக்கு விருப்பமானது. வெற்றியும் மங்களமும் உனக்கு உண்டாகும் போது, அவை உலகத்திற்கே உரித்தானதாக அமையும். அதில் எனக்கும் பங்குண்டு என்பதில் மகிழ்ச்சி” என்று சொல்லி புறப்பட்டார் நாரதர். பராசக்தியிடம் வரம் பெற்ற ராமன் போரில் ராவணனைக் கொன்று சீதையை மீட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் 'ராம்லீலா' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.