உள்ளூர் செய்திகள்

பேசும் தெய்வம்! (8)

'சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை;சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை'என்பது பிரபலமான வாக்கு. அப்படிப்பட்ட முருகன் அடியார் ஒருவருக்கு ஆரோக்கியம் வழங்கிய அற்புதம் சென்னையில் நிகழ்ந்தது. 'தருமமிகு சென்னை' என வள்ளலார் பாடிய புண்ணிய பூமியான இங்கு, ராயபுரத்தில் பழனியாண்டவர் நிகழ்த்திய திருவிளையாடல் இது. வடசென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமி கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். காலப்போக்கில் கவிராயரின் குடும்பத்தில் வறுமை தலைகாட்டியது. ஒரு நாள்... அடியாருக்கு உணவிட வழியில்லாமல் போனது. மனம் சற்று கலங்கினாலும் அவரது மனைவி வருந்தவில்லை. கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை கணவரிடம் கொடுத்து விட்டு, மஞ்சள் கயிறை அணிந்து கொண்டார்.அதை விற்று கிடைத்த பணத்தில், அடியாருக்கு அமுது படைக்கும் பணி தொடர்ந்தது. இருந்தாலும்,'கஷ்டம் கடிதத்தில் வந்தால், தரித்திரம் தந்தியில் வரும்' என்பது போல, கவிராயருக்கு விரைவாதம் என்னும் நோய் தாக்கியது. வலி தாங்காமல் கலங்கினார் கவிராயர். மருத்துவம் எதுவும் பலன் அளிக்கவில்லை. நாளடைவில் நோயின் கொடுமை அதிகரித்தது. ''பழனியாண்டவா... உன்னை தவிர எனக்கு யாரப்பா இருக்கிறார்கள்? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்களே.... வலி தாங்க முடியவில்லை ஐயா !' என்ற படியே கதறி அழுதார் கவிராயர். குழந்தையின் கண்ணீரை கண்ட, தாய் ஓடி வருவது போல, முருகனும் பக்தரை காக்க விரைந்தார். அழகான இளைஞன் வடிவில் தோன்றினார். சிறு மண் குடுவை ஒன்று கையில் இருந்தது. அதில் இருந்த தைலத்தை பஞ்சினால் தோய்த்து, கவிராயருக்கு நோய் கண்ட பகுதியில் தடவினார் அத்துடன், ''கவிராயா! கலங்க வேண்டாம். நாளை காலை குணமாகி விடும்' என்று சொல்லி மறைந்தார். நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது கவிராயருக்கு. சில விநாடிகள் கழித்து கண் திறந்த போது, உடம்பில் மருந்து தடவியிருந்தது தெரிய வந்தது. கண்ணீர் வழிய கைகளைக் கூப்பி,'' பழனியாண்டவா! தேடி வந்து நோய் தீர்த்த தெய்வமே! ஐயா! உனக்கு என்ன கைமாறு செய்வேன்? அடியேன் அன்னக்காவடி எடுத்து வந்து, நன்றிக்கடன் செலுத்துவேன்'' என்றார். இளைஞராக வந்து முருகன் சொன்னது போலவே மறுநாள் காலையில் கவிராயரின் நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 'அன்னக்காவடி கட்டிக் கொண்டு வருகிறேன்' என்று சொன்னால் ஆயிற்றா? அதற்கு வழி வேண்டாமா. ஏற்கனவே ஏழ்மையில் வாடும் கவிராயர், எப்படி காவடி செலுத்த முடியும்?''அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்தருள் பெருமாளே''என்ற அருணகிரிநாதரின் வாக்கு பொய்யாகுமா? கவிராயரின் விருப்பத்தை நிறைவேற்ற துணிந்தார் வள்ளி மணாளன். சென்னையில் வசித்த குயவர் ஒருவர் கனவில் தோன்றி, ''இரு மண் பானைகளைக் கொண்டு போய், கவிராயரிடம் கொடு!'' என உத்தரவிட்டார். அத்துடன் அங்காளம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த கந்தன் செட்டியார் என்னும் வியாபாரியின் கனவில் தோன்றி, ''கவிராயருக்கு தேவையான அரிசியை கொடு'' என உத்தரவிட்டார். இவர்கள் கொண்டு போய் கொடுத்தால் கூட, கவிராயர் ஏற்க வேண்டுமே....மறுத்தால் என்ன செய்வது? கவிராயரின் கனவிலும் தோன்றி, ''கவிராயா... காவடி செலுத்த இரு பானைகளும், அரிசியும் இன்று உன்னை தேடி வரும். பெற்றுக் கொள்'' என்று சொல்லி மறைந்தார். அதன்படியே பொருட்கள் வந்தன. கவிராயர் அன்னக்காவடியை எடுத்தபடி, சென்னை ராயபுரத்திலிருந்து பழநி யாத்திரை புறப்பட்டார். பழநியை அடைய நாற்பத்தைந்து நாட்கள் ஆயின. அந்த நேரத்தில் கோயில் நிர்வாகிகள் கனவில் தோன்றிய முருகன், ''காவடி சுமந்தபடி பக்தர் கவிராயர் வருகிறார். வரவேற்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என உத்தரவிட்டார். அப்பப்பா.... அடியார்க்காக ஆறுமுக வள்ளல் என்னவெல்லாம் செய்கிறார்! கவிராயர் பழநிமலை அடிவாரத்தை நெருங்கும் போது, மங்கல வாத்தியங்கள் முழங்கியது. மாலை மரியாதையுடன் அவரை நெருங்கிய கோயில் நிர்வாகிகள், கவிராயரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போதும் அதிசயம் நிகழ்ந்தது. கவிராயரின் காவடியிலிருந்து பானைகளை அவிழ்த்த போது, ஆவி பறக்க அன்னம் இருந்தது.தரிசனம் முடித்த கவிராயர் மீண்டும் ஊர் திரும்பினார். பழனியாண்டவர் மீது தினமும் பாடல் பாடி காலம் கழித்தார். அவரது இறுதிக்காலம் நெருங்கியது. உறவினர்கள் சுற்றியிருக்க, கவிராயரின் பேரனும் உடனிருந்தான். உயிர் பிரிந்த போது, கவிராயர் வழிபட்ட பழனியாண்டவர் படத்திலும் சுவாமிக்கு கண்ணீர் வழிந்தது. அந்த சிறுவன் தான், இருபதாம் நுாற்றாண்டில் முருகனை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பாம்பன் சுவாமிகளின், பிரதான சீடர் பாலசுந்தர சுவாமிகள்.தொடரும்அலைபேசி: 97109 09069- பி.என். பரசுராமன்