உள்ளூர் செய்திகள்

அவள் திருப்பித்தந்த தொகை

கணவரை இழந்த ஏழைப்பெண் ஒருத்தி (தன் இரு குழந்தைகளுடன்) தன் பிரச்னையை காஞ்சி மஹாபெரியவரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என நம்பி காஞ்சிபுரம் வந்தாள். சுவாமிகளின் முன் நின்ற போது, 'ஏதோ சொல்ல நினைக்கிறியே...சொல்லுமா' என்றார் மஹாபெரியவர். ''ரொம்பக் கஷ்டப்படறேன் சாமி. குடும்பச் செலவுக்கு பணமே இல்லை. ஒவ்வொரு நாளும் விடிஞ்சா பொழுது எப்படி போகுமோன்னு கவலை. இரண்டு புள்ளங்களக் குடுத்துட்டு ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி எம் புருசன் போயிட்டாரு. அவரு வேலை பாத்த ஆபீசிலேர்ந்து பணம் வர வேண்டியது நிக்குது, இதோ வரும் அதோ வரும்னு சொல்றாங்களே தவிர இன்னிக்கு வரை வந்தபாடில்லை. ஒன்றரை லட்சம் வரணும் சாமி. அது வந்தா குடும்பத்தைக் கொஞ்சம் சமாளிச்சுடுவேன், அதிகாரிங்களை எல்லாம் போய்ப் பாத்தேன். நிலைமையைச் சொல்லி முறையிட்டேன். கையில இருந்த கொஞ்சப் பணமும் கரைஞ்சிடுச்சு. ஆபிசுல இருந்து பணம் வந்தாத்தான் குடும்பத்தைச் சமாளிக்க முடியும். சாமிதான் சிக்கல் தீர வழி காட்டணும்'' என வேண்டினாள். ''கவலைப்படாதே. நல்லதே நடக்கும்'' என்று ஆசியளித்தார் காஞ்சி மஹாபெரியவர், மடத்து சிப்பந்தியை அழைத்து அவர்களுக்கு சாப்பாடு தரச் சொன்னார். வயிறாரச் சாப்பிட்டனர். மறுபடியும் சுவாமிகளை வணங்கி நின்றாள். மடத்துச் சிப்பந்தியிடம் ஊருக்குப் போக 25 ரூபாய் கொடுக்கச் சொன்னார் சுவாமிகள்.அதை வாங்கிக் கொண்டு ஊர் திரும்பினாள். அங்கே அவளுக்கு பதிவுத் தபால் காத்திருந்தது. அவள் கணவன் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பிராவிடென்ட் பண்ட், கிராஜுவிட்டி எல்லாம் சேர்த்து ஒன்றரை லட்சத்துக்கு காசோலை அனுப்பியிருந்தனர், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மறுநாளே சுவாமிகளை தரிசிக்க வந்தாள். இருபத்தைந்து ரூபாயை பணிவுடன் வைத்தாள். காசோலை வந்த விபரத்தை மகிழ்ச்சியுடன் சொன்னாள்.''25 ரூபாய் கொடுத்த போது திருப்பித் தரவேண்டும் என்று நான் சொல்லவில்லையே... இந்த ரூபா வந்தப்புறம் தானே உனக்கு ஒன்றரை லட்சம் வந்தது. அதனால இதுவும் உங்கிட்டயே இருக்கட்டும்'' என்றார் மஹாபெரியவர். சுவாமிகளை வணங்கி பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். மஹாபெரியவர் அங்கிருந்தவர்களிடம், ''பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவளிடம் யாரும் சொல்லவில்லை, ஆனாலும் தனக்குரிய பணம் வந்ததும் தான் வாங்கியதைத் திரும்பத் தர வந்தாளே...இவளைப் போன்றவர்களால்தான் உலகில் தர்மநெறி வாழ்கிறது'' என்றார்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்திருப்பூர் கிருஷ்ணன்thiruppurkrishnan@hotmail.com